மக்கள் குரல் – 05.01.2024
பக்கம்: 7
* அறிவியல் தமிழை அறிமுகம் செய்தவர் எழுத்தாளர் சுஜாதா
* கிருபானந்த வாரியார் உடல் முழுவதும் திருநீறு பூசியது ஏன்?
மதுரையில் 7 நாள் ‘இளந்தமிழர் இலக்கியப் பட்டறை’:
அறிஞர்கள் வெளியிட்ட ருசிகரத் தகவல்கள்
தொன்மையான வரலாற்றைக் கொண்டது, சுமார் 2500 ஆண்டுகள் பழமையானது, தமிழ் மொழி அறிஞர்களைக் கொண்டு மூன்றாம் தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்டு, தமிழை வளர்த்த பெருமையுடைய நகரம் மதுரை மாநகரில்,
‘2023 2024ம் ஆண்டுக்கான இளந்தமிழர் இலக்கியப் பட்டறை’ 7 நாள் நிகழ்வு தனிப்பெரும் வெற்றி கண்டது என்றால் அது மிகையல்ல என்று மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறது தமிழ் வளர்ச்சித் துறை.
பல்வேறு தலைப்புகள் தமிழகத்தின் 38 மாவட்டங்களிலிருந்து பல நூறு மாணவர்கள், 43 மூதறிஞர்கள் தமிழ்ப் பேராசிரியர்கள் முகாமிட்டு, ஆற்றிய உரையில் செவியில் விழுந்தன ருசிகரத் தகவல்கள் பலப்பல.
சுருங்கச் சொல்லி விளங்க வைத்த தமிழ்ப் பேராசிரியர்களின் அந்த உரை, எளிய நடைப் பேச்சில் ஒவ்வொரு கருத்திலும் சொற்சுவையோடு பொருட்சுவை, மதுரை உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாக அரங்கில் நிகழ்வு, உலகத் தமிழ்ச் சங்கத்தின் ஆய்வு வளமையர் முனைவர் ஜ.ஜான்சிராணி வரவேற்புரையாற்ற, தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ஒளவை ந.அருள் தலைமையுரையுடன் குதூகல ஆரம்பம்.
“இளந்தமிழர் இலக்கியப் பட்டறை நிகழ்வு – தமிழ் வளர்ச்சித் துறையால் முதல் முதலில் திருவரங்கத்தில் தொடங்கப்பட்டது.
இது பத்தாவது பட்டறை பேராசிரியர்களின் பொழிவு மாணவர்கள் மனதில் கல்வெட்டுப் போல் பதியும்.
இப்படியான உரைகளை கல்லூரிகளில் கேட்பதும் அரிது.
கல்லூரியில் பெறாத கருத்துகளைப் பெற இருக்கிறீர்கள்’
என்று முன்னுரை எழுதினார் ஔவை அருள்.
தனிநாயக அடிகளாரிடம், “எல்லா மொழிகளை விட தமிழை சிறந்த மொழியாக எப்படி நினைக்கிறீர்கள்?” என வினா எழுப்பிய போது, “தெய்வீக மொழி” என்றால் அது தமிழ் மொழிதான் என்று குறிப்பிட்டார்.
அப்படிப்பட்ட தமிழ்மொழியின் சிறப்பை இந்த இளந்தமிழர் இலக்கியப் பட்டறை நிகழ்வு உணர்த்தும்” என்று நம்பிக்கையையும் வெளியிட்டார் ஔவை அருள்.
மனது – தேர்ப்பாகன் : திருமூலர்
“மனதினை என்ற தலைப்பில் உறுதிசெய்?” முதுமுனைவர் வெ. இறையன்பு சிறப்புரையாற்றினார்.
அவர் தம் உரையில் “மனம் தூய்மையாக இருக்கவேண்டும் என்றார் வள்ளுவர்.
மனதில் உறுதி வேண்டும் என்றார் பாரதியார். மனத்தை தேர்ப்பாகன் என்று குறிப்பிடுகிறார் திருமூலர்.
இந்த மனம் ஆகிய பாகன் உடலாகிய தேரைச் செலுத்துகிறது.
நாம் அடைகின்ற சுகங்கள் மாயை என்று உணர்ந்தால் உண்மை எது என உணரலாம்” என்றார்.
மனத்தினை அடக்க 10 வழிமுறைகள்:
1. ஆரோக்கியமான உணவு, 2.உயர்ந்த மனநிலை,
3. அழகிய எண்ணம்,
4. அறிவார்ந்த தேடல்,
5. குறித்த நேரம்,
6. தெளிவான அட்டவணை,
7. நல்ல நண்பர்கள்,
8. நம்பிக்கை மனம்,
9. உயர்ந்த இலட்சியம்,
10. கட்டுப்பாடு.
இத்தகைய பத்து வழிமுறைகளை இன்றைய இளைய தலைமுறையினர் பின்பற்ற வேண்டும்’ என்று இறையன்பு அறிவுறுத்தினார்.
“இயல் இசை அன்றும் இன்றும் ”என்ற தலைப்பில் முனைவர் கோ ப நல்லசிவம் பேசுகையில்,
‘பண்பாடுவதால் வருவது பண்பாடு.
இசை மனிதனை ஒழுங்குபடுத்துகிறது.
ஓசை ஒழுங்கு படும்போது அது இசையாகிறது.
இசை ஒழுங்குபடும்போது பண் என்று அழைக்கப்படுகிறது.
தமிழில் 11,441 பண்கள் உள்ளன.
சிந்துக்கு தந்தை என பாரதியாருக்கு பெயர் வாங்கி கொடுத்ததுக் காவடிச்சிந்து” என்று குறிப்பிட்டார்.
“நவீன இலக்கியம்” என்ற தலைப்பில் சுரேஷ்குமார் இந்திரஜித் பேசுகையில்,
“தமிழில் முதல் நாவல் 1879 ம் ஆண்டு தோன்றிய பிரதாப முதலியார் சரித்திரம் ஆகும்.
1915 ல் தோன்றிய வ உ சு ஐயரின் ஒரு குளத்தங்கரை அரசமரம் தமிழின் முதல் சிறுகதை ஆகும்.
ஜப்பானியர்களிடமிருந்து தோன்றியவையே ஜென் கதைகள்” என்று குறிப்பிட்டார்.
2000க்குப் பிறகு ‘கூகுள்’ தேடுபொறி
“அயலகத் தமிழ் தலைப்பில் ” என்னும் மலேசியாவின் பெ. ராஜேந்திரன் பேசுகையில்,”
இனி யாரும் பிறந்து வந்து தமிழைக் காக்க வேண்டும் என்று அவசியமில்லை, 3000ம் ஆண்டு காலத்திற்கு முற்பட்ட தமிழ் மொழியானது, அழிக்க வேண்டும் என்று நினைத்தவர்களை எல்லாம் மீறி தன்னைத் தானே புதுப்பித்துக் கொண்டது” என்று குறிப்பிட்டார்.
“களம் காணும் கணினித் தமிழ்” என்னும் தலைப்பில் நீரை மகேந்திரன் பேசுகையில்,
“முத்தமிழ் அறிஞர் காலத்தில் தான் தமிழ் மொழி செம்மொழியாகவும் கணினி மொழி தமிழ் மொழியாகவும் உருப்பெற்றது.
யுனிகோடு எழுத்துரு கொண்டுவரப்பட்டது.
2000க்குப் பிறகு கூகுள் தேடு பொறி உருவாக்கப்பட்டது என்று குறிப்பிட்டார்.
“ஊடகத்தில் தமிழ் காப்போம்” என்னும் தலைப்பில் நாகப்பன் பேசுகையில்,
“மொழி கொடுக்கும் தன்னம்பிக்கையை வேறு எதுவும் கொடுப்பதில்லை.
வாழ்க்கை வளம் பெற தமிழை வளர்ப்போம் ”என்றார்.
ஆங்கிலக் கலப்பால் தேயும் தமிழ்…
இரண்டாம் நாள் நிகழ்வில் மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், செய்தித்துறை அமைச்சர் மு பெ சுவாமிநாதன் பேருரை ஆற்றினார்கள்.
“ஆங்கிலக் கலப்பால் தமிழ் மொழி மெல்ல மெல்ல தேய்ந்து வருகிறது.
ஆனால் அரங்கில் திரண்டிருக்கும் பார்வையாளர்களைப் பார்க்கும்போது தமிழ் வளரும் என்று நம்பிக்கை மலர்ந்திருக்கிறது.
கீழடி, கொடுமணல் நமது பெருமையினை பறைசாற்றும் களம் ஆகும்.
எந்த மொழியும் பெறாத இலக்கியச் செழுமை உடையது தமிழ் மொழி” என்றார் அமைச்சர்.
மூன்றாம் நாள் நிகழ்வில் “சங்கத் தமிழ் சுட்டும் விழுமியங்கள்” என்னும் தலைப்பில் இரா. மாது பேசுகையில் ‘
அன்பு, அருள், தொண்டு, தியாகம், மனச்செம்மை, உயர்ந்த பண்பு, சான்றாண்மை, நல்லவை பாராட்டுதல், தீயவை விலகல் ஆகியவை தான் விழுமியம்” என்றார்.
“சொல்வது தெளிந்து சொல்” என்னும் தலைப்பில் முனைவர் கு. ஞானசம்பந்தம்,
“நாம் அறிந்த ஒன்றை நாமே வியக்கும் வண்ணம் நயத்துடன் சொல்வது தான் தெளிந்து சொல்லுதல்.
சொல்லும் முறை தான் பேச்சின் வெற்றி அறிவியல் தமிழை நமக்கு அறிமுகம் செய்தவர் எழுத்தாளர் சுஜாதா.
எனது கதைகள் மூலம் அறிவியல் தமிழைப் புகட்டினார்.
சொர்க்கத் தீவு என்ற கதை தான் அறிவியல் தமிழில் முதல் கதை ஆகும்” என்றார்.
நான்காம் நாள் நிகழ்வில்,“பெரிதினும் பெரிது கேள்” என்னும் தலைப்பில் இராம்குமார் சிங்காரம்,
“மாணவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றி பெற அதிக மதிப்பெண் எடுத்தல், ஆங்கிலம் கற்றல், மூன்றாவது மொழி கற்றல், கூடுதல் பாடத்திட்ட படிப்புகள், போட்டித் தேர்வுகள், பாடத்திட்டங்களை படித்தல் ஆகிய ஏழு உத்திகளை வகுத்துக் கூறினார்.
ஐந்தாம் நாள் நிகழ்வில்,” மொழிபெயர்ப்பின் தேவை என்னும் தலைப்பில் பாலசுப்பிரமணியன்,
“மொழிபெயர்ப்பு இன்றைய காலகட்டத்தில் தேவையான ஒன்று. திருக்குறளை மொழிபெயர்ப்பு செய்யவில்லை என்றால் உலகப் பொதுமறையான திருக்குறளின் பெருமை அறிந்திருக்க இருக்கும்.
உலகமெல்லாம் முடியாமல் போய் அது போலத்தான் கம்பராமாயணமும். அதில் உள்ள ஒருமைப்பாட்டையும் சிறப்பையும் பிற மொழிகளுக்கு கொண்டு செல்ல மொழிபெயர்ப்பு மிக அவசியம்” என்றார்
“கம்பன் கவிதையின் காதலன்” என்னும் தலைப்பில் கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா,
“ஒரு வரி உவமையில் வாழ்வியல் சிந்தனைகளை விளக்கிச் சொன்னவன் கம்பன்” என்றார்.
“தடம் பதித்த தமிழ்ச் சான்றோர் ”என்றதலைப்பில் நகைச்சுவை நாவலர் சண்முக வடிவேல்,
“நமஸ்காரம் என்ற சொல்லை வணக்கம் என்றும் பிரசங்கம் என்ற சொல்லை சொற்பொழிவு என்றும் மாற்றியவர் மறைமலை அடிகள்” என்றார்.
ஆறாம் நாள் நிகழ்வில், “எண்ணுவது உயர்வு” என்னும் தலைப்பில் நீதிஅரசர் முகமது ஜியாவுதீன்,
“இலக்கியத்தில் அக்கறை உள்ளவர்கள் நீதிமன்றத்தில் பணியில் ஏனென்றால் அமர வேண்டும்.
இலக்கியம் படித்தவர்களுக்கு மனது லேசானதாக இருக்கும். என்னை நான் இழக்கவே இல்லை வணங்குவதற்காக உயரும் இரண்டு கரங்களை விட, உதவுவதற்காக நீளும் கரங்கள் உயர்வானது” என்றார்
“குன்றென நிமிர்” என்னும் தலைப்பில் அ எல்லாவற்றையும் க ராஜாராமன்”
தெரிந்து வைத்திருப்பது அறிவு அல்ல.
ஏதேனும் ஒன்றை தெளிந்து வைத்திருப்பது அறிவு என்கிறான் பாரதி.
நாம் குன்றென நிமிர அச்சம் தவிர்த்தல், அறத்துணிவு, நேர்மை ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.
இறுதி ஏழாம் நாள் நிகழ்வில், “நாடகம் என்னும் வடிவம்” தலைப்பில் கலை முனைவர் கி பார்த்திபராஜா,”
நேரடியாக நடிக்கப்படுகிற நிகழ் கலை வடிவம்தான் நாடகம்.
அடிச்சொல் நடி என்பதாகும். இயல் இசை மெய்ப்பாடு தான் முதல் முதலாக தோன்றிய கலை வடிவம் நாடகம்” என்றார்.
‘மக்கள் திலகத்தின் மாண்புகள்’ என்னும் தலைப்பில் தேனி ராஜராஜன் உரையாற்றி, பொன்மனச்செம்மலின் சிறப்புக்களைப் பட்டியலிட்டார்.
39 தலா தமிழ் .10,000 வழங்கப்பட்டது. அறிஞர்களுக்கு காசோலை வழங்கப்பட்டது.
“தெய்வம் நீ என்று உணர்” என்னும் தலைப்பில் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன்,
“கிருபானந்த வாரியாரிடம் ஒருவர் திருநீறை ஏன் உடம்பெங்கும் பூசுகிறீர்கள்? கிண்டலாகக் கேட்டார் ஒருவர்.
அதற்கு அவர் ‘நல்ல’ சுவற்றுக்குத்தான் சுண்ணாம்பு அடிப்பார்கள் குட்டிச்சுவருக்கு அல்ல” என்று வேடிக்கையாக பதில் சொன்னார்
இந்து சமயத்தில் கடவுளை விட குரு பெரியவர்” என்றார்.
ஒவ்வொரு நாள் முடிவிலும் கலைநிகழ்ச்சிகள். பேராசிரியர்களும், பங்கு பெற்ற மாணவர்ளும் நிறைவு நாளில் முனைவர் ஔவை அருள் தலைமையிலான தமிழ் வளர்ச்சித் துறையிடம் எழுப்பிய ஆனந்தக் கேள்வி : மீண்டும் சந்திப்பு எப்போது, சிந்தனைக்கு விருந்தும் எப்போது? அந்த ஆறே ஆறு வார்த்தைகள் தான் ஏழு நாள் பட்டறையின் கை மேல் பலன் என்பதை எட்டு திக்குகளிலும் ஒலிக்க வைத்தது.
தொல்காப்பிய காலத்தில் கடவுள் இல்லை; வழிபாடு
“புறநானூறு சொல்லும் செய்தி” என்னும் தலைப்பில் கம்பம் செல்வேந்திரன் தொல்காப்பிய காலத்தில் கடவுள் என்ற இல்லை. ஆனால் இறை (இயற்கை) வழிபாடு இருந்தது.
இறை- இனம் -தமிழ்- திசை -நிலம் -சுவை -சுரம் -திசை- ரசம்.
இதுதான் தமிழர்களின் வாழ்க்கையாக இருந்தது என்றார்.
“நடிகர் திலகமும் செந்தமிழும் என்ற தலைப்பில் முனைவர் காவே சே மருதுமோகன் பேசுகையில்
தமிழுக்கு சிறப்பே சிறப்பே “ழ” கரம் தான். அதை திரைப்படத்தில் சரியாக உச்சரித்தவர் திலகம் சிவாஜி கணேசன் தான்” என்றார்.
தமிழில் பேசினால் நம்பிக்கை பிறக்கும்
“மருந்தாகும் தமிழ்” என்னும் தலைப்பில் நரம்பியல் மருத்துவர் ஔவை மெய்கண்டான் ”
தமிழில் நோயாளிகளிடம் பேசும் போது அவர்களுக்கு நம்பிக்கை பிறக்கிறது.
மரம் என்ற சொல்லில் இருந்து தான் மருந்து என்ற சொல் வந்தது
நம்பிக்கையோடு நாம் எது செய்தாலும் நோய் குணமாகும்.
மருந்து என்பது மனம் சார்ந்தது” என்றார்.

Add a Comment