அய்யன்
திருவள்ளுவர் திருநாள்
“ஈரடியில் பொய்யாமொழி தந்த
அய்யன் திருவள்ளுவர்
இனமானத் தமிழ்நாட்டின் முகவரி
– மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர்
தமிழ்நாடு அரசின் சார்பில்
அய்யன் திருவள்ளுவர்
திருவுருவச் சிலைக்கு
மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள்,
மாண்புமிகு மேயர், நாடாளுமன்ற,
சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர்,
உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்,
சீர்மிகு பெருமக்கள் மலர் வணக்க மரியாதை செலுத்துவார்கள்.
நாள்: 16.1.2024, செவ்வாய்க்கிழமை,
நேரம் : காலை 10.00 மணி
இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை
செய்திக்குறிப்பு
கடந்த 2055 ஆண்டுச் சிந்தனை வளத்திற்கு ஊற்றுக் கண்ணாக விளங்கி இனி வரும் நூற்றாண்டுகளின் சிந்தனைக் களத்திற்குத் தடம் அமைத்துத் தந்துள்ளது திருக்குறள்.
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட நம் தமிழ்நாடு அதனால்தான் திருக்குறள் உலகப்பொதுமறை எனப் போற்றப்படுகிறது.
வள்ளுவத்தின் மாண்பு சொல்லிலடங்காது.
இதன் சிறப்பு கருதியே இந்திய மொழிகளிலும், உலக மொழிகளிலும் திருக்குறளைத் தம் வயமாக்கிக் கொண்டுள்ளன.
வள்ளுவத்தில் கட்டுக்கடங்காத கற்பனை இல்லை ; பொய்யும் புரட்டுமில்லை ; மனிதன் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய வழிமுறைகளையே வள்ளுவர் வகுத்துரைக்கிறார்.
வள்ளுவம் ஒரு வாழ்வியல் நூல்.
உலகத்தின் எந்த மூலையில் உள்ள எவரும் பின்பற்றத்தக்க கருத்துக் களஞ்சியம்.
ஆயிரக்கணக்கான வழிநூல்கள் தோன்ற இடம் தந்து, அள்ள அள்ளக் குறையாத பெட்டகமாய்த் திகழ்வது திருக்குறளின் தனிச்சிறப்பு.
விடுதலைக்கு முன்னரே தந்தை பெரியார் குறட்பாவைத் தமிழர் தம் அடையாளச் சின்னமாக எடுத்துக் காட்டினார்.
விடுதலைக்குப்பின்னர் பேரறிஞர் அண்ணா திருக்குறளைத் திருப்பணியாகவே கொண்டு எழுச்சியுறச் செய்தார்.
குறளோவியம் கண்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சொல்லிலும் கல்லிலும் திருவள்ளுவரை வடித்துக் காட்டித் திருவள்ளுவருக்கு என்றும் அழியாத சின்னத்தை உருவாக்கியதோடு
தமிழகத்தின் தலைநகரில் கோட்டம் அமைத்துத் தமிழ் மக்களின் அன்புப் பெருக்கினை வெளிப்படுத்தினார்.
ஏனைய தமிழ் நூல்களிற் காணப்படாத சிறப்பியல்புகள் திருக்குறளுக்கு உண்டு.
நூற்பயனாகிய அறம், பொருள், இன்பம், வீடு என்பவற்றைத் தெளிவாகக் கூறிய நூல்களுள் குறளுக்கு ஈடானது வேறு இல்லை.
அனைத்துத் தமிழர்களாலும் அறிந்து போற்றப்படுபவராகவும் தமிழர்களின் பண்பாட்டு செறிவின் அடையாளமாகவும் கருத்துக் கருவூலமாகவும் திகழும் திருவள்ளுவரின் பெருமையினை உலகுக்குப் பாறைசாற்றும் வகையில் தைத்திங்கள் இரண்டாம் நாளில் தமிழ்நாடு அரசின் சார்பாக ஆண்டுதோறும் திருவள்ளுவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்துச் சிறப்பு செய்யப்படுகிறது.
இவ்வகையில் இவ்வாண்டு திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு தைத் திங்கள் இரண்டாம் நாளன்று (16.01.2024) செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் வணக்கம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அந்நிகழச்சியில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், சீர் பெருமக்கள், தமிழறிஞர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
வாழ்க வள்ளுவர்!
வளர்க குறள் நெறி !
தமிழ் வளர்ச்சி இயக்குநர்

Add a Comment