முத்தமிழ்க்காவலர் இல்லத்தின் இந்திப்புதையல்
சிவந்த மேனி,
சிரித்த முகம், இனிய பேச்சு
இவையே எங்கள் பெற்றோரின் மனம் கவர்ந்த
இனிய நண்பர் திரு. கண்ணன் அவர்களின் அடையாளங்கள்.
முத்தமிழ்க்காவலரின் மனங் கவர்ந்த மருகர்,
அக்கா மணிமேகலையின் வெற்றிகளுக்கு ஆணிவேர்,
குடும்பத்தை போற்றி வளர்த்தவர்.
தன் பிள்ளைகளின் வெற்றிகளைத்
தான் பெற்றவையென மகிழ்ந்து போற்றிய பெருந்தகை
இந்தி மொழியில் செம்மாந்த புலமை கொண்டு
திருக்குறள் மட்டுமல்லாது, செம்மொழித் தமிழின்
அருங்கருத்துகளை இந்தியில் மொழிபெயர்த்த
இவரது பெருந்திறத்தை நாடே நன்கறியும்.
இணையராக
பல்லாயிரக்கணக்கான இலக்கியக் கூட்டங்களுக்கும்
திருமண நிகழ்வுகளுக்கும் வருகை புரிவதும்
விழா நாயகர்களுக்கு அருகிலிருந்து
அரும்பணியாற்றுவதும்
கண்கொள்ளாக் காட்சிகளாகும்…
எங்கள் இல்லத்தில் நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளுக்கும்
வருகை புரிந்ததும் பெற்றோர்களுடன் சிரித்து மகிழ்ந்ததும்
எங்கள் நெஞ்சில் நிழலாடுகிறது …
அரிசியை மட்டும் விரும்பும் அப்பாவுக்குக்
கோதுமையின் சிறப்பினைச் சொல்லிச்
செய்து காட்டிய பெரும் பங்கு இவரைச் சாரும்.
விஜிபி அண்ணாச்சியிடம் அப்பா அடிக்கடி சொல்வார்….
தலைநகர் தில்லி சென்றால் நம்முடன் எப்பொழுதும் கண்ணன் இருக்க வேண்டும்…
அப்பொழுதுதான் நம்முடைய தமிழ் எண்ணங்களை
இந்தியில் உடனுக்குடன் அவர் அங்கு சொல்லி
நம்மை வழிகாட்டுவார் என்று…
உலகோர் போற்றும் வண்ணம் அவருடைய தலைமுறையினரை
வளர்த்து உயர்த்திய திரு கண்ணன் அவர்கள்
அருளின் மனைவியையும் குடும்பத்தினரையும்
நன்கறிந்த உறவுச்செம்மல் ஆவார்.
கண்ணன் அவர்களின்
மறைவு தாளவொண்ணாதது….
துயருடன்
ஒளவை குடும்பம்

Add a Comment