POST: 2024-01-22T09:59:00+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 196

விளம்பர வீதி

விளம்பரங்கள் – விழிகளைக் கவரும் விண்ணப்பங்கள்!

முனைவர் ஔவை அருள்

விளம்பரமில்லாமல் எதுவும் விலை போகாது என்பது இன்றைய வேத மொழியாகும்.

அங்கிங்கெனாதபடி, அனைத்துத் துறைகளையும் வளைத்து வைத்திருக்கும் அடிப்படைக் கலையாக விளம்பரம் பெருகி வருகிறது.

விளம்பர நிறுவனங்களின் வீதியாக விளங்கும் அமெரிக்காவிலுள்ள மாடிசன் அவென்யு (Madison Avenue) ஆர்வம் (Desire) என்னும் பெயரிலேயே ஒரு சாலைக்கு பெயர் சூட்டியிருக்கிறார்கள்,

எதற்கு எது விளம்பரம் என்று பட்டியல் போட்டால் நாம் புதுக்கவிதைகளையே புனைய வேண்டும்.

உதட்டுக்குப் புன்னகை,
உடலழகுக்குப் பொன்னகை,
நெற்றிக்குப் பொட்டு,
நிறமான ஆடைக்குப் பட்டு,
வாலிபத்திற்கு அரும்பு மீசை
வளரிளமைக்குப் பொங்கும் ஆசை

என்றெல்லாம் பலவாறாக அடுக்கிக்கொண்டு போகலாம்.

மலர்களின் விளம்பரத்தால்தான் வண்டுகள் தேன் குடிக்கிறது.

தேன் குடிப்பதனால்தான் அதன் மரபும் செழிக்கிறது.

எனவே, விளம்பரம் விற்பனைக்கு மட்டுமல்ல, பொருளாதார எழுச்சிக்கும், சமூகத்தின் புது மலர்ச்சிக்கும், பொதுவாகவே நாட்டின் நல்வாழ்வுக்கும் பெரிதும் பயன்படுகிறது.

நான் ஐந்து வயது சிறுவனாக இருந்தபோது வீதியில் ஒரு சிறுவர்களின் ஊர்வலம் போனது.

அந்த ஊர்வலத்தில்,

கோபாலா!
ஏன் சார்?
எங்கே போகிறாய்?
கடைக்குப் போகிறேன்
எந்தக் கடைக்கு?
பெரிய கடைக்கு
என்ன வாங்க?
பீடி வாங்க
என்ன பீடி?
கரீம் பீடி

ஆகவே, சிறுவர்களை மூலதனமாக வைத்து விளம்பரம் வீதி முழக்கமாக இருந்த காலமுண்டு.

பீயர்ஸ் சோப்பு (Pears Soap) முதன்முதலாக அறிமுகமானபோது எல்லோர் வீட்டிற்கும் இலவசமாக வழங்கி வந்தார்கள்,

விமானத்திலிருந்தும் பீயர்ஸ் சோப்பு விளம்பர துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

1940களில் தொடங்கி அது வழக்கமாகி, எங்கே பீயர்ஸ் சோப் கிடைக்கிறது என்று தேடி வர ஆரம்பித்தார்கள் மக்கள்.

செட்டியார் முறுக்கா? சரக்கு முறுக்கா? என்றெல்லாம் கேட்டு பொருள்களாக விற்பனை, பொருள்களோடு மட்டுமல்ல உற்பத்தி சாலையையும் இணைந்ததாக மாறியது.

எனவே, கம்பெனியின் பெயர் சொன்னால் போதும் பொருள்களின் தரம் தானாகவே புலப்படும் என்ற காலம் வளர்ந்தது.

கிரிக்கெட் ஆட்டம் உலக நாடுகள் முழுவதிலும் உன்னதமான ஆட்டமாக பரவியதாலும் ஒழுங்குக்கும் நேர்மைக்கும் உதாரணமாக திகழ்ந்ததாலும் “இது நேர்மையானது அல்ல” என்று சொல்ல “திஸ் இஸ் நாட் கிரிக்கெட்” (This is not Cricket) என்று ஆங்கிலத்தில் ஒரு தொடரே பிறந்தது.

விளம்பரம் பொய்யானது அல்ல;
இல்லாதது அல்ல:
இருப்பதின் சிறப்பை அழகாக
எடுத்துக்காட்டுவது!
விளம்பரத்தால் ஏமாற்ற முடியாது!
ஏமாற்றவும் கூடாது!

உண்மையும், பொய்யும் ஒரே ஊரில் வாழ்ந்த தோழிகள். ஊர் ஓரத்தில் இருந்த ஓடையில் குளிப்பதற்காக உண்மையும் பொய்யும் ஒன்றாகப் போனார்கள், கோணல் புத்தி படைத்த பொய், வேக வேகமாகக் குளித்துவிட்டு உண்மையின் உடைகளை அணிந்து கொண்டு வெளியே வந்தாள்.

உண்மையோ மெல்லக் குளித்து எழுந்தபோது கரையோரத்தில் பொய்யின் உடைதான் இருந்தது.

பொய்யின் ஆடையை நான் கட்டிக் கொள்வதா? என்று நாணப்பட்ட உண்மை, ஆடையில்லாமலேயே நடந்து வந்தாள்.

விளம்பர சாதனங்களின் தொழில் நுணுக்கத்தைச் சொல்வதற்காக (Naked Truth) என்று ஓர் ஆங்கிலத் தொடரே பிறந்தது.

எனவே, விளம்பரம் என்பது கலைகளின் காவியம், ஓவியம், பொருள்களின் உண்மை , அறிவு நுணுக்கம் முதலிய அனைத்துக் கலைகளும் ஒன்றாகத் திரண்டு இருக்கிற கலைகளின் கதம்பம் என்று குறிப்பிட விரும்புகிறேன்.

இன்று, விளம்பர நிறுவனத்தில் ஓவியனைப் போலவே, ஒரு மருத்துவரை, ஒரு சிற்பியை, ஒரு உளவியல் மருத்துவரை அமர்த்துகிற அளவிற்கு விளம்பர நிறுவனங்கள் பல நிலைகளில், அறிவார்ந்த நிறுவனங்களால் ஒன்றுக்குப் பத்தாக ஓங்கி வளர்கின்றன.

பொருள்களையும் தாண்டி, வணிகத்தையும் தாண்டி, அரசியல் திட்டங்கள் தீட்டக்கூட விளம்பர உலகத்தின் பங்கு பெரிதாகவுள்ளது.

பல நேரங்களில் கோயபல்ஸ்கள் (GOEBBELS), கோடிப்புளுகர்கள் வெற்றி பெறுவதற்கு கூட விளம்பரம் பயன்பட்டிருக்கிறது.

தொழில் நுணுக்கம் சார்ந்த பெருந்துறையாக விளம்பர நிறுவனங்கள் மிகப்பெரிய அளவுக்கு வளர்ந்து வருகின்றன.

எல்லா புதுவிதமான கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் அமெரிக்காவை நாம் எப்படி பலவற்றுக்குத் தாயகம் என்று சொல்லுகிறோமோ அதுபோல் விளம்பர வினோதங்களுக்கெல்லாம்கூட அமெரிக்காதான் தாயகம் என்று சொல்வது சரியாகும்.

அமெரிக்க நாட்டில் விளம்பர வினோதங்கள் ஏராளமாக இருப்பது மட்டுமில்லாமல் விளம்பரங்களினாலேயே எப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படுகின்றன என்பதைப் பற்றியெல்லாம் மிகப்பெரிய ஆராய்ச்சிகளே செய்து கொண்டிருக்கிறார்கள்.

விளம்பரத்தில் வரும் வாசகம், விளம்பரத்தினுடைய வனப்பு, விளம்பரத்தினுடைய அளவு, விளம்பரத்தினுடைய நிறம், மக்கள் மனங்களை அது எவ்வாறு கவரும், எப்படிப்பட்ட உண்மைகளை எந்தெந்த வகையில் எடுத்துச் சொல்லலாம் என்பதைப் போல கிட்டதட்ட ஒரு மொழியியல் சார்ந்த துறைகளெல்லாம் எப்படி அறிவியல் நுணுக்கங்களாக மாறிவிட்டனவோ அதுபோல விளம்பரம் என்பதும் மிகப்பெரிய மாற்றங்களையும் நுணுக்கங்களையும் பல்வேறு கலை அழகுகளையும் நாள்தோறும் வளர்த்துக் கொண்டே வருகிறது.

ஒரு டாலர் விளம்பரத்திற்காக செலவு செய்கிறோம் என்று சொன்னால் எழுபது டாலர் அந்தப் பொருளினால் விற்பனை வளருமானால்தான் விளம்பரம் வெற்றியடைகிறது என்று பொருந்தும் என்று கூட அமெரிக்க நாட்டில் சொல்வார்கள்.

எனவே, நூற்றுக்கு நூறு மடங்கு அல்லது போட்ட முதலுக்குப் பத்து மடங்கு என்ற அளவுக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தருவதற்குத்தான் இப்பொழுது விளம்பரங்கள் பயனுடையதாக மாறியிருக்கின்றன.

முன்பெல்லாம் தனியார் நிறுவனங்கள் மட்டும்தான் தங்கள் பொருள்களை விளம்பரத்தின் மூலம் விற்பனை செய்யும்.

ஆனால், பொது நிறுவனங்கள் அப்படி செய்துகொள்ள முடியாது என்று நினைத்த காலம் ஒன்று உண்டு.

இப்பொழுதோ அரசே தன்னுடைய சாதனைகள் பற்றியும், தன்னுடைய திட்டங்களைப் பற்றியும் பக்கம் பக்கமாக விளம்பரங்களை வெளியிடும் பழக்கத்தை நாம் எங்கும் காண்கிறோம்.

தமிழ் நாட்டைப் பொறுத்த அளவில், விளம்பரக் கலை என்பது இன்னும் கூட ஒரு வளர்பிறையாக இருக்கிறது.

இருப்பினும், உலக நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மிகப் பெரிய சினிமா சுவரொட்டிகளையும், அதேபோல சினிமா சுவரொட்டிகளை ஆங்காங்கே நாம் தட்டிகளிலே தொங்க விடும் காட்சிகளும்,
கட் அவுட்களும் இன்றைக்கும் தமிழ்நாட்டில் இருப்பதுபோல வேறு எந்த நாட்டிலும் இல்லை.

ஒரு முறை சிங்கப்பூரிலிருந்து எடுத்த ஒரு கட்டுரையில் அதிகமான சினிமா விளம்பரங்களைப் பார்க்க வேண்டும் என்று சொன்னால் தமிழ்நாட்டுக்குத்தான் போய் நீங்கள் பார்க்க வேண்டும் என்று சொல்லி தமிழ்நாட்டுப் படங்கள் பற்றி ஆங்காங்கே ஒட்டப்படிருந்த சுவரொட்டிகளைக் காட்டி, விளம்பரம், சினிமாவுக்கு மட்டும்தான் வளர்ந்து இருக்கிறது என்றெல்லாம் எழுதியிருந்ததை நாம் இப்பொழுதும் நினைவு கூறலாம்.

எனவே, எவ்வளவு பெரிய நுணுக்கங்களையெல்லாம் எப்படி கொண்டிருக்கிறது என்பதற்கு பலவிதமான காட்சிகளை எல்லாம் நாம் காண இருக்கிறோம்.

இந்த விளம்பர நிறுவனங்கள் எல்லாம் எப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது கூட ஒரு பொய் புதிராகவே நமக்குத் தெரிகிறது.

ஒரு கடிகாரத்தை விற்க வேண்டும் என்பதற்காக விளம்பர நிறுவனத்தை ஒருவன் அணுகினான், அப்பொழுது 25 வயது இளைஞன் இருந்து கொண்டு விளம்பர நிறுவனத்தில் நாங்கள் இதை விளம்பரம் செய்யலாமா என்றான்.

அதற்கு அந்த இளைஞன் தொழில் நுணுக்கப்படி இந்தப் பொருளை நாங்கள் எங்களுக்குரிய வகையிலே மாற்றிக் கொள்வதற்கு அனுமதி தர வேண்டும் என்றும் கேட்டான்.

வடிவமைப்பை (Pattern) மட்டும் மாற்றாமல் நீங்கள் எந்த நுணுக்கத்தையும் மாற்றிக் கொள்ளலாம் என்று சொன்னபோது, அந்த கைக்கடிகாரத்தையெல்லாம் பார்த்து ஐந்து வேளை தொழுகை நேரங்களிலெல்லாம் அலாரம் அடிப்பதற்கு ஏற்ற வகையில் அந்த கடிகாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது அந்த விளம்பர நிறுவனம்.

மறுநாள் அந்த கடிகாரங்களை எடுத்துக்கொண்டு சவுதி அரேபியா, லிபியா, துபாய் முதலிய இஸ்லாமிய நாடுகளுக்குச் சென்று புதுவிதமான கடிகாரத்தை நாங்கள் கண்டிருக்கிறோம்.

இந்த கடிகாரத்தை நீங்கள் கையில் அணிந்து கொண்டால் தொழுகை நேரத்தை உங்களுக்கு நினைவூட்டுகின்ற வகையில் அலாரம் அடிக்கும் என்று விளம்பரம் செய்தார்கள். .

விளம்பரம் செய்தது மட்டுமல்ல, விளம்பரம் வெளிவந்த வினாடிகள் என்று கணக்கெடுத்துக் கொண்டாலும் கூட, சில மணி நேரங்களுக்குள் லட்சக்கணக்கான கடிகாரங்கள் விற்று முதலாகிவிட்டன என்ற செய்தியைப் படிக்கும்பொழுது விளம்பரம் எப்படிப்பட்ட வினோதமான செயல்களைச் செய்கிறது என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

கதை படிப்பதில் எப்படி மனிதனுக்கு மிகவும் ஆர்வம் ஏற்படுகிறதோ அதுபோல் அடுத்தவர் கடிதத்தைப் படிப்பதற்கு எப்படி. நமக்கு பெரிய விருப்பத்தை விளைவிக்கிறதோ அதேப்போல ஒரு பொருளைப் பற்றியெல்லாம் என்னென்ன வகையான அமைப்பில் அது அமைந்திருக்கிறதை எல்லாம் விளக்கம் காட்டுகின்ற விளம்பரங்களை விரும்பி அந்த விளம்பர வாசகங்களுக்கு ஏற்றபடி பொருள்களையெல்லாம் விலைக்கு வாங்கிக் கொள்ளலாம் என்கிற மனப்பான்மை நாட்டில் வளர்ந்து இருக்கிறது.

இது வெறும் பொருள்களின் விளம்பரங்கள் என்று எடுத்துக் கொள்ளாமல் பொருள் விளம்பரம், பொது விளம்பரம், கருத்து விளம்பரம், நிதி சார்ந்த விளம்பரம் என்றெல்லாம் கூட விளம்பரங்களை நாம் பல வகையான வகையில் பிரித்துக் காண முடியும்.

அதுபோல, தான் எந்தப் பதவி, யார் வேண்டும் என்றும், எந்த நிறுவனத்திற்கு யார் வேண்டும் என்றும், திருமணத்திற்குரிய மணமகன், மணமகள் தேவை என்பதைப் பற்றியெல்லாம் கூட செய்தித்தாள்களில் தகவல்களை வெளியிடுவதன் மூலம் விளம்பரங்கள் வளர்ந்துவிட்டதை வெகுவாகக் காண முடிகிறது.

எனவேதான் விளம்பரம் என்பது அங்கிங்கெனாதபடி எங்கும் பரவி நின்று, அது இல்லாத இடமில்லை போல துரும்புக்கு விளம்பரம், தூணுக்கு விளம்பரம் என்று சொல்லுகிற அளவுக்கு விளம்பரங்கள் வளர்ந்து வருகின்றன.

விளம்பர உலகத்தின் நுணுக்கத்தைப் பற்றியும், நாம் எதிர்வரும் தகவல்களையும் இனி ஆராய இருக்கின்றோம்,

விளம்பரம் செலவல்ல.
அது, கொழிக்கும் வருமானத்திற்கு
கொடுக்கும் அச்சாரம் எனலாம்.

– முனைவர் ஔவை அருள்
தொடர்புக்கு dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *