POST: 2024-01-29T09:34:30+05:30

தினசெய்தி – 28 1 2024

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 198

விளம்பர வீதி -3

விளம்பர உத்திகள்!

முனைவர் ஔவை அருள்

முன்னிரவு நேரம், குழந்தைகள் ஓடியாடி விளையாடிக் களைத்து வீட்டிற்குள் சென்று அடங்கியிருப்பார்கள்.

அந்நேரம் தெருமுனையில் பேண்டு வாத்திய முழக்கம் கேட்கும்.

பிள்ளைகள் ஆர்வமுடன் வெளியே ஓடுவார்கள், பெரிய பெட்ரோமாக்ஸ் விளக்குகளைத் தலையில் ஏந்தி இருபுறமும் ஆட்கள் நடந்து வர, நடுவில் இரண்டு பக்கமும் பேனர் கட்டிய மாட்டு வண்டி மெல்லக் குலுங்கி நடை பயின்று வரும்.

சிறுவர்கள் ஓடிப்போய் சூழ்ந்து கொள்வார்கள், சுற்றிச் சுற்றி வண்டியை வலம் வந்து பார்ப்பார்கள்; சிலர் பேனரில் உள்ளதை எழுத்துக் கூட்டிப் படிப்பார்கள்.

“அட, எம்.ஜி.ஆர். படம்டா !”

“நாகேசு காமெடி இருக்குடா!”

“கண்ணதாசன் தான் பாட்டு!”

முப்பதாண்டுகளுக்கு முன்பு. புதிய படம் வெளியானால் அதை இப்படித்தான் விளம்பரம் செய்தார்கள்,

ஆனால் இன்று காலம் மாறிவிட்டது.

விளம்பர உத்திகளும் மாறிவிட்டன.

சினிமாவை வேறுவேறு விதங்களில் விளம்பரம் செய்கிறார்கள்.

காரில் மாப்பிள்ளை ஊர்வலம் போல் படம் முடிந்ததும் வெளியீட்டுக்கு முன்பாக, பத்திரிகையாளர்கள், விளம்பரத் துறையினர் போன்றோருக்குப் போட்டுக் காட்டி கருத்தை உருவாக்குகிறார்கள்,

பத்திரிகைகள், தீபாவளி, பொங்கல் நேரங்களில் படங்களைப் பற்றி முன்னோட்டம் எழுதுகின்றன.

இதுவும் ஒரு வகையில் விளம்பரம் தான்; படத்தைப் பார்க்கத் தூண்டுவதால்! |

சினிமாச் செய்திகளைத் தருவார்கள் – இதுவும் பத்திரிகைகள் செய்யும் மறைமுக விளம்பரமே!

நேரடி விளம்பர முறைகளான வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை விளம்பரங்களை மீறி விளம்பர உத்திகள் வகுக்கப்படுகின்றன.

படம் வெளி வருமுன்பே, படப்பாடல் ஒலியிழையை வெளியிடுவது, அவற்றில் ஒன்று.

ஒலிநாடா வெளியீட்டு விழா, படத்திற்கான விளம்பரம் தான்!

படவுலகில் பெரும்பணம் புரளுவதால், ஒரு படத்தை நல்ல முறையில் விளம்பரம் செய்து அதை வெற்றிப் படமாக ஆக்க வேண்டும் என்பதில் விளம்பரத் துறையினர் கண்ணும் கருத்துமாக உள்ளனர்.

கமல்ஹாசன் நடித்து “பேசும்படம்” என்றொரு படம் வந்தது.

படத்திற்கு அதன் தலைப்பே, விளம்பரம்!

எப்படி?

படமோ, வசனமே இல்லாதது.

உரையாடல்களே, முழுதும் இல்லாத படத்திற்குத் தலைப்பு. “பேசும் படம்!”

இந்த முரணழகு, படம் பார்ப்போரைக் கவர்ந்தது.

அதை வெற்றிப் படமாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தது.

விளம்பரத்தின் முக்கிய நோக்கமே, மக்களை எளிமையாக அணுகுவது.

ஆனால், மக்களை எளிமையாக அணுகும் முயற்சிக்காக விளம்பர நிறுவனம் படும்பாடு மிகவும் கடினமானது.

ஒரு மருந்துப் பொருளுக்கு விளம்பரம் என்றால் ஒரு மருத்துவ நிபுணரிடம் உரிய பொருளின் பயன்பாடு பற்றி விளக்கமாகக் கேட்டறிய வேண்டும்; அல்லாமல், வீரியமுள்ள ஒரு மாத்திரையை ‘நாளுக்கு நாலு மாத்திரை சாப்பிடுங்கள் உங்கள் நோய் குணமாகிவிடும்!’ என்று விளம்பரம் செய்தால்,

நோய் போகாது;

உயிர் தான் போகும்!

இதற்கு, துறை நிபுணர்களின் விளக்கம் வேண்டும்.

பொய் எடுபடாது!

60 கி.மீ., மைலேஜ் தரும் ஒரு வண்டியை விளம்பரம் செய்யும் முயற்சியில் 200 கி.மீ. மைலேஜ் தரும் என்று கூறி விளம்பரம் செய்து அமோகமாக விற்கலாம்!

ஆனால், மைலேஜ் கணக்கு பொய் என்று வாடிக்கையாளர் கண்டுணர்ந்தால் நுகர்வோர் மன்றத்தில் நிற்க நேரிடும்.

அதுமட்டுமின்றி, கழுகுக் கண் கொண்டு ஆராயும் போட்டி தயாரிப்பாளர், இந்த பொய்யை வெளிச்சம் போட்டே விளம்பரம் தேடிக்கொள்வார்!

நடு நிலைமை

சினிமா போல் தான் விளம்பரத்துறையும்.

எவ்வளவு வேண்டுமானாலும் கவர்ச்சிக் காட்டலாம்; ஆனால் ஆபாசமாகி விடக்கூடாது. உணர்வுகளைத் தூண்டலாம்; மீறிவிடக்கூடாது.

வெளிப்படை

விளம்பரத்தில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், வெளிப்படை,

விளம்பரப் பொருளின் உண்மைத் தன்மையை மறைக்காமல் விரும்புவது.

பழரசம் என்றால் அது என்ன பழத்தின் சாறு; அதில் உள்ள கலவை என்ன?

விவரம் தெளிவாகத் தந்துவிட வேண்டும்.

சுவை மாறியிருந்தால், கலப்படம் என்ற எண்ணம் எழுந்து, வாடிக்கையாளரிடம் நம்பிக்கை போய்விடும்.
வியாபாரம் படுத்துவிடும்.

‘அசல் மாம்பழச் சுவை’ என்று விளம்பரம் செய்தால் பாட்டிலில் குடித்தாலும் மாம்பழ நினைவை சுவை தூண்ட வேண்டும்.

அப்போதுதான் விற்பனை பாதிக்காது.

மாம்பழம் விரும்புவோர், அது கிடைக்காத காலத்திலும் இந்தப் பழரசத்தைத் தொடர்ந்து வாங்குவர்.

தொலைநோக்கு

விளம்பரத் துறையில் உள்ளவர்களுக்குத் தேவையானது, தொலைநோக்குச் சிந்தனை.

விளம்பரப் பொருள் நேற்று, இன்று, நாளை ஆகிய முக்காலங்களிலும் எப்படித் தாக்குப் பிடிக்கும் என்பதைக் கவனிக்கத் தெரிய வேண்டும்.

அப்படி கணிக்கத் தெரிந்தால் ‘விளம்பர வீதியில் வெற்றி நடைபோடலாம்,

துடைப்பத்திற்கு விளம்பரம்!

துடைப்பம் ஒரு சாதாரணப் பொருள், இதற்குப் போய் என்ன விளம்பரம் செய்வது என்று கருதி அலட்சியமாக விடலாம்; சாதாரணமாகவும் விற்றுக் கொள்ளலாம்.ஆனால் அதே துடைப்பத்தை,

“ஈரான் நாட்டு இறக்குமதி

அசல் ஈச்சந் துடைப்பம்

நீண்டகாலம் நீடித்து உழைக்கும்

எளிதில் உதிராது

சுத்தமாய்ப் பெருக்கும்!”

என்று விளம்பரம் செய்து, கண்கவர் பாலிதீன் உறையில் அழகாக பேக் செய்து, மிடுக்காகப் பார்வையில் படும்படி கடையில் அழகான அடுக்கில் வைத்தும் விற்கலாம்,

சாதாரணமாய் விற்றால், ஐந்து ரூபாய், விளம்பரம் செய்து விற்றால் அதே துடைப்பம் இருபது ரூபாய்!

சாதாரணமாய் தெருவில் கட்டு கட்டி விற்கும்போது யாரும் கவனிப்பதில்லை, அதையே விளம்பரம் செய்து, அழகாய் உறையிலிட்டு விளம்பரம் செய்யும்போது அந்தப் பொருள் அந்த விலைக்குத் தகுதியுடையது; தரமுடையது என்று மக்கள் நம்புகிறார்கள்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு துடைப்பத்தை விளம்பரம் செய்து விற்பதைப் பற்றி யாரேனும் சிந்தித்திருப்பார்களா?

உளவியல் அவசியம்

உளவியல் புரிந்தவர்கள் விளம்பரத்துறையில் வெற்றி பெறலாம்.

வேலூரில் அந்த ஒரு குறிப்பிட்ட வீதியில் தனியார் மருத்துவமனைகள் ஏராளம்.
அங்கே போட்டியும் அதிகம்.

டாக்டர் லட்சுமணன், அங்கே கிளினிக் வைத்துள்ளார்.

அவரிடம் எப்போதும் கூட்டத்திற்குக் குறைவிருக்காது, உடல்நலமில்லாத, மருத்துவரிடம் போக அழுது அடம்பிடிக்கும் குழந்தைகள் கூட லட்சுமணனிடம் போவதென்றால் சிரித்துக்கொண்டு தாவி எழும்.

காரணம், லட்சுமணன், சிகிச்சைக்கு வரும் குழந்தைகளுக்கு சாக்லெட் தருவார்.

சாக்லெட் அதிகம் சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு இருமல், சளி வருகிறது என்று குறைப்பட்டுக் கொள்ளும் தாய்மார்கள் கூட டாக்டரிடம் குழந்தை சிகிச்சைக்காக அடம் பிடிக்காமல் வருகிறதே என்று சமாதானமாவார்கள்.

அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் குழந்தை கூட, சாக்லெட்டைக் கையில் பெற்றுக்கொண்டு, வாயில் மருந்து போட்டுக்கொண்டு அமைதியாகப் போகும்.

குழந்தைகளுக்கு சாக்லெட் தருவது நல்லதா என்று டாக்டரிடம் கேட்டால், அந்த வயதான டாக்டர் சிரித்துக் கொண்டே சொல்வார்.

“அந்த சின்ன சாக்லெட்தான், குழந்தையுடைய முழு நோயும் குணமாக மூலகாரணம், அதனால் தப்பில்லை!”

எப்படி டாக்டரின் உளவியல், குழந்தைகளை வெற்றி கொண்டு, நோயைத் தீர்க்கிறது பாருங்கள்!

பாண்டி. பஜாரில் குழந்தைகளுக்கான துணிமணி விற்கும் கடை வாசலில், கரடி, கங்காரு என வேடமிட்ட மனிதர் குழந்தைகளை வரவேற்றுக் கை கொடுப்பதும் இத்தகைய உளவியல் சார்ந்த விளம்பர உத்தியே!

விளம்பரம் செலவல்ல; அது விதை நெல்!

நாளைய அறுவடைக்காக நடைபெறும் நாற்றங்கால்!

எதையும் விற்கக் கூடிய சக்தி!

– முனைவர் ஔவை அருள்
தொடர்புக்கு dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *