தமிழ்மணி
18.02.2024
ஆண்டுதோறும் ஸ்ரீராம் நிறுவனத்தின் சார்பில், ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம் மகாகவி பாரதியார் விழா கொண்டா டுகிறது.
அவரது 142-ஆம் பிறந்த நாள் விழா கடந்த 10-ஆம் தேதி தி.நகர் ஸ்ரீ கிருஷ்ண கான சபாவில் நடந்தது. பிப்ரவரி மாதம் ஏன் பாரதியின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுகிறார்கள் என்கிற புருவம் உயர்த்தலுடன் தான் நான் இதைப் பதிவு செய்கிறேன்.
ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகத்தின் சார்பில், மகாகவி பாரதியாரின் புகழ் பரப்பி வரும் மூன்று பெருமக்கள் விருது வழங்கிப் பொற்கிழி அளித்துப் பாராட்டப் பெற்றிருக்கிறார்கள்.
இந்த ஆண்டு விருது பெற்றவர்களில் ‘தினமணி’ துணை செய்தி ஆசிரியர் ராஜ்கண்ணனும் ஒருவர் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
வழி வழி பாரதி’ என்கிற தலைப்பில் சிறப்பு ரையாற்றிய பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் விருது வழங்கி அவர்களை கெளரவித்திருக்கிறார்.
என்மீது தனித்த அன்பும், அக்கறையும் கொண்டவராக இருந்திருக்கிறார் தமிழறிஞர் ஒளவை நடராசனார்.
அவரைப் போலவே நானும் பேனா பிடித்து எழுதும் பழக்கத்தை விடாமல் கடைப்பிடிப்பவன் என்பது என்மீது அவருக்கிருந்த அன்புக்கு முக்கியக் காரணம்.
ஒளவை நடராசனாகும் சரி,
அவரது தந்தையார் உரை வேந்தர் ஒளவை துரைசாமிப் பிள்ளையும் சரி எழுதிக் குவித்திருக்கிறார்கள்.
தனது தந்தையார் ஒளவை நடராசனாரின் கையெழுத்து பிரதிகளை அவரது திருமகனார் ஒளவை அருள் சேர்த்து வைத்திருக்கிறார்.
தொகுத்துப் பார்த்திருக்கிறார் என்பது தந்தை மேல் அவருக்கிருக்கும் அளப்பரிய பக்தியின் வெளிப்பாடு.
அப்பாவின் தனித்துவமான கையெழுத்தைக் கண்டு நான் வியப்பதற்குக் காரணமுண்டு.
ஆங்கிலத்தில் தான் எழுத்துக்களைச் சேர்த்தெழுதும் முறையை நாம் கண்டிருக்கிறோம்.
ஆனால் அப்பாவோ. ஆங்கிலத்தைப் போலவே தமிழிலும் எழுத்துக்களை உரிய நெறிப்படி சேர்த்தெழுதும் ஆற்றல் மிக்கவராய் திகழ்ந்தார் என்கிறார் ஔவை அருள்.
நாள்குறிப்பு என்று சொல்ல முடியாவிட்டாலும், அவ்வப்போது ஒளவை நடராசனார் எழுதி வைத்திருந்த குறிப்புகள் சிலவற்றை அவரது கையெழுத்து பிரதியுடன் தொகுத்து ‘ஔவையின் சிந்தனைப் புதையல்” என்கிற பெயரில் வெளிக்கொணர்ந்திருக்கிறது ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம்.
180 குறிப்புகள் இடம் பெற்றுள்ள இந்த அரிய தொகுப்பின் ஆக்கத்தில் முனைவர் ஔவை அருளின் முனைப்பும், நண்பர் பொன்னேரி பிரதாப்பின் பங்களிப்பும் பளிச்சிடுகின்றன.

Add a Comment