POST: 2024-03-03T05:36:54+05:30

செய்திக்குறிப்பு

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் ஆக்கங்களைத் தமிழில் செம்பதிப்புக்களாக வெளியிடுதல்

இந்தியாவில் மக்கள் களத்திலும், அறிவு சார் துறைகளிலும் அரசு சார்ந்த அமைப்புக்களின் மூலமாகவும், சனநாயகத்தைக் காக்க 20ஆம் நூற்றாண்டில் இடையறாத போராட்டம் நிகழ்த்திய அறிவாளுமை அண்ணல் அம்பேத்கர்.

பாவேந்தர் பாரதிதாசனால் சமூகத்தைப் பீடித்துள்ள முடைநாற்றம் என அறியப்பட்ட சாதீயக் கட்டமைப்புக்கும், தீண்டாமை என்னும் பஞ்ச மாபாதகச் செயலுக்கும் எதிராகச் சமரசமற்ற தாக்குதல் தொடுத்த அண்ணல் அம்பேத்கர், அவை பற்றிய தமது ஆழமான, கூர்மையான, தெளிந்த ஆய்வுகளையும் முடிபுகளையும் அறிவாக்கங்களாகப் படைத்தார்.

சாதி என்னும் முடைநாற்றம் நீக்க வந்த கற்பூரப் பெட்டகமாகத் திகழ்பவை அண்ணலின் படைப்பாக்கங்கள்.

சிக்கலைக் களையாமல், சிக்கலை அதன் வேரோடும், வேரடி மண்ணோடும் களையும் உத்திகளைத் தம் படைப்புக்களில் வடித்துத் தந்த அண்ணல் பிரான், இந்திய சமூக விடுதலையை அடைவதற்கான பாதையாக அரசியலமைப்புச் சட்டத்தையும் இயற்றுவதில் பெரும் பங்காற்றினார்.

அரசு என்ற கட்டமைப்பின் துணை கொண்டே, தீண்டத்தகாதவர் எனச் சிலரால் ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், பெண்கள், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட இந்துக்கள் ஆகியோரின் உரிமைகளுக்காகவும், தன்மானத்திற்காகவும் தனது சட்டப்புலமையைப் பயன்படுத்தி அல்லும் பகலும் அயராது உழைத்து வந்தார்.

பல்துறை வல்லுநரான அண்ணல் அம்பேத்கர்
இந்திய ரூபாய், வங்கித்துறை வரலாறு முதலான இந்தியப் பொருளாதரச் சிக்கல்கள் குறித்தும், இக்காலத்தில் உரக்கப் பேசப்படும் மாநில உரிமைகள் குறித்தும், அவர் காலத்தில் நடந்த பாகிஸ்தான் பிரிவினை போன்ற சமகாலச் சிக்கல்கள் குறித்தும் தம் படைப்பாக்கங்களில் அறிவார்ந்த கருத்தாக்கங்களை முன் வைத்துள்ளார்.

அண்ணலின் படைப்பாக்கங்கள் அனைத்தும் ஆங்கிலத்திலும், மராத்தி மொழியிலும் எழுதப்பட்டவை.

அவற்றுள் பல அவர் வாழும் காலத்திலேயே வெளிவந்த பெருமைக்குரியவை.

சில அவரது கையெழுத்துப் படிகளில் இருந்து பின்னர் வெளிப்பட்டவை.

இன்னும் சில, மும்பை சட்டமன்றத்திலும், ஆங்கில ஆட்சியாளர் அவையிலும், அரசியல் நிர்ணய அவையிலும், இந்திய நாடாளுமன்றத்திலும் அண்ணலின் உரைகளாகவும், வினாக்களுக்கு அவர் ஈந்த விடைகளாகவும் அரசுப் பதிவேடுகளிலேயே புதைந்து கிடந்தன.

இவற்றோடு அவர் எழுதி வெளிவந்த பத்திரிக்கைக் கட்டுரைகளையும் மொத்தமாகத் திரட்டித் தொகுத்து 1979இல் மகாராஷ்டிர மாநில அரசு ஆங்கிலத்தில் 37 தொகுதிகளாக வெளியிட்டது.

இந்த 37 தொகுதிகளையும் தமிழ்நாட்டின் நியு செஞ்சுரி புத்தக நிறுவனம் தமிழக்கம் செய்து 1993இல் தொடங்கி 2005 வரை அதே போன்றே 37 தொகுதிகளாக வெளியிட்டுப் பெருமை கொண்டது.

தற்போது தமிழ்நாடு அரசு அண்ணல் அம்பேத்கரின் படைப்பாக்கங்களை எல்லாம் இக்காலச் சூழலுக்கு ஏற்ற தரமான மொழிநடையில் எல்லோருக்குமான படைப்புக்களாக, அனைவரும் வாங்க்கும் விலையில் வெளியிட அரசாணை வெளியிட்டு, நிதிக்குவையையும் ஒதுக்கியுள்ளது.

அத்தமிழ்த் திருப்பணியில் தமிழ் வளர்ச்சித்துறையும்
நியு செஞ்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

அண்ணலின் ஆக்கங்களுக்கு முன்னர் வெளிவந்த தமிழ்ப் பதிப்பில் இடம்பெற்றுள்ள மணிப்பிரவாள மொழிநடையை இக்காலத் தமிழுக்கு ஏற்ற செழுந்தமிழாக மாற்றியும், அண்ணலின் படைப்புக்களைப் பொருளடைவு மற்றும் கால முறையில் புதிதாக வகை தொகை செய்தும், 60 தொகுதிகளாக வெளியிடத் தமிழ் வளர்ச்சித் துறையும்,
நியு செஞ்சுரி புத்தக நிறுவனமும் முனைந்துள்ளன.

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நூல்களைத் தமிழில் செம்பதிப்பாக வெளியிடும் திட்டத்திற்கான வல்லுநர் குழுக் கூட்டம் சென்னை, தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் 09.02.2024ஆம் நாளன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்
பேராசிரியர் வீ. அரசு அவர்களும்
முனைவர் மு. வளர்மதி அவர்களும்
திரு.அ. மதிவாணன் அவர்களும்
திரு. ந. திருச்செல்வன் அவர்களும்
திரு. சண்முகம் சரவணன் அவர்களும்
தமிழ் வளர்ச்சி இயக்குநர் அவர்களும் கலந்து கொண்டனர்.

பொருள் மாறுபாடு தவிர்த்தல்,

எளிய தமிழில் அனைவரும் புரிந்துகொள்ளும் மொழிநடையில் தகுதி வாய்ந்த மாற்றங்களைச் செய்தல்,

இக்காலச் சூழ்நிலைக்கு ஏற்ப மொழிவளத்தை அமைத்தல்,

பிறமொழிக் கலப்பினை அகற்றுதல்,

உலக மக்களிடம் எடுத்துச் செல்லுதல்

ஆகியவற்றைத் திட்டமிட்டுச் செயலாற்றுகின்றோம்.

தொகுதிகளில் இடம்பெறும் அருங்கலைச் சொற்கள் மற்றும் அக்கால வழக்குச் சொற்கள் ஆகியவற்றை அத்தொகுதியின் இறுதியில் சேர்ப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஒவ்வொரு தொகுதியும் 300 பக்கங்கள் வரை கொண்டதாக அமையப்பெறும்.

மேலும், அடக்க விலையை விடக் குறைவான விலையாகத் தொகுதி ஒன்றுக்கு ரூபாய் 100/-க்கு மிகாமல் விற்பனை செய்யலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.

அண்ணல் அம்பேத்கரின் ஆக்கங்களில் இதுவரை அச்சில் வெளிவராத நூல் வடிவில் கிடைக்கப்பெறாத பிற செய்திகளையும் கண்டறிந்து, அவற்றையும் தொகுத்து, புதிய தொகுதிகளாக வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அறிவுச்சுடர் அம்பேத்கரின் ஒளிப்படங்களை பல்வேறு பருவங்களின் அடிப்படையில் அமைத்து அத்தொகுதிகளில் வெளிவர உள்ளன.

வரும் மார்ச் மாதம் இறுதியில் அண்ணல் அம்பேத்கரின் அறிவாக்கங்களில் முதல் 10 தொகுதிகளை அச்சிட்டு வெளியிடுவதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

எனவே, மார்ச் இறுதியில் அம்பேத்கரின் ஆக்கங்களில் முதல் 10 தொகுதிகள் அறிஞர்களின் கைகளில் தவழும் என்பதை இதன்மூலமாக தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர்
சென்னை
12-02-2024

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *