POST: 2024-03-04T10:06:39+05:30

தமிழ்க்கூடல் கருத்தரங்கம்

மதுரை, மார்ச் 1: மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தின் பெருந்திட்ட வளாகக் கூட்டரங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

உலகத் தமிழ்ச் சங்கம், கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரி சார்பில் நடை பெற்ற இந்தக் கருத்தரங்கத்துக்கு சங்க இயக்குநர் (பொறுப்பு) ஔவை ந.அருள் தலைமை வகித்தார்.

மதுரை இலக்கியப்பேரவைத்தலைவர் சண்முக திருக்குமரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, ‘நானாற்பது காட்டும் வாழ்வியல் விழுமியங்கள்’ என்ற தலைப்பில் பேசினார்.

அப்போது, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் நானாற்பதுகளாகக் குறிப்பிடப்படும் கார் நாற்பது, களவழி நாற்பது, இனியவை நாற்பது, இன்னா நாற்பது ஆகிய நான்கு நூல்களும் குறிப்பிடும் தமிழர் வாழ்வியலை அவர் விளக்கிப் பேசினார்.

இதைத் தொடர்ந்து, நூல்கள் அரங்கேற்றம் நடைபெற்றது. சென்னை சு.பிரபாகரனின் ‘ஆழி-உயிர்களின் தாய்மடி’ என்ற கடல் சூழலியல் ஆய்வு நூல், புலவர் நாநா. ஆறுமுகத்தின் ‘சூரியச்சில்லுகள்’ என்ற கவிதை நூல், மதுரை கவிஞர் மா. காளிதாஸின் ‘நல்லவேளை புத்தனுக்கு ஹைக்கூ எழுதத் தெரியாது’ என்ற விமர்சனக் கட்டுரை நூல், சின்னமனூர் முனைவர் ரா. மனோகரனின் ‘அழுக்கு’ என்ற புதினம் ஆகியன அரங்கேற்றம் செய்யப்பட்டன.

தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, உலகத் தமிழ்ச் சங்க ஆய்வறிஞர் சு.சோமசுந்தரி வரவேற்றார்.

அயலகத் தமிழ் புத்தகப் பூங்கா பொறுப்பாளர் கி.ரா.சிந்து நன்றி கூறினார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *