ஒளவை நடராசன் 2.0 = ஒளவை அருள்
உரத்த சிந்தனை பாரதி உலா நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குனர் முனைவர் ஒளவை அருள் பங்கேற்பது உரத்த சிந்தனைக்கு பெருமை சேர்க்கும் அம்சம் .
அவரது தந்தையார் போற்றுதலுக்குரிய ஒளவை நடராசன் அவர்கள் உரத்த சிந்தனையின் ஆண்டு விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நான்கைந்து முறை தலைமை விருந்தினராக பங்கேற்று சிறப்பித்திருக்கிறார்.
உரத்த சிந்தனை சங்கத்தின் செயல்பாடுகளிலும், நம் உரத்த சிந்தனை மாத இதழின் வளர்ச்சியிலும் மிகுந்த மதிப்பு கொண்டிருந்த அவர் என் மீது தனிப்பட்ட அன்பு வைத்திருந்ததை இப்போது நினைத்தாலும் இதயம் நெகிழ்ந்து மகிழ்கிறது.
மிகப் பெரிய பதவிகளில் இருந்த அவர் ‘நம் உரத்த சிந்தனை’ இதழை முழுமையாகப் படித்து பல சமயங்களில் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டியதை எப்படி மறக்க இயலும் ?
ஸ்ரீராம் குழுமத்தின் பாரதி கழகம் இரண்டாண்டுகளுக்கு முன்பு எனக்கு ‘பாரதி அறிஞர்’ என்ற விருது வழங்கிய போது … “இது ஆரம்பம்தான் ராம்.. உங்கள் பணிகளுக்கு உரிய அங்கீகாரம் தொடரும்” என்று வாழ்த்தியது நான் பெற்ற பேறு.
அவரது அன்புக்கு சற்றும் குறையாதவராய் அப்படியே அவரது மகன் அவ்வை அருள் அய்யா இருப்பது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது.
பாரதி உலா நிறைவு விழா என்று அலைபேசியில் பேச ஆரம்பித்த உடனேயே ..”தேதியை முதலில் சொல்லுங்க” என்று கேட்டு தேதியை சொன்னவுடன் , வருகிறேன் என்றார்.
முறைப்படி கடிதம் தர அலுவலகத்துக்கு வர வேண்டுமே என்றவுடன் .. “தேவையில்லை .. இதுவே போதும் .. வந்து விட்டேன் என்று குறித்துக் கொள்ளுங்கள்” என்று சொன்னபோது .. பாரதியின் மீதும் உரத்த சிந்தனை மீதும் அவர் கொண்டிருந்த அன்பு கைப்பேசி வழியாக வழிந்தோடியது.
” அழைப்பிதழ் தர வேண்டும் .. நேரில் வந்து தருவதுதான் மரபு” என்று இன்று காலை பேசிய போது .. “புலனத்தில் அனுப்பியதே போதுமே” .என்று சொன்ன எளிமை ஆச்சர்யப்படுத்தியது.
எப்படியும் நேரில் சென்று தர வேண்டும் என்ற முடிவுடன் அவரது உதவியாளர் பொன்னேரி பிரதாப் விடம் அவர் தமிழ் வளர்ச்சித் துறை இயக்ககத்தில் இருப்பதை உறுதி செய்து கொண்டு நேரில் சென்றேன் .
சில நிமிடங்கள் காத்திருந்தேன்.
தகவல் தெரிவிக்கப்பட்டது உள்ளே அழைக்கப்பட்டேன்.
“வாணி மகால் 24 ஆம் தேதி காலை நிகழ்ச்சி என்ன சரிதானே” என்று சொல்லியபடி அழைப்பிதழைப் பெற்றுக் கொண்டார்.
இதற்கிடையில் அவரது அலுவலகப் பணியாளர் நீட்டிய கோப்புகளை முழுமையாகப் படித்து .. ஆங்கிலம் இல்லாமல் .சரியான தமிழ் வார்த்தைகளுடன் அந்த அறிக்கைகள் , கடிதங்கள் தயாராகியுள்ளதா என்பதை கவனித்ததைப் பார்த்த போது ,தமிழ் மொழியின் வளர்ச்சியில் அவருக்கு இருந்த கூடுதல் அக்கறையும் , பொறுப்புணர்வும் .. அட ..சரியான பொறுப்புக்கு சரியான நபர்தான் தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்று என் மனதுக்குள் அவரைப் பாராட்டிக் கொண்டேன் .
இப்போது அதை உங்களுக்கும் இந்தப் பதிவின் வாயிலாக தெரியப்படுத்திவிட்டேன்.
சற்று உற்று நோக்கிய போது நடை உடை பாவனை பேச்சு மட்டுமல்ல .. அன்பிலும் பண்பிலும் ஒளவை அருள் அவர்கள் ஒளவை நடராசன் 2. 0 ஆக எனக்குத் தோன்றினார் .
அருளின் சேவை என்றும் தமிழுக்குத் தேவை!
உள்ளன்புடன்
உதயம் ராம்

Add a Comment