தமிழின் பெருமை
உலகில் இன்று 7.7 பில்லியன் மக்கள் வாழ்கின்றார்களாம். 7117 மொழிகள் பேசுவதாக எத்தனோலாகு என்னும் நிறுவனம் சொல்கின்றது. இவற்றில் 40% மொழிகள் அழியும் தறுவாயில் உள்ளன. வெறும் 23 பெரிய மொழிகள்தாம் உலகின் சரிபாதிக்கும் மேலான மக்களால் பேசப்படுகின்றன. இவற்றுள் தமிழும் ஒன்று (19 ஆவது). ஆனால் ஆங்கிலம், மாண்டரின், எசுப்பானியம், பிரான்சியம் இந்தி, இடாய்ச்சு, மலாய் முதலான 23 பெருமொழிகள் பேசுபவர்கள் வெறும் பாதி (கிட்டத்தட்ட) மக்களே உலகில். மாந்தக் குலத்தின் பண்பாடும் அறிவும் வரலாறும் நுணுக்கங்களும் இயற்கை மொழிகளில் புதைந்து கிடக்கின்றன. இன்றைய தொழினுட்ப வசதிகளால் ஏறத்தாழ எல்லா மொழிகளையும் காக்க முடியும். ஆனால் அரசியல் பொருளியல் வல்லாண்மைகளால் பெருமொழிகளுமே கூட சிதைந்து அழியும் வாய்ப்புகள் உள்ளன. எனவே மொழியையும் மொழிவழி பண்பாட்டையும் காக்க அரசியல் பொருளியில் செயற்பாடுகளில் விழிப்புணர்வும், ஆக்கந்தரும் செயற்பாடுகளும் தேவை. நம் தமிழ்மொழிக்கு பெரும் கேடுகள் செய்வனவாக நான் கருதுவது:
1) தாழ்வு உளப்பான்மை.
2) உரிமை நிலைநாட்டாமை
3) அரசியாளர் மெய்யான வலுவான நடவடிக்கைகள் எடுக்காமை,
4) இந்திய ஒன்றியத்தினர் பன்மொழி உரிமையைப் போற்றாமை (இது 2-ஆவது காரணத்தோடு தொடர்புடையது).
5) ஊழலால் தன்னலத்துக்காகப் பொதுநலத்தைக் குலைப்பது
6) கல்வியில் தாய்மொழிவழி கல்லாதது (இது எப்படிப்பட்ட பண்பாட்டு அழிப்பு என்பதை மக்கள் உணரவில்லை; இது எப்படி குன்றிய கல்வியைப் பெரும்பான்மையானவர்க்ளுக்குத் தரும் என்பதையும் அறிவதில்லை) ,
7) ஆங்கிலம் மோகம் (ஆங்கிலம் இன்று முக்கியம், ஆனால் தாய்மொழியைத் துறந்து ஆங்கில மயமாவது கேடு).
8) தமிழில் வணிகம் முதல் பற்பல ஆக்கம் நிறைந்த செயற்பாடுகளில் போதிய வளர்ச்சி இல்லாதது.
9) நம் கூட்டு வல்லமையை, தன் மதிப்பை உணராதிருத்தல் (வெட்டிப் பெருமை பேசுவதால் பயன் இல்லை. ஆழமான தன் மதிப்புணர்வும் கூட்டு வலிமையில் நம்பிக்கை, அதற்கேற்ற நற்செயற்பாடுகளும் தேவை)
Add a Comment