பழுத்துப் பண்பட்ட குணக்குன்று மறைந்ததே!
அறிஞர் ப ஸ்ரீ ராகவன்
(29.6.1927-10.4.2024)
தனது கனிந்த முதிர்ந்த 97 ஆம் அகவையில் மறைந்தார் என்ற செய்தி துயரத்தைத் தருகிறது.
எந்தையாரின் இனிய நண்பர், பல்லாண்டுகளுக்கு முன்பு தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்திற்கு, அறிவுரைஞர் குழுவில் சென்று வந்து கண்டு பேசியதை அப்பா என்னிடம் அடிக்கடி வேடிக்கையாக சொல்லுவார்
ஆங்கில நாளேடான
பிசினஸ் லைனில் அவர் தொடர்ந்து எழுதிய ஒப்பினியன் (Opinion)என்ற தலைப்பிலான கட்டுரையினை அப்பாவிடம் படித்துக் காட்டுவதற்காகவே அவ்விதழை வாங்கி மகிழ்ந்தேன்.
அவர் எழுதிய பல ஆங்கிலக் கட்டுரைகளைக் கத்தரித்து தொகுப்பாகவே இன்றும் எங்கள் நூலகத்தில் உள்ளது.
அப்பாவுடன் அவரின் அடையார் குடியிருப்புக்கு பல முறை
சென்றுள்ளேன்.
அவரின்
வாழ்விணையர் திருமதி கௌசல்யாவும் உரையாடலில் கலந்து கொள்வதோடு அன்பும் பரிவும் ததும்ப விருந்தளிப்பது இன்றும் மனத்திரையில் அகலாமல் உள்ளது.
அண்ணல் பி எஸ் ராகவன் தன் மனைவி,மகன் மறைவின் போதும் கலங்காமல் அப்பாவுடன் நாட்டு நடப்புகளைக் குறித்து விரிவாகப் பேசும் பொழுது அப்பா கலங்கி நின்றார்..
ஏறக்குறைய 3000 கட்டுரைகளுக்கும் மேலாக எழுதியதோடு ஆங்கிலப் பெரும் புலமையோடு வரைந்த கவிதைகளும், பிறமொழிச் சொற்கள் கலவாமல் நற்றமிழ்க் கவிதைகளையும் எழுதிக் குவித்துள்ளார்.
சான்றாக
(நாட்டு மன்னர்களுக்கு,
வாரீர் வாரீர் வானே அதிரத் தாரீர் தாரீர்
விழித்திடு, உயர்ந்திடு வென்றிடு
புவியிற் பலரெனைக் கேட்பது கேள்
கவிஞர்களுக்கு மடல்
பாரதி மறைந்த நாள் வந்தது சென்றது கவிஞர்களை கேட்கும் கேள்வி
நாளும் பொங்கல் பொங்குக மங்கிய பண்பை நினைந்து பொங்குக
பொங்குக பொங்குக இன்றும் பொங்குக என்றும் பொங்குக
என்ற தலைப்பிலான கவிதைகளும்
Ring out,wild bells,to the wild sky என்ற தலைப்பில் ஆங்கிலக் கவிதையும்
Ninety,hundred,
hundred -and-five என்று அவர் எழுதிய தன் பிறந்த நாள் கவிதையினை 2016 ஆம் ஆண்டில் யான் தமிழாக்கம் செய்து பாராட்டுப் பெற்றது என் பெரும் பேறு
1971ஆம் ஆண்டில் வங்க நாடு பிரிந்த பொழுது அந்நாட்டின் நிருவாகப் படி நிலைகளை
முடி முதல் கடை நிலை வரை செதுக்கிய சிற்பி.
1943 ஆம் ஆண்டின் மயிலை ராமகிருஷ்ண மிஷன் உயர்நிலைப் பள்ளியின் மாணவச்செம்மல்
1952 -1987 வரை இந்திய ஆட்சிப் பணி அலுவலர்.
இந்திய நாட்டின் சார்பாக ஐக்கிய நாட்டு அவையின் ஆலோசகர்.
மேற்கு வங்கத்தின் தலைமைச் செயலாளர்
இராஞ்சியில் அமைந்துள்ள இந்திய நிதியாளுமைப் பல்கலைக்கழகத்தின்(ICFAI)
முதல் வேந்தர்
நேரு முதல் நேற்று வரை நூலின் நூலாசிரியர்
இந்து இதழின் வளர்ச்சியில் பெரும்
பங்காற்றியவர்
எப்போது பேசினாலும், எதைப்பற்றி பேசினாலும் சொற்கள் மலரக் கருத்து மணக்கப் பேசும்
வழக்கமுடையவராகவும்
பட்டு நூலில் துளையிட்ட முத்துக்கள் ஒவ்வொன்றாய் நழுவி இறங்கிச் சேர்ந்து கோத்துக் கொண்டு ஆரமாக ஒன்றுபடுவது போல் சான்றோர் திலகம் பி எஸ் ராகவன் வாயிற் சொற்கள் பிறப்பதும், இணைவதும், பொருள்படுவதும் தனி அழகுடன் இருக்கும்
நடிப்புலகின் மார்கண்டேயர் சிவகுமார்,
வானவில் இலக்கிய அமைப்பின் நிறுவனர் வழக்கறிஞர் இரவி,
திருமதி ஷோபனா ரவி,
எழுத்தாளர் சிவசங்கரி
மற்றும் பலரையும் எந்நாளும்
பாராட்டி மகிழ்ந்தவர்.
தீ நுண்மிக் காலத்தில் பலமுறை தொலைபேசி வாயிலாக என்னிடம் தொடர்பு கொண்டு பெற்றோரின் நலம் விழைந்தவரின் மறைவு துயரம் தருகிறது
பணிவுடன்
ஒளவை அருள்

Add a Comment