தினமணி சென்னை
பக்கம் 6
திங்கள்கிழமை 29 ஏப்ரல் 2024
மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!
உலகில் சிலர் கவிஞர்களாகவே பிறக்கிறார்கள்; சிலர் கவிஞர்களாக ஆக்கப்படுகிறார்கள்; சிலர் கவிஞர்களாக விளம்பரப்படுத்தப்படுகிறார்கள்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் முதல் வகையைச் சேர்ந்தவர்.
பாரதியார் என்னும் வேரிலிருந்து புறப்பட்ட ஆலமரமாக விளங்கியவர் பாரதிதாசன்.
தனது தனிப்பட்ட ஆளுமை காரணமாக வித்தியாசமாக கிளை விரித்ததோடு தாமே தமது எண்ணற்ற விழுதுகளையும் தமிழ் மண்ணில் விளைத்து மாபெரும் கருத்துப் புரட்சிக்குக் கால்கோள் இட்டவர்.
அவரது புகழ் வட்டம்
தேசிய இயக்கத்தில் தொடங்கி, கயமரியாதை இயக்கத்தின் மலர்ந்து,பொதுவுடமை இயக்கத்திற்கு உரமாகி, நாளுக்கு நாள் தமிழ் கூறும் நல்லுலகெங்கும் மனிதம் பாடும் மாநிலமெங்கும் தகத்தகாயமாய்ச் சுடர் விட்டு விரிந்து பரந்து, உயர்ந்து வளர்ந்து, சிறகு விரித்தது.
அடக்கப்பட்டவர்களையும், ஒடுக்கப்பட் டவர்களையும், கரண்டப்பட்டவர்களையும் பாடுபொருளாக மையப்படுத்தியவர்களுள் பாரதிதாசன் மூத்தவர்; முன்னோடியானவர்.
புரட்சிக் கவிஞர் தமது 11-ஆம் வயதிலேயே கவிதை இயற்றும் ஆற்றலைப் பெற்றிருந்தார்.
அவர் தமிழ் இலக்கண நூல்களையும், இலக்கிய நூல்களையும் முறையாகவும், முழுமையாகவும் இலக்கண இலக்கிய பேராசிரியர்களிடம் கற்றுத் தேர்ந்தவர்.
பல ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றிய பாரதிதாசன் தமிழைப் பிழையில்லாமல் எழுத வேண்டும் என்பதில் கண்டிப்பானவர்.
தமது நூல்களின் பிழைகளைக் கவிஞரே திருத்துவாராம்.
மணிமேகலை, பெருங்கதைக்குப் பிறகு முற்றிலும் ஆசிரியப்பாவால் இயற்றப்பட்ட நூல் பாவேந்தரின் இருண்ட வீடு என்னும் சிறுகாப்பியமாகும்.
தமிழிலக்கியத்திலேயே இணைக்குறள் ஆசிரியப்பாவில் இருப்பது கவிஞருடைய ‘காதலா கடமையா எனும் நூல்..
நளவெண்பாவிற்குப் பிறகு சிறந்த வெண்பா நூலாகக் கருதப்படுவது பாவேந்தரின் மணிமேகலை வெண்பா.
எண்சீர் விருத்தத்தில் ‘பாண்டியன் பரிசும், ‘கண்ணகி புரட்சிக் காப்பியமும் அமைந்துள்ளன.
அழகின் சிரிப்பு அறுசீர் விருத்தத்தில் ஆன நூலாகத் திகழ்கிறது.
அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்திற்குப் பிறகு இயற்றப்பட்ட ஒரே நூலாக
ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது காணப்படுகிறது.
பாவும் பாவினமும் சிந்தும் கலந்து அவருடைய ‘தமிழச்சியின் கத்தி எழுதப்பட்டுள்ளது.
பதினான்கு சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமும் இவர் சுவிதைகளில் உள்ளன.
நொண்டிச்சிந்து காவடிச்சிந்து முதலியவற்றையும் எழுதியிருக்கிறார்.
சங்க இலக்கியப் பாடல்கள் பலவற்றை,அகவலிலும், இசைப் பாவிலும் பாடிய முதல்பாவலராக பாவேந்தர் விளங்குகிறார்.
இவ்வாறு தமிழை முறையாகப் பயின்று. மரபு தவறாது காலத்திற்கேற்ற புதுமைகளைச் சேர்த்துப் பாடிய தமிழ்க் கவிஞராகப் பாவேந்தர் திகழ்கிறார்.
எண்ணம், செயல், உணவு, உடை, நடை ஆகிய அனைத்திலும் தமிழினம் ஒன்றுபட்டு முன்னேற வேண்டுமெனும் உயிர்த்துடிப்புக் கொண்டவர் பாவேந்தர்.
தமிழர்களெல்லாம் ஒன்றுபட்டு நின்றால் கலையிலும், தொழிலிலும் அறிவிலும், ஆற்றலிலும் ஓங்கி வளர்ந்து உலக மக்களிடையே உயர்ந்த இடத்தைப் பெற வழி ஏற்படும்.
தமிழர்கள் இவ்வாறு உயர்ந்தனர் என்ற நிலை ஏற்படுவது எந்த நாளோ ‘ என்று ஏங்கிய உள்ளம் பாவேந்தருடையது.
பகுத்தறிவுக் கொள்கைகளைப் பாருக்கு வழங்கியவர், பொதுவுடைமைக் கொள்கைகளைத் திசையெட்டும் பரப்பியவர், ஜாதிப் போக்குகளைச் சாய்ததவர்,
மதக் கொடுமைகளை மாய்த்தவர்,
தொழிலாளர் துயர் துடைத்தவர் எனப் பாவேந்தர் பல்வகையாகப் பாராட்டப்பட்டாலும் அவருடைய அனைத்துக் கருத்துகளிலும் தமிழுணர்வே மேலோங்கி நிற்கிறது.
என் பாட்டனார் உரைவேந்தர் ஔவை துரைசாமியார் குறித்து தனிக் கவிதை
(‘உரைவேந்தை வாயார வாழ்த்தாத வாய்’) யாத்துள்ளதை தமிழ் கூறு நல்லுலகம் நன்கறியும்.
என் பெற்றோர் இருவரையும் நன்கறிந்த கவிஞர், என் தாயார் மருத்துவர் தாரா நடராசன் குழந்தைகள் நோயியற்பட்ட மேற்படிப்பு மருத்துவம் பயின்று கொண்டிருந்தபோது, பெரிதும் மகிழ்ச்சியடைந்ததோடு நம் நாட்டுக் குழந்தைகள் நலிந்து, மெலிந்து நோஞ்சான்களாக இருக்கிறார்களே என்று அவர் வருந்திக் கூறினாராம்.
உலகக் காப்பியங்களில் தனித்தொளிரும் ஒரே ஒரு காப்பியம் ‘குடும்ப விளக்கு’.
இது மூன்று தலைமுறைக் கதைத் தொடர் நிகழ்ச்சி.
இளையோர் காதல் மனைவாழ்வில் தொடங்கி முதியோர் காதலில் முடிகிறது.
நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்பதே உட்கருத்தாகும்.
பாரதிதாசனின் குடும்ப விளக்கு நூல் முழுதும் மனப்பாடம் செய்து கேட்போர் மெய்சிலிர்க்குமாறு மேடையில் உரை நிகழ்த்தி இருக்கிறார் கவிஞர் திருலோக சீதாராம்.
மகாகவி பாரதியாருக்கும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டெனினும் ஒருசில வேறுபாடுகளும் உண்டு.
பாரதியார் தமிழிடம் தனி விருப்புக் கொண்டாலும், வடமொழியிலும் ஈடுபாடு கொண்டவர்.
பாவேந்தரோ தமிழும், திராவிட மொழிகளிடமும் மட்டுமே தனியன்பு கொண்டவர்.
தமிழ் நாட்டின் மீது தனியன்பும், பாரத நாட்டின் ஒருமைப்பாட்டின் மீது பேரார்வமும் கொண்டவர் பாரதியார்.
பாரதிதாசனோ தமிழ்ப்பெரு நிலத்தின் மீது பற்றுக்கொண்டவர்.
பாரதியார் இந்திய மறுமலர்ச்சிக் கவிஞர்.
பாரதிதாசன் முதல் திராவிட மறுமலர்ச்சிக் கவிஞர்.
பாரதி தெய்வ சக்தியைப் பெரிதும் பாடியவர்.
பாரதிதாசன் மனித சக்தியைப் பெரிதும் பாடியவர்.
பாரதிக்குத் தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள்.
பாரதிதாசனுக்குகத் திராவிடமும் பகுத்தறிவும்
இரு கண்கள்
பாரதியார் தேசிய இயக்கத்தின் பரிசாகவும்,
பாரதிதாசன் திராவிட இயக்கத்தின் பரிசாகவும் கொள்ளப்படுகின்றனர்.
1942-இல் நடைபெற்ற ஆகஸ்ட் போராட்டத்தில் அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களுள் ஒருவரான ஈரோடு கோவிந்தசாமி என்பார். பாரதிதாசன் பாடல்களை இசையோடு பாடியதாகவும், அதனைக் கேட்டு பிற கைதிகள் மகிழ்ந்ததாகவும் ஒரு செய்தி உண்டு.
1942-இல் தனது ‘ஔவையார்’ நாடகத்தில் பாவேந்தரின் பாடல் வரியான
இனிமைத் தமிழ்மொழி எமது எமக்கு
இன்பம் தரும்படி வாய்த்த நல்லமுது
என்ற வரி பயன்படுத்தப்பட்டது என்று குறிப்பிடுகிறார்
நாடகக் கலைஞர் ஔவை தி.க. சண்முகம்.
1964-இல் பாவேந்தர் காலமானார்.
அவர் உடல் புதுவையில் அடக்கம் செய்யப்பட்டபோது அவரின் ‘துன்பம் நேர்கையில்’ பாடலை ஔவை தி.க. சண்முகம் உருக்கமாகப் பாடினார்.
பாரதிதாசன் எழுதிய மகாகவி பாரதியார் திரைப்பட உரையாடல் ஏடுகளைத் தேடி எடுத்து ஆய்ந்து அறிந்து வரலாற்றுப் பெருநூலாக அவரின் மகன் மன்னர் மன்னன் ‘பாட்டுப் பறவைகள்’ என்ற பெயரில் நூலாக வெளியிட்டார்.
பாரதிதாசன் வாழ்க்கை வரலாற்றினை ‘பாட்டுக்குள் பாரதிதாசன்’ என்ற தலைப்பில் பாவேந்தரின் பெயரன் கோ. பாரதி நாடக நூலாக எழுதி வெளியிட்டார்.
1971-ஆம் ஆண்டில் புதுச்சேரி அரசின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலான ‘வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே’ என்று தொடங்கும் பாரதிதாசன் பாடல், ஒலி வடிவம் பெற்றது பலராலும் வரவேற்கப் பெற்றது.
சென்னை மெரீனா கடற்கரையில் பாவேந்தருக்கு திருவுருவச் சிலையும்,
திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகமும்,
புதுச்சேரியில் பாரதிதாசன் மகளிர் கல்லூரியும் தொடங்கி நடைபெறுவது அவரின் பெயர் எந்நாளும் நிலைக்கும் வண்ணமாக அமைந்துள்ளது.
தமிழ்நாடு அரசு பாவேந்தரின் படைப்புகளை நாட்டுடமையாக்கி பாவேந்தர் குடும்பத்தாருக்கு பரிவு நிதி அளித்தது.
பாவேந்தர் பிறந்த வீட்டை புதுவை அரசே விலைக்கு வாங்கி நினைவுச் சின்னமாக்கி அந்த வீட்டில் நூல் நிலையம் ஒன்றையும் நடத்தி வருகிறது.
பாவேந்தரின் பிறந்த நாளினை தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை
தமிழ்க் கவிஞர் திருநாளாகக் கொண்டாடி மகிழ்கின்றது.
புரட்சிக் கவிஞரைக் கற்பதும், கற்பிப்பதும், ஆய்வதும், தமிழரின் அன்றாட வழக்கங்களில் ஒன்றாகிவிட்ட காலத்திற்குச் சான்றாக அவரைக் குறித்து தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் 500-க்கும் மேற்பட்ட முனைவர் பட்ட ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.
பதிப்புச் செம்மல் இளவழகனாரின் அயராத உழைப்பாலும் பெருமயற்சியாலும் 7,921 பக்கங்கள் கொண்ட 25 தொகுதிகளாக ‘பாவேந்தம்’
காப்பிய இலக்கியம் 9,
கதைப் பாடல்கள் 13,
கவிதை நாடகங்கள் 7, உரைநடை நாடக இலக்கியம் 44, கதை இலக்கியம் 46,
திரை இலக்கியம் 9,
பாட்டு இலக்கியம் 11,
மடல் இலக்கியம் 1,
கட்டுரை இலக்கியம் 14,
நாட்டுப் பாடல் இலக்கியம் 6
வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
கவிஞராய், நாடக ஆசிரியராய், மேடைச் சொற்பொழிவாளராய் இதழாசிரியராய்ப்
பன்முகங் கொண்டு
ஒருமுக நோக்கில் உறங்காதுழைத்த அப்பேறிவாற்றலை ஆயும்போது,
நமக்குப் பல பொன்னும், மணியும், வைரமும், முத்தும் புதையல் போல கிடைக்கின்றன.
தமிழ்நாட்டின் தன்மான எழுச்சிக்கும், தமிழர்கள் வாழ்வின் விழிப்புக்கும் திருப்பள்ளி எழுச்சி பாடிய வீர விளக்காகவும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தான் விளங்கினார்.
புரட்சிக் கவிஞர்
அகன்ற நெற்றியும்,அடர்ந்த மீசையும், செம்மாந்த நோக்கும் படைத்த அரிமாவைப் போல இருப்பார் என்று எனது பாட்டனார் கோவையில் புரட்சிக் கவிஞர் திருவுருவப் படத்தினை திறந்த போது கூறினார்.
வாழ்க புரட்சிக் கவிஞர் புகழ்!
இன்று (ஏப்.29) பாவேந்தர் பாரதிதாசனின் 133-ஆவது பிறந்த நாள்.
கட்டுரையாளர் :
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித் துறை,
தமிழக அரசு

Add a Comment