POST: 2024-05-30T10:25:26+05:30

தினமணி

செவ்வாய்க்கிழமை,
28 மே 2024
பக்கம் எண் : 5

சங்கரன்கோவிலில்
ரூ.3 கோடியில் பாவாணர் அரங்கம்-சிலை

தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஆய்வு

சங்கரன்கோவில், மே 27:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணருக்கு முழுஉருவச் சிலை மற்றும் அரங்கம் அமையவிருக்கும் இடத்தை தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஒளவை அருள் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.

மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் பிறந்த ஊரான சங்கரன்கோவிலில், அவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என பல்வேறு இலக்கிய அமைப்புகள், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனிடையே, திருநெல்வேலியில் நடைபெற்ற நெல்லை பொதிகைப் புத்தகத் திருவிழாவில்
ஈ.ராஜா எம்எல்ஏ பேசுகையில்,

சங்கரன்கோவிலில் தேவநேயப் பாவாணருக்கு மணிமண்டபம் கட்ட முதல்வர் நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் பாவாணரைப் போற்றும் வகையில் ரூ.3 கோடி மதிப்பில் நினைவிடம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து நகராட்சி சார்பில் சங்கரன்கோவில்- ராஜபாளையம் சாலையில் சார்நிலைக்கருவூலம் அருகே 40 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டது.

அந்த இடத்தில் தேவநேயப் பாவாணர் முழுஉருவச் சிலை மற்றும் அரங்கம் அமைப்பதற்கான பணிகள் மேற் கொள்ளப்படவுள்ளன.

இதையொட்டி, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஒளவை அருள், அவ்விடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் இடத்தின் மொத்த பரப்பளவு, கட்டடம் அமையவுள்ள இடம் அரங்கம் வரும் பகுதி ஆகியவை குறித்து கேட்டறிந்து ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிகழ்வில், திருநெல்வேலி தமிழ் வளர்ச்சித் துறை மண்டல உதவி இயக்குநர் சுந்தர், கண்காணிப்பாளர் ஷீலா ஜெபரூபி, மாவட்ட உதவி இயக்குநர் ரெஜினான் மேரி, நகராட்சி ஆணையர் சபாநாயகம், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் ஜான் ஆசீர், உதவி செயற்பொறியாளர்கள் மாலிக் பெரோஸ்கான், சுரேஷ் பாக்கியநாதன், உலக தமிழ் கழக மாநிலத் துணை பொதுச் செயலர் வீரபாலன், பாவாணரின் பேரன் சீவாபாவாணர், திருவள்ளுவர் கழக செயலர் வே.சங்கர் ராம், தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கச் செயலர் மூர்த்தி, தலைவர் ப.தண்டபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *