நம் நம்பிக்கை
ஜூன் 2024 பக்கம் : 30
கோவையைக் கலக்கிய கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா அவர்களின் 75ஆம் நூல் வெளியீட்டு விழா!
மரபின் மைந்தன் முத்தையாவின்
பழகிப் பார்த்ததில் இவர்கள்
சிறப்புரை ஆற்றிய திருமதி பாரதி பாஸ்கர் பேசுகையில்
மறக்க முடியாத மாமனிதர் அவ்வை நடராஜன் அவர்கள்.
நான் கல்லூரியில் முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்த போது, நான் இப்போது இருப்பது போல பிரபலமான பாரதியாக அல்லாமல் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவி.
கம்பன் கழகத்தின் ஆறு பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு ஒரு போட்டியில்கூட பரிசு வாங்காமல் வீட்டுக்குப் போன மாணவி நான்.
சென்னை கம்பன் கழகத்தில் திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், சீறாபுராணம், சீவகசிந்தாமணி மற்றும் பெரியபுராணம் என ஆறு போட்டிகள் நடத்துவார்கள்.
அதில் மூன்று போட்டிகளுக்கு அவ்வை அவர்கள் தான் நீதிபதி.
நான் ஆறு போட்டிகளிலும் பரிசு வெல்லவில்லை.
அப்போது எனக்கிருந்த அசட்டு துணிச்சலில், அவர் வீட்டுக்கே சென்றுவிட்டேன்.
“நான் இன்னும் எப்படி சிறப்பாக செய்திருக்கலாம்?
எனக்கு ஏன் பரிசு கிடைக்கவில்லை” என நேராக கேட்டேன்.
அவ்வை அதற்கு நேரடி பதில் சொல்லவில்லை.
மாறாக “நீ திருக்குறள் பேசினாயா?” என்று கேட்டார்.
நான் “ஆம்” என்றேன்.
“பரிசு கிடைத்ததா?” என்றார்.
“கிடைக்கலன்னு தானே சார் வந்திருக்கேன்” என்றேன்.
“திருவள்ளுவர், மற்றவரைப் போல திறன் இல்லாதவர்களுக்கு ரிசர்வேஷன் கொடுக்கணும்னு ஒரு திருக்குறள்ல சொல்லியிருக்காரே ?
உனக்கு தெரியுமா?” என்றார்.
எனக்கு திருக்குறளே அப்போது தெரியாது,
இதில் மக்களுக்கான தனிப்பட்ட உரிமைகள் குறித்த குறள் எனக்கு தெரியாது.
எனவே “ரிசர்வேசன் எப்போது வந்தது,
வள்ளுவர் எப்போதோ வந்துவிட்டார்.
என்ன சார் இப்படி சொல்கிறீர்களே” எனக் கேட்டேன்.
அவர், “பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அது நோக்கி வாழ்வார் பலர்
என ஒரு குறள் இருக்கில்லையா?
அதைப் பார்” என சொல்லிவிட்டு போய்விட்டார்.
ஒரு வேந்தன் என்பவன் பொதுவாக பார்க்க வேண்டும் என எதிர்ப்பார்ப்போம்.
எல்லாரையும் ஒன்று போல நோக்க வேண்டியது வேந்தனுடைய கடமை.
அப்படிப்பட்ட ஒரு அரசன் மக்களின் சிறப்புக்கு ஏற்றவாறு வரிசையின்படி நோக்குவானாயின் அதுவே அவர்களின் வாழ்வாதாரமாக அமையும் என்கிறார் வள்ளுவர்,
இதை அவ்வை அவர்கள் எனக்குச் சொன்னார்கள்.
இந்த சந்திப்பு என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று.
அந்தத் தலைமுறையில் இருந்தவர்கள், தமிழின் பேராசான்கள்…
அவர்களுக்கு இருந்த அணுகுமுறைதான் எங்களைப் போன்ற பல பேர், தமிழைப் பாடமாக எடுத்துப் படித்திராத பல பேரை அந்தத்துறைக்கு வரவழைத்தது என்பது அவர்களின் அன்பினாலும் ஆதரவினாலும் தான்.
அவ்வை என்றால் அவ்வை தான்.
அவரோடு பழகியது குறித்து முத்தையா அவர்கள் எழுதியிருக்கிறார்.
மேடை ஆளுமைகளை பார்க்கிற போது அவர்களில் இருந்து சொற்கள் வருகிறதா அல்லது அவர்கள் மூலமாக சொற்கள் வருகிறதா என்று நமக்குத் தெரியாது.
ஏனென்றால் மேடையிலிருந்து இறங்கிய பிறகு அவர்கள் வேறொருவரை போல இருப்பார்கள்.
அவ்வையினுடைய பயணம் என்பது முத்தையா அவர்கள் குறிப்பிட்டது போல தான் இருக்கும்.

Add a Comment