ஔவையின் சிந்தனைப் புதையல்:
நூல் பாராட்டுரை
முனைவர் ஆ. மணி
6.4.24
கடிதம் என்பது இலக்கியமாக மலரும் என்பதற்கு இளங்கோவடிகளில் படைப்பாகிய சிலப்பதிகாரமே முதற்பெருஞ்சான்று.
தொன்மைக் காலம் முதலே கடிதம் தமிழர் வாழ்வில் இன்றியமையா இடம்பெற்றுள்ளது என்னும் உண்மைக்குச் சான்றாகவும் சிலப்பதிகாரம் அமைந்துள்ள உண்மை அறியப்பட வேண்டிய ஒன்று.
திருவருட்பாவினைத் தமிழுக்குத் தந்த வள்ளல் பெருமானார் கடித இலக்கிய முன்னோடியாகவும் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் அவர்களால் பாராட்டப்படுவதையும் காண்கின்றோம்.
தமிழில் கிடைக்கின்ற கடித இலக்கியங்களை,
உண்மைக் கடித வடிவில் அமைந்தவை
1) கருமுத்துத் தியாகராச செட்டியார் கடிதங்கள்
2) டாக்டர் மு.வ.வின் கடிதங்கள்
3) ரசிகமணி கடிதங்கள்
4) மறைமலையடிகளார் கடிதங்கள்
5) பாரதியின் கடிதங்கள்
புனைவுக் கடிதம் வடிவில் அமைந்தவை
1) மு.வ. – அன்னைக்கு, தங்கைக்கு, தம்பிக்கு, நண்பர்க்கு
2) அண்ணாதுரை – தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் (ஒன்பது தொகுதி)
3) கவியோகியின் கடிதங்கள், தலைவர்களுக்கு, முக்தி நெறி, வீரத் தமிழருக்கு, இல்லற நெறி – கட்டுரைத் தன்மையன.
மொழிபெயர்ப்புக் கடிதங்கள்
1) செஸ்டர்பீல்டின் கடிதங்கள் (1954)
2) டால்ஸ்டாய் கடிதங்கள் (1961)
3) பிளேட்டோவின் கடிதங்கள் (1965)
4) ஜவகர்லால் நேருவின் கடிதங்கள் (1941)
5) ஹோரேஸ் வால்போல் கடிதங்கள் (1949)
என்றெல்லாம் வகைப்படுத்துவர்.
கலைஞர் எழுதிய கடிதங்களும், உ.வே. சாமிநாதையர் கடிதங்களும், புதுமைபித்தன் கடிதங்களும், முடியரசனார் கடிதங்களும் இவ்வகையில் குறிக்கத்தக்கன.
அந்த வரிசையில் ஔவையின் கடிதங்களும்; சிந்தனைகளும் கோர்த்த புதையல் ஒன்று அவர்தம் திருமகனார் ஔவை அருள் அவர்களால் ஆக்கம் பெற்றிருக்கின்றது.
சென்னை, ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகத்தின் தமிழ்க்கொடையாக, தமிழர்களுக்கு விலையில்லாப் பதிப்பாக வழங்கி இருப்பது அறக்கொடையாகும்.
நல்ல தாளில் உயர்ந்த கட்டமைப்பில் நூல் வெளிவந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று.
ஔவையின் கைவண்ணமும், அருளின் செயல்வண்ணமும் நிறைந்த இத்தொகுப்பு தமிழகத்தின் தகைமை மிக்க தமிழர்களை இனம் காட்டுகின்றது.
ஒரு நெடிய தமிழ்த் தலைமுறையின் தொடர் தமிழ்ப் பயணமாகவே இந்த சிந்தனைப் புதையலும் அமைகின்றது.
இந்த நூலைப் பார்க்கும்பொழுது ஔவையின் கைவண்ணத்தில் நாமும் இடம்பெறாமல் போனோமே என்ற ஏக்கம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.
“மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்”
எனச் சொல்லத்தக்க தமிழ்ச்செயலை ஔவை அருள் ஆற்றியிருக்கின்றார்.
அவர்தம் பணியும், இந்த நூலாக்கத்தில் பெரும்பங்காற்றிய ஔவையின் தனிச் செயலர் பொன்னேரி பிரதாப் அவர்களின் பணியும் போற்றுதலுக்குரியது.

Add a Comment