அரசின் பங்களிப்போடு, ஆர்வமுடைய தனியாரின் பங்களிப்பும் தவிர்க்க முடியாதென்ற தொலைநோக்குப் பார்வையோடு,
அறிவியலும் தொழில் நுட்பமும் போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்த இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியான, 1997 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் தனியார் மின் திட்டங்களை நிறுவுவதற்கு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவன வாயிலாக உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்பட்டன…
மனங்கவரும் மலேசிய நாட்டின் தமிழ்ப் பெருமக்கள், தொல்பழங்காலம் முதலே தாய்த்தமிழ் நாட்டின் அன்பினைப் பெற்ற சீனர்களுடன் இணைந்துத் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு நிறுவன வாயிலாகப் போட்டியிட்டனர்.
அப்படி வந்த தமிழ்ப் படையினருக்குத் தலைவராக, தன்னிகரற்ற தொண்டராகத் திரு. ஷின் ஷான்(Mr Chin Chan) திகழ்ந்தார்..
அவர் நடத்திய நிறுவனத்தின் பெயர் “ப்ராஜெக்ட் கயாங்கன்”
(Projek Kayankan)என்பதாகும்…
செல்வச் சீமானாக, கொழிக்கும் இளமையுடன் காட்சிக்கு எளியவராக, கடுஞ்சொல் பேசாதவராக, காண்போர் உள்ளங்களையும் கவருகின்ற புன்னகையுடன் நடந்து வந்தபோது தண்டமிழ்நாட்டுப் பெருங்குடிகள் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
ஷின் ஷான் அவர்களின் கண் பட்டால் பூவாகும். கரம் பட்டால் பொன்னாகும்.
மின் திட்டத்திற்கான ஆயத்தப் பணிகளை செய்யும் பொழுதே பெருஞ்செலவு செய்து, திட்ட நடைமுறைகளின் பேருருவைக் காட்டினார்..
தன்னுடைய நிறுவனத்தின் வாயிலாக அந்நாட்களில் மாபெரும் நிறுவனங்களாக வெற்றி வாகை சூடிய பெட்ரோனாஸ்,
மோபில்,
புக்கிட் கெட்டில், தெர்மாக்ஸ், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியோரிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு மின் திட்டத்தினை நடத்துவதற்கு நடைபெற்ற கூட்டங்களில் பங்கு கொண்ட பாங்கினை இன்றும் என் கண்களில் நிழலாடுகிறது
மின் திட்டத்திற்கான நிலம் வாங்கப்பட்ட பொழுது, திருச்சியில் மண் பூசை விழாவில் பெருமிதமாகப் பட்டுச்சட்டை, வேட்டியுடன் அவர் உலா வந்ததைக் காண ஆயிரம் கண் வேண்டுமென்று வாழ்த்துப் பெற்றார்..
மின் திட்டப் பணியில் உரப்பொருளில் மாற்றங்கள் நிகழ்ந்ததனால் நடைபெற வேண்டிய மின் திட்டப் பணிகள் நின்றுபோயின.
எதற்கும் மனம் தளராத
ஷின் ஷான் மின் திட்டத்தை விட்டுவிட்டு வேறு பணிக்குச் சென்றார்…
நம்மை போல ஒரு நாளும் நடந்த கதை; கடந்த பாதை என்று யாரிடமும் பேசவில்லை …….…
அப்போதே மலர்ந்த மலர் போலே என்றும் சிரித்த முகம்; விலகாத மகிழ்ச்சி என்றே வாழ்ந்து காட்டினார்..
பல நண்பர்கள் பிரிந்த பொழுதும் உதிர்ந்த பொழுதும் உடனிருந்து ஆவன செய்தார்..
என் மீது தணியாத அன்பும் ஆர்வமும் காட்டுவார்.. கை நீட்டிய பொருளைக் கை மடங்கும் முன்னே முகமலர்ச்சியோடு தருவார்.
மலேசியாவில் உள்ள மலைக்க வைக்கும் கெண்டிங் மலைத் தீவுக்கு அழைத்துச் சென்று வியக்கத்தக்க மாபெரும் சூதாட்ட அரங்கை காண்பித்த போது அசந்து விட்டேன்..
திரு ஷின் ஷான் அவர்களின் நெருங்கிய நண்பரான
திரு நல்ல குமார் அவர்களும் உடனிருக்கும் வேளையில் கயாங்கன் என்ற உங்கள் நிறுவனத்தின் பெயருக்குக் காரணம் கேட்டபோது இருவரும் இணைந்து உரக்கச் சிரித்தனர்
பிறகு சொன்னார்கள்.
கயாங்கன் என்றால்
இந்திர லோகம் என்பது பொருளாகும் என்று.
இந்திரலோகத்தைத் தமிழ் மண்ணில் படைக்க வந்த அடங்காத தொழில் ஆர்வமும் தோல்விகளைக் கண்டு மடங்காதவருமான
அண்ணல் ஷின் ஷான் 21.7.24 ஞாயிற்றுக்கிழமை அன்று மலேசியாவில் தன்னுடைய
61 ஆம் வயதில் மறைந்தார் என்பது தமிழ் நாட்டுக்கும் பேரிழப்பன்றோ?.
அண்ணல் மறைந்தார் என்ற செய்திக்கேட்டு நெஞ்சமெல்லாம் துடிக்கின்றது.
சாவே உனக்கு ஒரு சாவு வராதா? என்றே முன்னைக் கவிஞனைப் போல வருந்துகிறேன்.
ஓயாத உழைப்பாளி ஓய்ந்து விட்டார் என்று கண்கள் குளமாயின.
நெஞ்சம் கலங்கி வருந்துகிறேன்.
Add a Comment