உரைவேந்தரும் பாவேந்தரும் நெருங்கிய நட்பின் மேன்மை குறித்த அருமையான கட்டுரை
உரைவேந்தர் ஔவை சு. துரைசாமி பிள்ளை பழுத்த சைவர்; ஆத்திகர்.
பாவேந்தர் பாரதிதாசன் பழுத்த சீர்திருத்தவாதி; நாத்திகர். என்றாலும்
தமிழ் இந்த
இரு துருவங்களையும் இணைக்கும் பாலமாக இருந்து, இவர்கள் நட்பை வளர்த்தது.
கொள்கை வேறுபாடு எப்போதும் இவர்கள் குறுக்கே நின்றதில்லை.
இத்திருநீற்றுச் செல்வர் தம் உள்ளத்தில் பாவேந்தருக்காக ஒதுக்கியிருந்த இடத்தை நம் பார்வையில் படும்படி இக்கட்டுரையின் வாயிலாக உறவே வேந்தர் தன் எழுத்தால் திறந்து வெளிப்படுத்துகிறார்.
என் சொந்தவூர் வடவார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒளவையார் குப்பம்.
நான் செய்யாற்றில் ஆசிரியராகப் பணி புரிந்த நேரத்தில் பாவேந்தர் புதுவையில் ஆசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்தால், மயிலம் முருகன் பேரில் எனக்கும் ஈடுபாடு; அவருக்கும் ஈடுபாடு.
அவர் மயிலம் முருகன் மீது ‘சுப்பிரமணியர் துதியமுது’ பாடினார்.
நானும் முருகனைப்பற்றிப் பாடல் எழுதும் பண்புடையேன்.
மயிலம் கோவிலில் அவரும் நானும் சந்தித்து அளவளாவுவோம்.
நான் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் நூலகராக இருந்து கொண்டு கரந்தைக் கவியரசு வெங்கடாசலம் பிள்ளையிடம் தமிழ்ப் பயின்றேன்.
அப்போது பாரதிதாசனார் தஞ்சாவூர் வரும்போதெல்லாம் கரந்தை தமிழ்ச் சங்கத்துக்கு வருவார்.
எங்கள் நட்பு வளர்ந்தது.
சுயமரியாதைக் கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் நான்
செல்வதுண்டு ;
ஆனால் தீவிரமாகப் பங்கேற்பதில்லை.
திருவாரூர்ச் சுயமரியாதை மாநாட்டில் சந்தித்தோம்;
ஒன்றாகத் தங்கியிருந்தோம்.
நான் உரை எழுதிய
ஐங்குறு நூறு – மருதத்திணை வெளிவந்தபோது பாரதிதாசனாரின் பாடல் முதல் தொகுதியில் வெளியாயிற்று.
ஞானியார் சுவாமிகள் தலைமையில் சைவ சமாஜக் கூட்டம் புதுவையில் நடைபெற்றது.
நானும் மணி. கோடீசுவரனும் கூட்டத்துக்குச் சென்றிருந்தபோது பாரதிதாசனார் வீட்டில் தங்கியிருந்தோம்.
தமிழைப் பற்றியும் சைவத்தைப் பற்றியும் ஆர்வத்தோடு பேசுவார்.
நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த போது, அடிக்கடி அவரின் மனைவியோடு எங்கள் வீட்டுக்கு வருவார்.
அவர் மனைவிக்கும் என் மனைவிக்கும் நெருங்கிய நட்பு.
தங்கள் சுகதுக்கங்களை நீண்டநேரம் பரிமாறிக் கொள்வர்.
சில சமயங்களில் மனைவியை எங்கள் வீட்டில் விட்டுவிட்டு இரண்டொருநாள் வெளியூர் சென்று விட்டு மீண்டும் வந்து அழைத்துப் போவார்.
தஞ்சை, நாகர்கோவில், திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடைபெற்ற புலவர் குழுவில் நாங்கள் ஒன்றாகக் கூடியிருக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
நாகர்கோயிலில் நடந்த புலவர் குழுவுக்குச் சென்றிருந்த போது என் மாணவன்
நாஞ்சில் ஆரிது வீட்டில் தங்கியிருந்தோம்.
காலையில் கன்னியாகுமரி சென்று எழுகதிரின் அழகைக் கண்டுகளித்துத் திரும்பினோம்.
பச்சையப்பர் கல்லூரிப் பேராசிரியரும் மறைமலையாரின் மாணவருமான
மணி. திருநாவுக்கரசின் தம்பி மணி. கோடீசுவரன் வேலூர் மகந்தை உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்: ஆங்கிலத்தில் சிறந்த பேச்சாளர்.
நாங்கள் தனியாக இருக்கும்போது
‘நான் பாடும் பாட்டிலுள்ள குறை பற்றிச் சொல்லு பார்ப்போம். நீர் சொன்னால் சரியாக இருக்கும்’ என்று கேட்பார்.
‘நான் குறை சொல்லமாட்டேன்; குறையும் இல்லை’ என்று நான் சொல்லுவேன்.
புதுவையிலே ஆட்சிக்கு வரும் தலைவர்களெல்லாம் நீங்கள் திட்டினால் பொறுத்துக் கொள்கிறார்களே! ஏன்?’ என்று நான் கேட்பேன்.
‘எல்லாத் தலைவனும் 1932 லிருந்தே எனக்குப் பழக்கம்’ என்று அவர் சொல்லுவார்.
நாங்கள்
அரசியல்வாதிகளாயிருந்தால் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புண்டு;
நாங்கள் இலக்கியவாதிகள். எப்போதாவது இலக்கியக் கூட்டங்களில் சந்திப்போம்.
சந்திக்கும் போது ஒருவரையொருவர் கேலிசெய்து சிரித்துப்பேசி மகிழ்வது எங்கள் வாடிக்கை.
நாங்கள் கூடியிருப்பதையும் பேசி மகிழ்வதையும் எல்லாரும் வியப்போடு பார்ப்பார்கள்.
Add a Comment