மார்கழி 1
16.12.2024
திருப்பாவை பேருரை
••••••••••••••••••••••••••••••••
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
===================================
பாடல் – 1
========
“மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை யிளஞ்சிங்கம்
கார்மேனிச்செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே! நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்!”
– திருப்பாவை செய்.1)
நல்ல சர்க்கரை இட்டுச் செய்த பொங்கல் முழுவதும் பாலிலே வெந்தது. சோறு மூடும்படிக்கு நெய் பெய்தது. எடுத்தாலோ, முழங்கை வழி வழியும். “பாற்சோறு மூட செய் பெய்து முழங்கை வழி வார“ – என்றாளே, ஆண்டாள். அப்படிப் போல ! நமக்குக் கிடைத்தால் என்ன செய்வோம்? மூலை முடுக்குகள் தேடி ஒளிப்போம். தனிமையில் இருந்து உண்டு மகிழுவோம். நாம் மட்டும் இல்லை. நம்மில் பலரும் இப்படித்தான். “க்ஷருத்ர விஷயம்“ என்றால், தாழ்வான பொருள். “க்ஷருத்ரவிஷயாநுபவத்துக்குத் தனிமையே தேட்டம்“ – என்பர் மேலோர்.
ஆனால், “பகவத்விஷயத்துக்கு“ மட்டும் தனிமை ஆகாது. துணை தேடுவதே தேட்டம். இறை அநுபவ நுகர்வுகளுக்கு பகவத்விஷயம் என்று பெயர். அதில் ஈடுபட்டவர்கள் பாகவதர்கள் எனப்படுவர். “உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன். என்னையும் உன்னில் இட்டேன்“ – என்கிறபடி, எப்போது பகவத்தியானபரராகவே இருப்பர். இறைவனைப் பற்றித் தெரிந்தும் எழுதியும் வாசித்தும், கேட்டும் வணங்கியும், வழிபட்டும், பூசித்தும் அவர் பொழுது போகும். இதனால், அவர்கட்கு “நிரதிசயப் பேரின்பம்“ கிட்டும். அதனைத் தடங்களாக அனுபவிக்க விரும்பமாட்டார்கள். தான் பெற்ற இன்பம் மற்றையோரும் பெற வேண்டும் என்பதில் விருப்பம் அதிகம். அதனால், அனைவரையும் “சேரவாரும்“ என கூப்பிட்டு அழைப்பது அவர்தம் இயல்பு, திவ்யநாம பஜனை, வேத பாராயணம், இவை கோஷ்டி சேர்ந்தே நடைபெறுவது கண்கூடு.
ஆழ்வார்கள் பக்திப் பெருவெள்ளத்தில் கரைந்து மூழ்கியவர்கள். இறைவனால் மதிநலம் அருளப்பெற்றவரும் கூட. ஊரும் நாடும் தம்மைப் போல ஆகி, இறைநலம் துய்த்துப் பேரின்பம் பெறவேண்டும் என்கிற உயரிய கோட்பாடு உடையவர்கள். “அயர்ந்து வீழ்ந்து அளிய மாந்தர் கவலையுள் படுகின்றார் என்று அதனுக்கே கவல்கின்றேனே“ – மனிதர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பர். ஆகில் நரகம் எல்லாம் புல் எழுந்து ஒழியும் அன்றே“ – திருமால் திருநாமம் நானும் சொன்னேன். நமரும் அழைமி – கூடும் மனம் உடையீர் வந்து கூடுமினோ“ – “பாடும் மனம் உடையீர் வந்து பல்லாண்டு பாடுமினோ“ துஞ்சும் போது அழைமின், துயர்வரில் நினைமின், துயர் இவீர் சொல்லினும் நன்றாம்“ – நஞ்சு தான் கண்டீர். நம்முடை வினைக்கு நாராயணா எனும் நாமம்‘ – என்று எல்லாம், ஆழ்வார் திருவாக்குகள் சிறந்த மனிதாபிமானம் விரிந்த மனம், பரந்த நோக்கு, விழுமிய கோட்பாடு பிறர் நலம் போற்றும் பேருறவு – ஆகியவற்றை இவைகொண்டு உணரலாம் இல்லையா? இவ் ஆழ்வார்களுள் தலைசிறந்தவள் ஸ்ரீ ஆண்டாள். “ஆழ்வார்கள் தம் செயல் விஞ்சிய தன்மையள்“ என்பர் மணவாள மாமுனிகள்.
“பறவை ஏறும் பரம புருஷன்“ திருமால். அவனையே மணவாளனாகக் கொள்ள விரும்பினாள் ஆண்டாள். “மானிடவர்க்கு என்று பேச்சுப் படில் வாழ கில்லேன்“ என்று அவள் முடிவு. விரும்பிய கணவனை அடைய கன்னியர் நோற்கும் நோன்பு மார்கழி நோன்பு. தோழியரோடு கூடி அதனை நோற்கத் தொடங்கினாள். அதற்குச் செய்யும் கிரிசைகள் பலவுண்டு. அவற்றுள் முதலாவது நாட்காலே நீராடுதல் ஆகும். முந்துற எழுந்த அவள் நீராட மற்றையோரை அழைக்கிறாள். “நீராடப் போதுவீர் போதுமினோ“ என்று! நோன்புக்காக ஆறுகுளங்களில் குளிக்கப் போகிறவர்கள் எல்லாம் போகுங்கள்“ என்பது இதன் பொருள்.
“நீராட வருகிறவர்கள் எல்லோரும் வாருங்கள்“ என்று சொல்லி, தான் தலைமை தாங்கி உடன் புறப்படுவது அல்லவா நல்லது. விட்டேத்தியாக ஆண்டாள், ‘போகிறவர்கள் போங்கள்“ என்கிறாளே என்று தோற்றும் உண்மை அப்படி இல்லை. முந்துற எழுந்து வந்தவர்களை நோக்கிக் கூறும் பாசுரம் இது. மேலும், பலரைச் சென்று எழுப்பிவர வேண்டியிருக்கிறது. ஆகவே “போகிறவர் போங்கள்“ நான் பிறரையும் எழுப்பி அழைத்து வருகிறேன் என்ற கருத்திலே சொல்லுவது இது. அன்புடைமைக்கோ அன்றி உறவு முறைக்கோ குறைவு வராது.
“நீராடப் போதுவீர் போதுமினோ“ என்பது போல – பாவையுள் “நாட்காலே நீராடி“ – நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்“ – நாங்களும் மகிழ்ந்து நீராட – “நீராடேதே கிடத்திரீயா“ – இப்போதே எம்மை நீராட்டு“ என ஆண்டாள். பல இடங்களில் நீராட்டம் பற்றிப் பேசியுள்ளாள் அவள். ஆனால், ஆற்றிலோ குளத்திலோ சென்று நீராடியதாகப் பாசுரம் கிடையாது. திருவெம்பாவையில் – “எம்பிரானும் பிராட்டியும் போன்றிலங்கும் பொங்கும் மடு. அதில் புகுந்து ஆடுவோம்“ – என்று மணிவாசகர் கூறுகிறார். திருப்பாவையுள் நீராட்டம் பற்றிப் பேச்சே கிடையாது. இதன் காரணம் என்ன? ஆண்டாளுக்கு, நீராட்டம் நோன்பு எல்லாம் ஒரு வியாஜமே தவிர வேறில்லை. வெளிப்பட்டுத் தோன்றும் காரணம்“ வியாஜம்“ எனப்படும். அவள் கருதிய உள்ளுரைப் பொருள் வேறு. அதனால், நோன்புக்காகக் குளித்தல் வாக்யார்த்தம். கண்ணனைக் கூடிமகிழுதல் த்வன்யார்த்தம். “கிருஷ்ண ஸம்ஸ்லேஷம் தான் அவளுக்குப் புருஷார்தம். கண்ணனோடு கூடி மகிழுவதே அவளுக்கு நீராட்டம் என்பது!
குளத்திலோ குட்டையிலோ படிந்து நீராடுகிறோம். அதனால் பெறும் பயன் என்ன? வெப்பத்தால் வந்த உடற்சூடு குறைகிறது. உடலில் உள்ள இழுக்கும் அழுக்கும் கழிகிறது. உடல் தூய்மை பெற்று உள்ளம் குளிருகிறது. நாமும் மலர்ச்சியும் கிளர்ச்சியும் பெற்று புத்துயிர் பெறுகிறோம். பகவத் குணாநுபவமும் இது போலத்தான் ! விரகதாபம் தணிந்து, நம்மீதுள்ள பாபமும் சாபமும் போய், தூயவராகி உள்ளம் குளிருகிறோம் இல்லையா? இதனால் இறைவனைப் பொய்கையாகவும், அவனது கூட்டுறவை நீராடலாகவும் பேசுவது தமிழ் வழக்கு“ வாசத்தடம்போல் வருவானை“ – தயரதன் பெற்ற மரகத மணித்தடம்“ என்று ஆழ்வார் பாசுரம்“ முற்குணத்தவரே முதல்வர். அவர் நற்குணக்கடல் ஆடுதல் நன்று“ என்று கம்பன் பேச்சு. “பொங்கும் மல இருள் உற்று உறங்காமல் இறைவன் அருட்சவத்தில் மூழ்க வருக எனல்“ என்று, சைவமும் பேசும்.
நீராடிய மகளிர் தோற்றத்தில் ஒரு மாறுதல் உண்டு. கொவ்வை வாய் வளர்க்கும். மைக்கருங்கண் சிவக்கும். இதே மாறுதல் ஆடவரோடு கூடிய மகளிர்க்கும் ஏற்படும் “கொவ்வை வாய் வளர்க்க மைக்கருங்கண்ணும் சிவப்பவே, நும் அன்னைமார்கள் சந்தையப்படில் வீணில் நீவிர் பரிகரித்தல் பாவமே“ – நீராடும் பெண்ணை விரைவில் கரையேற வேண்டும். தலைவன் பேச்சிது. இறைவனோடு கூடி மகிழ்வோருக்கும் உரிய அடையாளம் இதுவே. “காலாழும் நெஞ்சு அழியும் கண் கூழலும்“ என்றுமாறு வரும் பரவச நிலையில் இங்ஙனம் ஏற்படும். கல்வியைப் பழந்தமிழ் இலக்கியங்கள் சுனையாடல்“ என்றே பேசும். மலையில் உள்ள அருவி நீரில் ஆணும் பெண்ணும் மறைந்து குளித்தலுக்குச் சுனையாடல் என்று பேர். வடமொழியாளரும் இக்கருத்தினை உடன்படுவர். “ஏஷப்ரஹ்மப் பிரவிஷ்டோஸ்மி க்ரீஷமே சீதமிவஹ்ரதம்“ – என்று பகவத் ஸம்ச்வேஷத்துக்கு குளிர்ந்த மருவைத் திருஷ்டாந்தமாகச் சொல்லிற்று.
இதனால் ஆண்டாள் – நோன்பு, நீராட்டம், பறைபெறுதல் என்பது எல்லாமுமே வெறும் வியாஜமாத்திரமேயாம். பகவத்சம்ஸ்வேஷம் என்பதே இதன் உள்ளுறை. நோன்பு என்று நாட்டிருக்கு இசையும்படி ஒரு வெளிக்காரணம் கொள்ளுகிறாள். எம்பெருமான் பக்கலிலே அணுகி, இற்றைப் பறைகொள்வாள் அன்று. யாம் வந்த காரணம் ஆராய்ந்து அருள், என்று பேசுகிறாள். யாம் போற்றும் பொருள்கேளாய் என்று விண்ணப்பிக்கிறாள். இறுதியில், இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் நாம் உற்றோமே ஆவோம். உனக்கே நாம் ஆட் செய்வோம். மற்றை நம் காமங்கள் மாற்று – என்று உட்கருத்தை வெளியிட்டு நிற்கிறாள். உனக்கு என்றும் அடிமைப்பட்டது இவ்வாத்மா. அதன் சேஷத்வம் அழியாதபடி அதற்கு இயைந்ததான கைங்கரியமாகிற குற்றேவல் தந்து ஆத்மரக்ஷணம் செய்தருளுக“ என்பதே திருப்பாவைக்கு உள்ளுறை.
இறைவனது திருநாமங்கள் மிகப்பல. அவை அனைத்தும் அவனது கல்யாண குணங்களையே குறிக்கும். குணாநுபவம் அவன்பால் நம்மை ஈடுபடுத்தி, ஆசையைப் பெருக்கும். ஆசைப் பெருக்கம் நிற்கின்றது எல்லாம் அவனுருவாகத் தோற்றம் அளிக்கும். இது பெருகப்பெருக நினைவு முதிர்ச்சியாகிய பாவனாப் பிரகர்ஷம் வரும். இதன்பிறகு உருஸளித் தோற்றமாக இறைக்காட்சி புலப்படும். இறுதியில், அவனோடு ஆடுவதும் கூடுவதுமாகி கல்வியும் புலவியும் தந்து பேரின்பம் அளிக்கும் இதன் சுவை கண்டோர், “இச்சுவை தவிர- அச்சுவை பெறிலும் வேண்டேன்“ என்பர். இப்படி பாடல் அடியாக இறைவனோடு கூடி மகிழும் பேற்றினை – “பிரத்யக்ஷஸாம்யம்“ என சாத்திரங்கள் கூறும் “பாவனை அதனைக்கூடில் அவனை நாம் கூடலாமே“ – பாவித்தால் போதும் பரமநிலை எய்துதற்கே‘ என அநுபவனாளிகள் பேசுவர். ஆண்டாள் பாவைகாட்டும் பாதையாக இதனையே சுட்டினாள். சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்கு இப்பரிவு உரைப்பார். செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்“ – என்று! திருப்பாவை அநுசந்தான யாத்திரமே போதும் என்று கருத்து, பாடல் நெறி‘ எனப் பழைய தமிழ் நூல்கள் போற்றியதும் இதுவே‘ எந்த வேறுபாடும் இன்றி அனைவரும் படித்துப் பயன்பெறக்கூடியது இது. அதனாலேயே ‘போதுவீர் போதுமினோ“ என்று அனைவருக்கும் பொதுவாகப் பேசினாள்.
நீராட்டம் என்பது கண்ணனோடு கூடுதல் என்று ஆகிறது. ஆண்டாளோ, அவனை மணவாளனாக அடைய விரும்பினவள். அப்படியானால், தோழிமார்கள் எல்லோரையும் அவனோடு கூட நீராட அழைக்கலாமா? அழைப்பாளா? என்று கேட்க தோன்றும். இது உலகியல் கண்ணோட்டத்தோடு கூடிய கேள்வி. பரமார்தீக விஷயத்துக்கு இது சரியில்லை. உலகியலில் கல்வி என்பதே மெய்யுறு புணர்ச்சி பற்றியதே. ஆண்மீகத்தில் அவ்வண்ணமில்லை. ஏகதாரவிரதம் என்பது அதற்குக் கட்டில்லை“. இறைவன் ஒருவனே எல்லா ஜீவாத்மாக்களுக்கும் பரமபுருஷன். அவனை நோக்க ஜீவாத்மாக்கள் எல்லாமுமே நாயகியர்கள்“ என்கிறது சாஸ்திரம். நாயக நாயகுபாவம் என்கிற உறவுமுறை இதன் அடியாக வந்ததே ஆகும். பாவனை முதிர்ச்சியால் விளையும் மாணஸீக உறவே இது. ஜீவாத்மாக்கள் அனைவருக்கும் பொதுவாகையால் தான் போதுவீர் போதுமினோ என்று அழைத்தாள் ஆண்டாள்.
‘போதுமினோ‘ என்ற சொல்லுக்கு, எல்லோரும் போகுங்கள் என்று பொதுப்படப் பேசுவதாகவே பொருள். இன்னார் இனியார் என வேறுபடுத்தாது பகைவரையும் உட்படுத்திப் பேசும் பேச்சு. பகைவரையும் அகப்படுத்திப் பேசல் ஆகுமா? இவர்கட்கு பகைவர் ஆகுவார் பகவத் விரோதிகள். தவிர தமக்கு என்று தனிவிரோதிகள் கிடையாது. விரோதிகள் உட்பட அனைவரையும் திருத்திப் பணிகொள்ளுவது – என்பது வைஷ்ணவ தர்மம். ‘பயன் அன்று ஆகிலும் பாங்கு அவர் ஆயிலும். செயல் நன்றாகத் திருத்திப் பணிகொள்வான்‘ என்று பாசுரம் “தேநமைத்ரீ பவதுநே யதி ஜீவது மிச்சஸி“ உனக்குப் பிழைக்க வழிவேண்டுமானால் இராமபிரானது நட்பு உண்டாகக் கடவது – என்று சீதாபிராட்டி கூறினாள் இல்லையா? அது போல ஆண்டாளும் பகவத் விரோதிகளையும் திருத்தும் நோக்குடனேயே ‘போதுவீர் போதுமின்‘ என்கிறாள்.
‘ஆய்ச்சியர் சிறுமியரோய்‘ – என்னும் அளவுக்கு ஆண்டாள் இடைப் பெண்ணாக மாறினாள். ‘நெய்யுண்ணோம், பாலுண்ணோம்‘ என்று இடையர் பேச்சும் கைவந்தது. எழுப்பும் தோழியரோ தன்னோடு சமநிலையுடையவர்களாய் ஒத்த பருவத்தினர். தாங்கள் ஒருவரை ஒருவர் நினைத்தபடி சொல்லுகைக்கு ஈடான முறைமையும் உண்டு. அப்படி இருக்க, குளிக்கப் போங்கள் என்னாமல் நீராட என்று சொல்ல வேண்டியதில்லை. இங்கு, பொதிந்துள்ள சாஸ்திரார்த்தம் பிறிது ஒன்றுண்டு. ‘பெற்ற பிள்ளைகளாயிருந்தாலும் பகவத் ஸம்பந்தம் உடையவர்கள், ஆனால் அவர்கள் மிகவும் கௌரவிக்கத் தக்கவர்கள் – என்பது அது. “கணபுரம் கைதொழும் பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரோ – என்று பாசுரம். “பொற்றாமரைக் கயம் நீராடப் போளுள்“ – எனத் தாய்மகளைக் குறித்துப் பேசும் பேச்சு. இப்பேருண்மை துலங்கும்படி நீராடப் போதுவீர்“ எனப்பட்டது.
நீராட வாருங்கள் ‘என்னாமல் போதுமின்‘ என்றதிலும் பிறிதொரு கருத்து உண்டு. பரமபாகவதருடைய உடையும் நடையும்கூட வைணவர்கட்கு இன்பம் தரும். அது மட்டும் இன்றி, அவர்கட்கு வளர்ச்சியும் மலர்ச்சியும் அதுவே“ என்பது திருமாலடியார்களது கோட்பாடு. எனவே, அவர்கள் தன் சொற்கேட்டு போகும் வழிப்போக்கே இவர்கட்கு தன்பேறு ஆக இருக்கும் இல்லையா? அவர்கள் முன்னே போக, அந்த நடையழகு கண்டு களித்து தாங்கள் பின்னே போக நினைக்கிறாள் ஆண்டாள் !‘ நாங்கள் வாழும்படி புறப்பட்டு இங்ஙன் நடத்தல் ஆகாதோ? எங்கட்கு முன்னர் நடந்துபோய் எங்களை வாழ்வியுள்கோள்“ – என்றது கருத்து“. “போதுவீர் போதுமினோ“ என்றதில் இந்த நயமுண்டு.
நம்மைப் படைத்தவன் இறைவன். ரக்ஷிப்பவனும் அவனே ! அவனை அடைந்து தொண்டு பூண்டு ஒழுகுவதே நமது கடன்“- என்பது நமக்கு வகுத்த விஷயம். அவர்க்காநுபவம் போன்றவை வகுத்த தல்லாதது. அதற்குப் பல தகுதிகள் தேவை. வகுத்த விஷயத்தில் இச்சை ஒன்றே போதுமானது. இதில்லாமையாலே, பகவத் லாபத்தை இதுவரை நாம் இழந்தோம். ‘அல்லோம்‘ என்னாதார் அனைவரும் இதற்கு அதிகாரிகள். ஆசை உடையோர்க்கு எல்லாம் – ஆரியர்காள்! கூறுமின்“ என்றார் இராமாநுசரும். அப்படியே அவர் ஆனுயுடையோரை எல்லாம் “போதுவீர் போதுமின்“ என்று அழைத்து தரு மந்திரோபதேசமும்செய்தார். அவ்வண்ணமே ஆண்டாளும், “இச்சை தவிர வேறு தகுதி வேண்டியதில்லை. ஆனுயுடையோர் அனைவரும் நீராடப் போகலாம்“ என்கிறாள் “போகிறவர்கள் எல்லாம் போகலாம்‘ – என்ற கருத்திலே தான் ‘போதுவீர் போதுமினோ“ என்ற திருவாக்கு எழுந்தது

Add a Comment