எந்தையாரின் நெருங்கிய நண்பர், மலையாள இலக்கியவாணர் பத்மபூஷன் விருதாளர்
திரு எம்.டி. வாசுதேவன் நாயர் (13.7.1933-25.12.2024) மறைந்தார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு ஆற்றொணாத் துயருற்றேன்.
சாகித்திய அகாதெமி விருது தொடர்பான பாராட்டு விழாவின் போது, கொச்சியில் இரண்டு நாட்கள் அவர் இல்லத்தில் தங்கியிருந்து மகிழ்ந்ததைப் பேருவுகையுடன் எந்தையார் சொன்னதை அப்பாவின் இனிய நண்பர் மருத்துவர் பத்மாநந்தன் ஓசூரிலிருந்து தொலைபேசியில் தெரிவித்தார்.
சங்ககால மற்றும் தற்கால இலக்கியங்கள் குறித்து எந்தையாரும் அவரும் மணிக்கணக்கில் விவாதித்து இலக்கிய இன்பத்தில் திளைத்ததையும், திரு. வாசுதேவன் நாயர் அவர்களின் இல்லத்திலிருந்த அரும்பெரும் நூல்களைக் கொண்ட நூலகத்தைக் கண்டு வியப்புற்றதையும் எந்தையார் கூறக் கேட்டுள்ளேன்.
இலக்கியச் சிந்தையில் எந்தையாரை ஒத்திருந்தாலும், இணையற்ற புதுமைச் சிந்தனைகளின் புகலிடமாக
மாடத்து தெக்கேப்பாட்டு வாசுதேவன் நாயர் மிளிர்ந்தார்.
மலையாள மனோரமா இதழின் வாயிலாக தன் தடத்தை ஆழமாக பதித்ததோடு
21 மாநில திரைப்பட விருதுகளையும்
7தேசிய விருதுகளையும்
திரைப்படவுலகின் வாழ்நாள் சாதனையாளர் ஜே சி டேனியல் விருதையும்
கேரளா அரசின் உயரிய விருதான கேரள ஜோதி விருதினையும் ஞானபீட இலக்கிய விருதையும் பெற்றவராவார்.
இலக்கியத்தையே தன் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த திரு. எம்.டி. வாசுதேவன் நாயர் அவர்களின் மறைவு இந்திய இலக்கிய உலகத்திற்கு உள்ளவாறே பேரிழப்பேயன்றி வேறில்லை.
Add a Comment