கரந்தைப் புலவர் கல்லூரியிற் பயின்று, தமிழ் முழுதறிந்த தன்மையராகத் முழுமையாகப்பெற்ற தமிழாகரர் சாமி. தியாகராசன் மறைந்தார் என்ற செய்தி அறிந்து துயருற்றேன்.
சிவந்த மேனியும், சிரித்த முகமும், சிந்தனை மிளிரும் வகையில் சிவசொற்களை அணிந்து பேசும் தன்மையர் கண்டாரைக் கவர்ந்து ஈர்க்கும் பான்மையுடையன.
தேசிய உணர்விலும் பாரதியார் பாடல்களிலும் தம்மை ஆட்படுத்திக்கொண்டு அவர் ஆற்றிய பணிகள் பல.
நினைவில் வாழும் மூதறிஞர் தி.ந.இராமச்சந்திரன் அவர்களோடு சூழ இருந்த அவைக்களத்தில் சாமி.தியாகராசன் அவர்களுக்கும் தனித்த இடமும், மாசற்ற மனமும், பிறர் மனங்குளிரப் பேசும் திறமும் நுணுகிக் காணும் நுழைபுலமும்
தாம் பெற்ற சிந்தனை வளத்தை வழுவிலாத நடையில் வனப்புற எழுதும் திறத்தை பலமுறை எந்தையார் பாராட்டியிருக்கிறார்.
கருப்புச் சட்டை அணிந்த இளைஞராகக் காட்சி தந்த பேராசிரியர் சாமி தியாகராசன் கதருடை அணிந்ததோடு கடவுள்நெறி இணைந்தவராகப் பெருமிதமாகத் திகழ்ந்து வருவதைப் போல எனக்கெல்லாம் அப்படிப்பட்ட மாற்றங்கள் வரவில்லையே என்று எந்தையார் அடிக்கடி சொல்லி மகிழ்வார்.
தமிழ் வேளாகவும், தன்னிகரற்ற புரவலராகவும் ஒளிரும் சிவாலயா மோகன் அவர்களோடு சேர்ந்து திருக்குறள், பெரிய புராணப் பழைய உரைகளை தேடித் தொகுத்து வெளியிடும் பொறுப்பேற்றிருப்பதால் பேராசிரியர் அவர்களைச் சென்னையிலேயே கண்டு மகிழ முடிகிறது என்று அவரின் முத்து விழாவில் அப்பா குறிப்பிட்டது பசுமையாக உள்ளது.
எங்கள் அம்மா மறைந்தபோது புண்ணியவதி தாரா இன்று நம்மிடை இல்லை என்பது மாயமோ! மருக்கையோ! புரியவில்லை.
நம்மை மீறி நடைபெறும் காரியங்கட்குக் காலமே பொறுப்பாகின்றது என்று நெகிழ்ந்து எழுதிய இரங்கலுரை நெஞ்சத்தில் நிழலாடுகிறது.
உயர்ந்த குடிப்பிறப்பும்
ஓங்கிய திருவும் பாங்குறப்பெற்ற அண்ணல் இன்று நம்மிடை இல்லையே என்று யாரிடம் சொல்லி அழுவேன்!

Add a Comment