
பாண்டிய மன்னரை போன்ற தோற்றமும்
செம்மாந்த நடையும்
பெருமித குரலும்
கண்டாரைக் கவரும் காசிக்கோ என்கிற கண்ணு சிவகுமாரன்(23.12.1964-25.1.2025)
சனிக்கிழமை 25.1.25 அன்று காலை
மலேசிய மருத்துவமனையில் மறைந்தார் என்ற திடுக்கிடும் செய்தியை வழக்கறிஞர் சிவகுமார் தொலைபேசி வாயிலாக
சொன்ன போது
அந்தோ!
மணி நிகர் இனிய நண்பரை இழந்தோமே!
என்று துயரத்தில் வெம்பினேன்.
சென்ற மாதம் தான்(24.12.24) தனக்கு மணிவிழா மலேசியா வர வேண்டும் என்று அழைப்பிதழ் நீட்டிய கரத்தை என்னென்று சொல்வது…
வாய் திறந்தால் தமிழ் தான் உலகில் தலைசிறந்த மொழி
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதை அனைவரும் மறவாமல் கடைபிடிக்க வேண்டும்
அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று உரிமையுடன் நாள் தவறாமல் மலேசியாவில் இருந்து
எப்பொழுது தொலைபேசி எடுத்தாலும் வணக்கம் தமிழகம் என்று விளிக்கும் வணிக வித்தகர்
எப்படி நம்மை விட்டுப் பிரிந்தார்?
நாடு போற்றும் நயவுரை நம்பி அவர்களை சென்னைக்கு வரும்பொழுதெல்லாம் சந்தித்து அளவளாவும் வணிகச்செம்மலாக திகழ்ந்தவர்.
மாலத்தீவில் மாபெரும் அளவில் வணிகச் சிறகுகளை விரித்த நயத்தகு நாகரீகர்.
சென்னை வந்தவுடன் கந்தக்கோட்டத்தில் தவறாது வழிபடும் நண்பரை
முருகா கந்தா கதம்பா விரைந்து ஏன் அழைத்துக் கொண்டாய்?
நினைவில் வாழும் டான்ஸ்ரீ
சாமிவேலுவின் நெருக்க வளையத்தில் இருந்த பண்பாளர் திலகத்தை இழந்து விட்டோமே!
மரத்தால் என்ன செய்ய முடியும் என்று கேட்டால் அதில் மகத்தான பல வடிவங்களான நாற்காலிகளை, மேசைகளை, அறைகலன்களை ஏன் வீடுகளையே வடிவமைத்து மலேசியாவில் தொழிற்சாலையே உருவாக்கி மாலத்தீவு கடலிலேயே சுற்றுலாப்பயணர்களுக்கு உயர்தர மரக்குடில்களை வடிவமைத்த மறவர் எங்கள் காசிக்கோ என்று பெருமிதமாக 27 ஆண்டுகளுக்கு முன்பு நல்லறிஞர் நல்லகுமார் வாயிலாக அறிமுகம் செய்யப்பட்ட இணையற்ற நண்பரவார்.
25 ஆண்டுகளுக்கு முன்பே சென்னை தரமணியிலுள்ள டைடல் மென்பொருள் வளாகத்தில் உட்புற வாயிலில் மேற்கூரையில் வைரம் மின்னுவது போன்ற
வண்ணப்படிம உமிழ் விளக்குகளை உலகளாவிய ஒப்பந்த வாயிலாக வெற்றி பெற்று அணி செய்த
நுட்பவாணர் என்று பாராட்டப்பட்டவர்.
அவரின் போற்றுதலுக்குரிய வாழ்க்கைத் துணைவியார் திருமதி தேவிகா ராணி மற்றும் வெற்றித் திலகங்களான
இரு மகன்கள் தருமேந்திரன்
யுகேந்திரன்
செல்ல மகள் நித்திய லட்சுமிக்கும் மற்றும் இனிய நண்பர் நல்லகுமாருக்கும் என்ன ஆறுதல் சொல்வது?
இளவல் காசிக்கோ அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது
ஆழ்ந்த இரங்கலோடு
ஔவை அருள்
25.1.25
Add a Comment