

கோவையைத் தாண்டி மலையும் மலை சார்ந்த குறிஞ்சிப் பகுதியில் மகத்தான முல்லை நிலப்பரப்பில் மயக்கும் பொன்மாலைப் பொழுதில்
சென்னை கிறித்துவ மேனிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் இணைந்து பயின்று பிறகு சென்னை மாநிலக் கல்லூரி மற்றும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வெவ்வேறு பாடப்பிரிவுகளில் பயின்றாலும் ஆழ்ந்த நட்பு பாராட்டியதோடு அரிமாக்குருளைகளாகத் தொண்டு நிறுவனத்தில் இணைந்து
பணியாற்றிய இனிய நண்பர் டெமிட்ரியஸ் ஐசக் அவர்களை 48 ஆண்டுக் காலமாக அறிந்திருந்தாலும் வாழ்வில் சிறந்த நான்கு மணி நேரத்தினை ஒதுக்கிக்கொண்டு நாங்கள் இருவரும் அவரின் நீண்டு நெடிய பண்ணை இல்லத்தில் 21.2.25 வெள்ளிக்கிழமையன்று சந்தித்து மகிழ்ந்து அளவளாவினோம்.
தன்னந்தனியாக தன்னுடைய நுட்பமான அறிவு நலத்தால் யாரும் எளிதில் செய்ய முடியாத பணியினை தன்னுடைய செம்மாந்த பணியாக அமைத்துக் கொண்டு உலகம் சுற்றும் வாலிபராக வலம் வருவதைக் கேட்டு மகிழ்ந்தேன்.
அவரைச் சுற்றி மனிதர்களை விட பண்ணையைக் காக்கும் நான்கு கால் உயர் குடி விலங்குகள் நாள்தோறும் அவர் முன் நடனமாடும் வண்ண கோல மயில்கள்
துள்ளி ஓடும் முயல்கள் அங்கிங்கெனாதபடி பல நாட்டைச் சார்ந்த பலவண்ணக் கோழிகள், பறவைகள்
தொட்டுவிடும் தூரத்தில் யானைகள் என நிமிர்ந்து நிற்கும் நண்பரைப்பாராட்டி மகிழ்ந்தேன்.
பல ஆண்டுகள் சந்திக்காமல் இருந்தாலும் புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும் என்ற அருங்குறள் தொடர்களுக்கு ஏற்ப நட்பு பாராட்டிய
நண்பரைக் கண்டு திரும்பி வரும் பொழுது தான் தலைப்பில் சொன்ன வரிகள் நினைவில் வந்து மோதியது.
Add a Comment