

ஒளவை நடராசன்
ஒளவை துரைசாமி, லோகாம்பாள் பெற்ற பதினோறு பிள்ளைகளில், புகழ் பெற்ற பிள்ளை நீ என்று நீ பிறந்த ஆரணியை அடுத்த கோட்டுப்பாக்கத் தில் இருந்து, என் தந்தை பிறந்த ஒளவையார் குப்பம் ரெட்டணையில் தொடங்கி ஊர் மெச்சக் காரணம் நீதானே !
உன் இருபதாவது வயதிலேயே உன் தந்தையாரை இழந்ததால், நாதியில்லாமல் என் பாட்டி லட்சுமி வீட்டில் வளர்ந்தாயாம் !
உரக்க உரக்கப் பேசுவாய், கோபத்தில் கொதித்துப் போவாய். ஆனால் உனக்கு ஈரமனம், இளகிய போக்கு எழுத்துக் கூட்டிப் படிக்க மட்டும் தெரிந்த நீ, தினம் அதிகாலையில் திருவருட்பா பாடலை எப்படிப் பாடினாய் என்று இப்பொழுதும் ஆச்சர்யப்படுவேன். சித்தி பெண் ஞானாம்பாள், தாய் மாமன் ஏகாம்பரம், லட்சுமி பாட்டி, சந்திரமதியம்மாள் பாட்டி, நாங்கள் பதினோறு பேர், இத்தனை பேரையும் வைத்து அப்பா பார்த்த ஆசிரியர் தொழில் மூலம் கிடைத்த குறைந்த வருவாயை வைத்து, குறை இல்லாமல் குடும்பம் நடத்திய சிறந்த நிர்வாகி நீ ! எனது தந்தை கற்றுத் தேர்ந்த கல்விமான்.
ஆனாலும் அவரை, ” உங்களுக்கு என்ன தெரியும் ” என்று அடிக்கடி கூறுவாய். என் தந்தை கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல், எனக்கு என்ன தெரியும் என்று சொன்னால் அவளுக்கு என்ன தெரியும் என்று சொல்லிச் சிரிப்பார்.
உனக்கு 5 ஆண் பிள்ளைகள் இருந்தாலும், ஒரே பிள்ளை நான்தான் என்பாய், என் மகனுக்கு ஈடில்லை
என்பாய். ஒருமுறை அப்பாவைப் போல் ஆசிரியர் வேலைக்குப் போகிறேன், என்று செய்யாறில் இருக்கும் போது சொன்னேன். வேண்டாம்பா நீ அரசாங்க உத்தியோகத்தில் பெரிய ஆபீசரா போ என்றாய். ஆனாலும் நான் அப்பாவைப் போல் தஞ்சை சரபோசி கல்லூரியிலும், மதுரை தியாகராசர் கல்லூரியிலும் பேராசிரியராகப் பணிபுரிந்த போதும், நீ ஆசைப்பட்டது போல், டெல்லி ஆல் இண்டியா ரேடியோவில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றிய போதும், தமிழக அரசில் மொழி பெயர்ப்புத் துறை இயக்குநராக ஆனபோதும் ஆனந்தத்தில் திளைத்தாய், புரட் சித்தலைவர் எம்.ஜி. ஆர் தமிழ் மொழி வளர்ச்சி பண்பாட்டுத் துறை என்ற ஒரு துறையை புதிதாக உருவாக்கி என்னை அரசு செயலாளராக அழகு பார்த்தபோதும், மதுரை உலகத்தமிழ் மாநாடு நடந்தபோது முதல் முதலாக நம் வீட்டுக்கு தொலைபேசி வைக்கப்பட்ட போதும் ஒரு குழந்தையைப் போல் தொட்டுத் தொட்டு மகிழ்ந்தாயே !.
அப்பா மறைந்தவுடன் நீ பேசுவதையே நிறுத்திக் கொண்டாய், அமைதியே வடிவமாகிப் போனாய் இந்த நிலையில் உன்னை பொள் ளாச்சி மகாலிங்கம் மதுரை வந்து பார்த்த போதும், அப்பாவின் மாணவர் புலவர் கோவிந்தன் உன்னை விசாரித்த போதும், உணர்ச்சி வசப்பட்டுப் போனேன் மதுரை மருத்துவக் கல்லூரியில் என் மனைவி உனது மருமகள் தாரா நடராசன், என் தம்பிகள் மெய்கண்டான். நெடுமாறன் பிரபல மருத்துவர்கள் ஆனாலும் ஆயிரமாகட்டும் என்பிள்ளை நட ராசனை விடவா நீங்கள் பெரியவர்கள் என்று சொல்வாய் ! என் தந்தை எந்த பிள்ளைகள் வீட்டிலும் போய் இருக்கப் பிடிக்காது. ஆனால் உனக்கு ஒவ்வொரு பிள்ளைகள் வீட்டிலும் இருக்கப் பிடிக்கும்.
ராமநாதபுரத்தில் நீ நோய்வாய்ப்பட்டு கிடந்தபோது கடைசியாக நான் உன்னை பார்க்க வந்தேன். அப்பொழுது நான் உயர் அதிகாரி என்ற வகையில் நான் காரை விட்டு இறங்கியவுடன் 5 , 6 பேர் புடை சூழ நின்று வணக்கம் வைத்தார்கள், நானும் வணக்கம் சொன்னேன். இதைப் பார்த்த நீயும் கும் பிடு போட்டாய் ! அதை இன்று நினைத்தாலும் நெக்குருகிப் போகிறேன்.
சின்ன வயதில் சர்க்கரை டப்பாவை திருடி எடுத்துக் கொண்டு சாப்பிடுவேன். ஒவ்வொரு முறையும் அடிக்க கை ஓங்குவாய், ஒரு நாளும் அடித்ததில்லை . ஒரு வேளை நீ ஒரு முறையாவது அடித்திருந்தால், 50 ஆண்டு காலமாய் சர்க்கரை வியாதியால் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்காமல் இருந்திருப்பேன் !
நன்றி : பாக்யா – வார இதழ் – ஜூன் 19 – 25 – 2009 .
Add a Comment