b9a4048f-f937-45eb-afae-654ee996ce09

தமிழ்ப் பெருமாட்டி ஔவையார் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி 08.03.2025

ஈராயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் நன்கு அறிந்திருக்கும் புலவர் பெருமாட்டியருள் ஔவையாரின் அருமைத் திருப்பெயர் என்றும் அழியாமல் நிலைத்திருக்கும் திருப்பெயரும் தவப்பெயருமாகும்.

‘அகர முதல எழுத்தெல்லாம்’ என்பது போல ஒளவை முதல அறிவெல்லாம் என்று அறிவுக்கே உரிய பெயராக ஔவையார் ஆண், பெண், இளைஞர், முதியர் ஆகிய எல்லோராலும் வழிபாட்டுணர்ச்சியோடு வணங்கப்படுகிறார்.

அதியமானுக்காகக் காஞ்சியிலிருந்து ஆட்சிப்புரிந்த தொண்டைமானிடம் தூது சென்று நிகழவிருந்த போரை நிறுத்திய பெருமை மிக்கவர் ஔவையார்.

உலக வரலாற்றில் இரண்டு வேந்தர்களுக்கிடையில் தூது சென்ற பெண்மையர் திலகமாகப் பெருமை கொண்டவர் ஔவையார் ஆவார்.

சேரமான் மாரிவண்கோவும், சோழன் இராச சூயம்
வேட்ட பெருநற்கிள்ளியும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும் ஒருங்கிருப்பக் கண்டு உவந்து’ என்றும் தமிழ் மூவேந்தர்கள் இவ்வாறே இருப்பீர்களாக’ என அறிவுறுத்திய புலமைச் செல்வியர் ஆவார்.

நெடுமான் அஞ்சி போர்க்களத்தில் வேல் பாய்ந்து இறந்தபோது, ஔவையார் வருந்திப் பாடிய கையறுநிலைப்பாட்டு நெஞ்சம் உருக்கம் தன்மை வாய்ந்தது.

சங்கப் புலமைப் பெரும் செவ்வியராகிய இப்பெருமாட்டியார் பாடியனவாக உள்ள ஐம்பத்தொன்பது பாடல்களுள் அகப்பொருள் பற்றியன இருபத்தாறாகும். எஞ்சிய முப்பத்து மூன்று பாடல்களுள் புறப்பொருளுக்குரியனவாய்ப் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன.

ஔவை பெயரில் வழங்கும் பிற்கால நீதிநூல்களும் உள்ளன.

மாந்தர் குலத்திற்குப் பெருமை சேர்த்த ஔவை பெருமாட்டியாரைப் போற்றும் வகையில் உலக மகளிர் நாளான 08.03.2025 சனிக்கிழமையன்று காலை 9.30 மணிக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில், தமிழ் வளர்ச்சித் துறையால், சென்னை காமராசர் சாலையில் (மெரினா கடற்கரை) அமைந்துள்ள ஔவையாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்தலும், தமிழ்ப் பெருமாட்டியின் திருவுருவப்படத்திற்கு மலர் வணக்க நிகழ்வும் நடைபெற உள்ளன.

மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், வணக்கத்திற்குரிய மேயர்,
துணை மேயர் அவர்கள், அரசு உயர் அலுவலர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள், பொதுமக்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *