25.9.24 அன்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் F50 அரங்கில் மாலை 4 மணிக்கு நடைபெற்ற ஆங்கிலப் பெரும் பேராசிரியர் கா செல்லப்பன் இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன்.
ஆங்கிலத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற முனைவர் கா.செல்லப்பன் அவர்கள் சிவகங்கை மாவட்டம் பாகநேரியில் காசி. விசுவநாதன் – சௌந்தரம்மாள் ஆகியோரின் மகனாக 11.04.1936 இல் பிறந்தவர்.
காரைக்குடி அழகப்பா கல்லூரியில் இடைநிலை(இண்டர்மீடியட்) வகுப்பும்,அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை(ஆனர்சு) வகுப்பும் பயின்றவர். அறிஞர் தெ.பொ.மீ அவர்களின் அழைப்பில் அவர் மேற்பார்வையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை நிகழ்த்தியவர்(1975).
புதுக்கோட்டை, கும்பகோணம், திருச்சிராப்பள்ளி ஆகிய ஊர்களில் அரசுக் கல்லூரிகளில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர்.
இங்கிலாந்து நாட்டின் நிதியுதவி பெற்று அந்த நாட்டுக்குக் கல்வி கற்கும்பொருட்டுச் சென்று வந்த பெருமைக்குரியவர்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றியவர்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதுகலை மையம் திருச்சிராப்பள்ளியில் இயங்கிய பொழுது 1976- இல் பணிபுரிந்து 1978 இல் பேராசிரியராகப் பணி உயர்வுபெற்றார்.
பாரதிதாசன் பல்கலைக்கழகம் 1982 இல் தொடங்கப்பட்டதும் ஆங்கிலத்துறையில் பெருமைமிகு பேராசிரியராகப் பணியாற்றி 1996 இல் ஓய்வுபெற்றவர்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் சிறப்புநிலைப் பேராசிரியராகவும்,
தமிழ்நாட்டு அரசின் ஆங்கில மொழித்துறையின் இயக்குநராகவும் இருந்து 2001 வரை பணியாற்றினார்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் மேடைகளில் கேட்டார் உளங்கொள்ளும் வகையில் பேசும் ஆற்றல்பெற்ற பேராசிரியர் கா.செல்லப்பனார் தமிழிலும் ஆங்கிலத்திலுமாகப் பல நூல்களை எழுதியுள்ளார்.
தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும்
ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குமாகப் பல அரிய நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.
எங்கெங்கு காணினும் சக்தி (ஒப்பாய்வு),
Bharathi the visionary Humanist
(மொழிபெயர்ப்பு),
தோய்ந்து தேர்ந்த தளங்கள்
முதலியன இவரது படைப்புகள்.
சிலம்புச்செல்வர் ம.பொ.சி யின் விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு,
இந்திய விடுதலைப் போரில் தமிழகம்,
மூதறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் வள்ளுவம்,
கலைஞரின் குறளோவியம், தென்பாண்டிச் சிங்கம், மீசை முளைத்த வயதினிலே உள்ளிட்ட நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பெருமைக்குரியவர்.
சாகித்ய அகாதெமிக்காக விவேகானந்தர், குற்றாலக் குறிஞ்சி
(கோவி மணிசேகரன்) மொழிபெயர்ப்பு, தாகூரின் கோரா(Gora) (மொழிபெயர்ப்பு) உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார்.
இலக்கியத்தில் பழம்புதுமை புதுப்பழைமை(மீரா பதிப்பகம்),
ஒப்பியல் தமிழ்(எமரால்டு பதிப்பகம்),
ஒப்பிலக்கியக் கொள்கைகளும் செயல்முறைகளும்(உ.த.நி. வெளியீடு),
தமிழில் விடுதலை இலக்கியம்,
திருக்குறள் முதல் கிரிக்கெட் வரை(பாவை பதிப்பகம்),
விடுதலைச் சிட்டும் புரட்சிக்குயிலும்(நியூ செஞ்சுரி),
இலக்கியச் சித்தர் அ.சீனிவாச இராகவன் எனப் பல நூல்களை எழுதிய பெருமைக்குரியவர் நம் கா.செல்லப்பனார் அவர்கள்.
பேராசிரியர் கா. செல்லப்பனார் அவர்கள் 09.09.2024 இல் சென்னையில் இயற்கை எய்தினார்.