மாசு குறையாத மன்னவன்
எங்கள் குமணன்!
என்னுடைய மாமா மருத்துவர் நலங்கிள்ளி தன்னுடைய மகன் குமணன் பிறந்த பொழுது தாலாட்டுப் பாடலாக உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்ற கவியரசு கண்ணதாசனின் முழுமையான பாடல் வரிகளோடு பாடிக்காட்டி தூங்க வைத்த பொழுது விழிகளை உயர்த்தி வியப்பாகப் பார்த்து மகிழ்வேன்.
பள்ளி மாணவனான குமணனை செனாய் நகர் நீச்சல் குளத்தில் மூழ்கிச் சென்று நீந்தும் கலையில் மருண்ட விழியுடன் மாமா பயிற்றுநர் உங்கள் நண்பர் தானே இம்முறை வேண்டாம் என்று சொல்லுங்கள் என்பான் நான் சிரித்துக் கொண்டே வேறு பக்கம் நீந்திச் செல்வேன்.
அந்த மகன் இன்று ஆஸ்திரேலியாவில் குடலியல் மருத்துவராக சுழலும் பம்பரமாக சுறுசுறுப்பாக இயங்கி வருவதை அருமை நண்பர் இளவரச அமிழ்தன் நேரில் கண்டு மகிழ்ந்து சென்னையில் மருத்துவர் குமணன் வருகிறார் வாருங்கள் அவரை உவந்து வரவேற்று சிந்திக்கக் கூடுவோம் என்று அண்ணா சாலையிலுள்ள கவினார்ந்த காஸ்மோபாலட்டின் சங்க வளாகத்தின் குளிர் அரங்கில் சூடான சிற்றுண்டி காப்பியுடன் தமிழ்க் கடலில் மூழ்கி வரும் மருத்துவர் குமணனுக்குப் பாராட்டு விழா 9.4.25 புதன்கிழமையன்று பெருமிதத்தோடு நடத்தினார்.
அந்தி மயங்கும் மாலைப் பொழுதில் மகாகவி ஈரோடு தமிழன்பன்
பெரும்பேராசிரியர்
ஈ சுந்தரமூர்த்தி
இதழியல் திலகம் லேனா தமிழ்வாணன்
பேராசிரியர் உலகநாயகி பழனி திருமதி வாசுகி கண்ணப்பன் சிலம்புச்செம்மல் தமிழமுதன்
முனைவர் த கு திவாகரன் பொன்னேரி பிரதாப் ஆகியோர் முன்னிலையில் தான் ஆற்றி வரும் தமிழ்ப்பணிகளை குறித்து சுருக்கமாக இனிமையாக மருத்துவர் குமணன் உரையாடி மகிழ்ந்தார்.
தவத்திரு
அழகரடிகளின் கொள்ளுப் பெயரன்
மீஞ்சூர் மருத்துவமாமணி சண்முகம் அவர்களின் பெயரன்
முனைவர் ஔவை நடராசன் அவர்களின் பெயரன் என்ற நீண்ட மரபின் வளர்முகம் குமணனை வாழ்த்தி விடைபெறும் பொழுது அவருக்கு மாபெரும் ரோஜா மாலை அணிவித்த பொழுது தாலாட்டுப் பாடலின் மற்றொரு வரி நினைவில் வருடியது
மாபெரும் சபைதனில் நீ நடந்தால் மாலைகள் விழ வேண்டும்

Add a Comment