POST: 2025-05-01T11:42:38+05:30

சித்தப்பா மருத்துவர் தமிழ்ச்செம்மல் ஔவை மெய்கண்டான் அவர்களின் கருத்துரை

விகடன் பிளஸ்

04.05.2025

பக்கம் . 47, 48

காலில் விழுந்து வணங்குவது: மரியாதையை வெளிப்படுத்தும் விஷயமே…
முழுக்க முழுக்க அடிமைத்தனமே!

மருத்துவர் மற்றும் தமிழறிஞரான ஒளவை மெய்கண்டான் இதைப் பற்றி பேசும்போது…

“காலில் விழுவது போன்ற கலாசாரம் ஒரு சமூகத்தின் பழக்கமாக இருக்கிறது.

இதுகுறித்து ஆன்மிகம் மற்றும் இலக்கியங்களின் வழியில்தான் சில தகவல்களைப் பெறுகிறோம்.

திருக்குறளில், வணங்குவது பற்றி சிறப்பாகவே சொல்லப்பட்டிருக்கிறது.

‘எல்லார்க்கும் நன்றாம் பணிதல்’,

‘தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெளுவாள்’

போன்ற பல குறள்கள் உள்ளன.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சொல்கிற இராமாயணத்திலும் இதுபற்றி பல குறிப்புகள் உள்ளன.

வனவாசம் சென்ற இராமனின் பாதுகையை (காலணியை) சிம்மாசனத்தில் வைத்து பரதன் நாட்டை ஆண்டான் என்கிறார் வால்மீகி.

ஆக, “ஒருவரை உயர்வாக மதிக்கிறேன்; என்பதன் அடையாளமாகத்தான் காலில் விழும் கலாசாரம் தோன்றியுள்ளது என்பதை புரிந்துகொள்ளலாம்.

காலில் விழுவதால் ஒருவருக்கு இழுக்கு வந்துவிடாது… தாழ்ந்தும் போய்விடுவதில்லை எனும் தமிழ் கலாசாரத்தின் பண்பாகவும் இது இருந்திருக்கிறது.

பாதபூஜை போன்ற வழக்கமும் இதன் தொடர்ச்சிதான்.

உன்னை நான் சரணடைகிறேன்’ என இறைவனின் திருவடிகளை வணங்குவதாக ஆரம்பித்தது.

நாளடைவில் அரசரை வணங்குவதாகவோ, குருமார்களை சிஷ்யர்கள் வணங்குவதாகவோ நீட்சியடைந்திருக்கலாம்.

‘காலில் விழுந்தால் விட்டு விடுகிறேன்’ என்றோ. ‘காலைத் தொட்டுக் கேட்கிறேன் என்றோ கெஞ்சும் கோணத்திலும் இது வழக்கத்தில் இருக்கிறது.

ஆபத்து காலத்தில் தற்காத்துக்கொள்ள இப்படி கேடயமாகவும் பயன்படுத்தப் படுகிறது.

உயிர் பிழைக்கும் தந்திரம், சாதுர்யம் என்று எடுத்துக் கொள்ளலாம்.

இதில் எதிர்கோணங்களும் உண்டு.

‘எல்லா மனிதர்களும் சமம்’ என்கிற கருத்தை தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் போன்றவை கூறுகின்றன.

அப்படியிருக்கையில் ஒருவர் இன்னொருவரைவிட உயர்ந்தவர் என்கிற தோற்றத்தை காலில் விழும் கலாசாரம் ஏற்படுத்துகிறது.

இது அடிமைத்தனத்தின் அடையாளம்.

ஒரு மனிதனின் சுயமரியாதையைச் சிதைக்கிறது என்றும் பலர் வாதிடுகிறார்கள்.

மரியாதை என்பது மனதுடன் தொடர்பு கொண்டது.

அதற்கு உடல்மொழி தேவையில்லை என்ற இவர்களின் தர்க்கமும் நியாயமே.

ஆனால், காலில் விழுவது கட்டாய நடைமுறை இல்லை.

தனிப்பட்ட நபரின் விருப்பத்தைப் பொறுத்ததே.

மொத்தத்தில் காலில் விழுந்து வணங்குவது தவறாக மாற்றப்பட்டுவிட்டது அல்லது தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டுவிட்டது என்றே நினைக்கிறேன்” என்கிறார்
ஔவை மெய்கண்டான்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *