81360658-fdec-4f9b-8846-a728f917769a

கல்வெட்டியல் சுவடியல் படிக்க இளைஞர்கள் முன் வர வேண்டும்!

அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் உள்ள செய்தியாளர் அறைகளில் நவீனக் கட்டமைப்புடன் கூடிய கணினி மற்றும் அதிவேக இணையதள வசதிகள் மேம்படுத்தப்படும் எனச் செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் அவர்கள் சொல்லியிருப்பது வரவேற்கத் தக்கதாகும்.

அதே போல புதுடில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை பன்னோக்கு கலையரங்கத்தின் அருகில் 50 லட்சம் ரூபாய் செலவில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என்று சொல்லியிருப்பதும்
பாராட்டத்தக்கதாகும்.

தமிழகச் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றிய பொன்னப்ப நாடார் அவர்கள் சிறந்த தேச பக்தர் மட்டுமல்ல; பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் நம்பிக்கைக்கும் உரியவராகத் திகழ்ந்தவர்.

கன்னியாகுமரியைத் தமிழகத்துடன் இணைப்பதற்குப் போராடியவர்களில் குறிப்பிடத் தக்கவர். பொன்னப்ப நாடார் அவர்களுடைய நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் நாகர்கோவிலில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அவரது சிலை அமைக்கப்படும் என்றும் மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

குமரி மாவட்டத் தை த் தமிழகத்துடன் இணைப்பதற்கான போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய தினமலர் நாளிதழின் ஸ்தாபகர் டி.வி. ராமசுப்பையர் அவர்கள் தமிழர்களின் குரலாக ஒலித்தவர்.

தொடர் போராட்டத்தின் விளைவாக, 1956-ஆம் ஆண்டு குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.

காசி சர்வ கலாசாலை போல குமரியில் ஒரு பல்கலைக்கழகம் தொடங்கும் முனைப்புக்கு உறுதுணையாக நின்றார்.

அதற்கான ஆலோசனைக் குழுத் தலைவராகவும் இருந்தார்.

எனவே குமரியில் ஒரு பல்கலைக்கழகத்தை அமைத்து அதற்கு தினமலர் ராமசுப்பையரின் பெயரைச் சூட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

“தமிழ் வளர்ச்சித் துறையைப் பொறுத்தவரையிலே கொள்கைக் குறிப்பேடுகளைப் பார்த்தபொழுது மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது.

பிற துறைகளின் கொள்கைக் குறிப்பேட்டை விட ரொம்ப updated ஆக அனைத்துச் செய்திகளையும், உள்ளடக்கியதாக வெறும் கொள்கைக் குறிப்பேட்டை சடங்குத்தனமாகக் கடந்து விடாமல் பல்வேறு செய்திகளையும், தரவுகளையும் கொண்ட ஒரு அருமையான முயற்சியாக இந்தக் கொள்கைக் குறிப்பேடு அமைந்திருக்கிறது என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு இந்த அரங்கத்திலே பதிவு செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் அவர்கள் தமிழகச் சட்டப்பேரவையில் 16.4.25 அன்று நடைபெற்ற தமிழ் வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கையின் போது கருத்துத் தெரிவித்து இருப்பது கவனிக்கத் தக்கதாகும்.

வாரம் ஒரு முறை “உலகத் தமிழ்” என்னும் மின் இதழை அருமையான கட்டுரைகளுடன் வெளியிட்டு வருகிறது தமிழ் வளர்ச்சித் துறை.

பெருந்தொற்று இருந்த காலத்தில் கூடத் தொய்வில்லாமல் உலகத் தமிழ் மின் இதழ் வெளிவந்ததை எண்ணிப் பாராட்டி மகிழ்கிறோம்.

உலகெங்கும் உள்ள தமிழர்கள் இதனால் பயனடைகிறார்கள்.

தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குனர் முனைவர் அருள்,
புதிய தளத்திற்கு தமிழ் வளர்ச்சித் துறையை,

செய்தித் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் சாமிநாதன் அவர்களுடைய வழிகாட்டுதலுடனும்,

தமிழ் வளர்ச்சித் துறை செயலர் ராஜாராம் அவர்களின் ஆலோசனையோடும் மிகச் சிறப்பாகக் கொண்டு செல்கிறார்.

திருப்புல்லாணி அரண்மனை உள்ளிட்ட 12 இடங்கள் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட வரலாற்றுச் சின்னங்களாக அறிவிக்கப்படும் என நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்திருப்பதையும் மனதாரப் பாராட்டுகிறோம்.

தமிழக வரலாற்றுக்குப் பெருமை சேர்க்கும் வணிகக் குழு கல்வெட்டுகள், பெருவழி செக்கு தூம்பு கல்வெட்டுகள், நடு கற்கள் ஆகியவற்றை மின் பதிப்பாக்கம் செய்து நூல் வடிவில் இணையதளத்தில் வெளியிட உள்ளார்கள்.

தமிழகத் தொல்லியல் மற்றும் அருங்காட்சியியல் நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையையும், உயர்த்துவதாகவும் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள் இவற்றைப் படிப்பதற்கு இன்று நிறைய இளைஞர்கள் தேவைப்படுகிறார்கள்.

நம்முடைய தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் மிகவும் பழமையான பல கல்வெட்டுகள் இருக்கின்றன.

அவற்றையெல்லாம் கண்டு ஆராய்ந்து ஆவணப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

எனவே தமிழ்க் கல்வெட்டியல் மற்றும் சுவடியல் படிக்கிற மாணவர்களுக்கு ஊக்கத் தொகையை அதிகமாக வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

ஹரிதன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *