ink-pen-on-lined-notebook-video

லியோ நாட்கள்-A Journey of Leadership and Love

I had penned about leo club days in of my articles in dinaseithi tamil daily on
14.2.2021

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 46

“அகல் வயல் விரிந்து வாயவிழ்ந்த முள்தாள் தாமரை!”

முனைவர் ஔவை அருள்,

இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,

தமிழ்நாடு அரச

மாநிலக் கல்லூரியில் 1987-ஆம் ஆண்டில் ஆங்கில இலக்கிய நண்பர்களான கீர்த்திவாசன், சிவகுமார் வாயிலாக லியோ கிளப், பேசின் பிரிட்ஜ் என்ற அமைப்பில் நானும் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டேன்.

குருதிக்கொடை, கண்தானம், நல்வாழ்வுக் களங்களை நடத்தும்பொழுது ஒருங்கிணைப்பையும், அவ்வப்போது, அக்கூட்டங்களில் நிகழ்வுரையாளனாகப் பணியாற்ற நான் பழகினேன்.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரிலுள்ள அந்நாளைய உட்லெண்சு உணவகத்தில்தான் எங்கள் வாரக் கூட்டங்கள் நடைபெறும்.

ஆசிரியர் தினக் கூட்டத்தை மிகச் சிறப்பாக மயிலைத் திருக்கோயிலுக்கு எதிரிலுள்ள ஜே.டி. பன்னாலால் அரங்கத்தில் நடத்தும் வழக்கமுண்டு.

எந்தையாரின் நண்பர்களை இக்கூட்டத்திற்கு அழைத்துத் தலைமைதாங்கச் சொல்லிப் பள்ளி ஆசிரியர்களைப் பெருமை படுத்திச் சிறந்த சிற்றுணவை வழங்குவது என் வாடிக்கையாகும்.

நான் பேசின் பிரிட்ஜ் லியோ கிளப் செயலாளராக இருந்தபொழுது என்னுடைய நண்பர் டெமிட்ரியசு ஐசக்கு தலைவராக இருந்தார்.

டெமிட்ரியசும் நானும் ஆறாம் வகுப்பு முதல் சென்னை கிறித்தவ மேனிலைப் பள்ளி வகுப்புத் தோழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் எதைச் செய்தாலும், தட்டிக் கொடுத்துத் தன் பணத்தையே வழங்கி சிறப்பாக நடத்துவதற்கு உறுதுணையாக இருந்தார்.

லியோ கூட்டங்களுக்கு எங்கள் உறுப்பினர்களைக் காட்டிலும் என்னுடைய நண்பர்கள் பலரை அழைத்து அரங்கத்தை நிரம்பச் செய்து தலைமை தாங்கும் விருந்தினரைப் பெருமைப் படுத்துவேன்.

என்னுடைய அமைப்பு மட்டுமின்றி பல லியோ கிளப் உறுப்பினர்களையும் பாங்கறிந்து அன்பு பாராட்டினேன்.

வழிந்த அன்பில் பல விழுமிய நண்பர்களைப் பெற்றேன். லியோக்களை தமிழில் அரிமாக் குருளை என்றுதான் நான் சொல்லித்தான் விளிப்பேன்.

அரிமாக் குருளையர்களான விஜயானந்த், அண்ணாமலை என்கிற வெங்கட், சிவகுமார், எம்.ஆர். சிவகுமார், ‘கிளியா’ சுரேஷ், கிஷோர் சாப்பிரயா, சீமா கவுர், சித்ரா, வித்யா சடகோபன், இரவிக்குமார், கணேஷ், ஏ.கே. ஸ்ரீராம், சாய்சேஷன், ரத்னமாலா, சுந்தர், ரஜினிகாந்த், நெல்சன், இளங்கோ, சாரதா, முகமது அலி போன்றோர் என் இனிய நண்பர்களாக மாறினார்கள்.

என் வாழ்வில் முதன்முறையாக இத்தாலிய பீட்சா உணவினை உண்ண எனக்கு அறிமுகம் செய்தவர் லியோ விஜயானந்த் ஆவார். எத்திராசு மகளிர் கல்லூரியின் எதிரிலுள்ள ‘ஜிஃப்பி’ உணவகத்தில் வாங்கித் தந்தார்.

விஜயானந்த் மற்றும் அண்ணாமலை நன்முயற்சியினால், ‘லியோ லிங்க்’ என்கின்ற ஆங்கில ஆறு பக்க செய்தி ஏட்டின் ஆசிரியர் குழுவில் என்னையும் இணைத்து பல கட்டுரைகள் ஆங்கிலத்தில் நான் எழுதுவதற்கு வகை செய்தனர்.

இன்றைய இளைஞர்களை நாளைய தலைவர்களாக மாற்றும் முயற்சியாக அரிமாக் கழகம், அரிமாக் குருளையர்கள் (Leo) கழகத்தை உருவாக்கினார்கள்.

1957-இல் இங்கிலாந்தில் உள்ள Glenside அரிமாக் கழகம் முதன்முதலாகத் தோற்றுவிக்கப்பட்டது.

LEO என்ற மூன்றெழுத்துகளின் பொருள் Leadership, Experience, Opportunity என்பதாகும். இன்றைக்கு உலகிலுள்ள 104 நாடுகளில் 4300 லியோ கிளப்புக்கு மேல் உள்ளது என்பது வரலாற்றுச் சாதனையாகும். தமிழகத்தில் முதன்முறையாக Leo Club of Meenambakkam தோற்றுவிக்கப்பட்டது.

அவ்வண்ணமே அரிமாக்கள் பலர் நற்றுணையாய் பல நல்ல திட்டங்களை வெற்றி பெறுவதற்கு வழிகாட்டிகளாக சீன்லேக் பவுடர் உரிமையாளர் அரிமா ஜான் பீட்டர், இராமச்சந்திர ஓரா, புஷ்பராஜன், அருண், நடராஜன், பல்பீர்சிங் லோட்டா மிளிர்ந்தார்கள்.

அரிமாக்களான பட்டயக் கணக்கர் என்.சி. கிருஷ்ணனின் ஆங்கில உரைகள் அறிவார்ந்த உரைகளாக அமைந்தன. அவர் உரையைக் கேட்பதற்கு நான் பல கூட்டங்கள் சென்றிருக்கிறேன்.

சென்னைப் பங்குச் சந்தையின் தலைவராக திரு. வி.கே. பத்மநாபன் அரிமாவாக இருந்து பல திட்டங்களில் வெற்றி பெறுவதற்கு எனக்கு வழிகாட்டியிருக்கிறார்.

சென்னை அருங்காட்சி அரங்கத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் எங்களுடைய அமைப்புத்தான் முதற்பரிசு பெற்றது.

அச்சிறப்புப் பரிசினை நாங்கள் பெறுவதைக் கண்டு பலர் மருண்டனர், முகம் இருண்டனர். விருதுபெறும் நிகழ்வில் அமளிப்பூசல் ஏற்பட்டு விருதினை எங்களுக்கு வழங்காமலேயே கூட்டம் நிறைவுற்றது.

சில நாட்களிலேயே எங்கள் பேசின்பிரிட்ஜ் லியோ கிளப்பினை ஒடுக்குவதற்கு அரிமாக்களிடம் அறிவுறுத்தி நிலையாக மூடப்பட்டது.

சில வாரங்கள் கழித்து என் இனிய நண்பர் லியோ இராதாகிருஷ்ணன், தான் தலைமை. தாங்கிய லியோ கிளப், போரூரில் என்னை இணைத்துக் கொண்டு பல அறப்பணிகளில் என்னை ஈடுபடுத்தினார்.

காயிலே மில்லத்து அரசு மகளிர் கல்லூரியில் குருதிக்கொடை நிகழ்வினை மிகப் பெரிய அளவில் நான் நடத்திக்காட்டி வெற்றிபெற்றேன். கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியப் பெருமக்கள் ஒவ்வொரு முறையும் அருளுக்காகத்தான் இந்தக் குருதிக்கொடை நடைபெறும் என்றே வாயாரப் பாராட்டினார்கள்.

நினைவில் வாழும் லியோ நண்பர் அக்சய சர்மாவும் நானும் கலைஞானி கமலஹாசனை அவர் பிறந்த நாளன்று அழைத்து வந்து குருதிக்கொடை நிகழ்வுக்காக அழைத்துவர முனைந்தோம்.

கல்லூரி முதல்வருக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி. அதற்காக ஆழ்வார்ப்பேட்டை இல்லத்திற்கு முற்பகல் சென்றோம். பெருங்கூட்டமாக இருந்தது.

அக்சய சர்மாவை ஒரு இந்திப்படத் தயாரிப்பாளர் என்று சொல்லி முன்னே அழைத்துச் சென்று விட்டேன். அவரைப் பார்த்தவுடன் திருமதி சரிகா ‘என்ன வேண்டும்?’ என்று கேட்டார்கள். இவரை இந்தியிலேயே மறுமொழி சொல்லி ‘கமலஹாசனைத் தலைமை தாங்க வேண்டினார். உடனே அவர்கள் பேசி ஒப்புதல் வாங்கித் தந்தார்கள். கல்லூரி அல்லோலகல்லோலப்பட்டது. கலைஞானியின் வருகை கல்லூரிக்குப் பெருமையளித்தது.

அரிமாக்களும், அரிமாக் குருளையர்களும் வியந்து எங்களைப் பாராட்டினார்கள்.

காயிதே மில்லத் கல்லூரியின் குருதிக்கொடையினை வெற்றிகரமாக மருத்துவக் குழுவைத் தலைமைதாங்கி நடத்தித் தந்தது குழந்தை நல மருத்துவமனை / செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் டாக்டர் விமலா இராமலிங்கம் (கவித்திலகம் அன்னையார் சௌந்திரா கைலாசத்தின் மூத்த மகள்) ஆவார்.

அவர்களும் மருத்துவர் கலையரசியும் மிகப் பொறுப்பாகவும், கனிவாகவும் குருதிக்கொடை நிகழ்வுகளை மிகச் சிறப்பாக நடத்த ஒத்துழைப்பு நல்கினர்.

லியோ கிளப் சார்பாக ஆரம்பாக்கம், கொடைக்கானல், உதகமண்டலம் போன்ற ஊர்களுக்கெல்லாம் சென்று பேசுகிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

கொடைக்கானலில் ஒருமுறை என்னுடைய இருமொழி உரையினைக் கேட்டு நெறியாளராக வருகைபுரிந்த ஜெய்சீஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு. புருசோத்தமன் என்னை இருமொழிச் சொற்கொண்டல் என்று பாராட்டினார்.

லியோ இராதாகிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி, இறுக்கமான ஆடைகளை அணிந்து மிடுக்காக நான் காட்சியளித்ததை என் பெற்றோர்கள் பார்த்துப் பூரிப்படைந்தனர்.

லியோ இராதாகிருஷ்ணனின் அரிய முயற்சியினால் எழும்பூர் மாநகராட்சி பெண்கள் பள்ளியில் அறிவியல் கண்காட்சியொன்றை நடத்தினோம்.

அதற்காக கனரா வங்கியின் தலைமை மேலாளர் அரிமா இராமகிருஷ்ணன் அவர்கள் வங்கி வாயிலாக நன்கொடை வழங்கி கண்காட்சியினைச் சிறப்பாக நடத்த வழிசெய்தார்.

தேனாம்பேட்டையிலுள்ள இராதாகிருஷ்ணனுடைய இல்லத்தில் பல வேளைகளில் அவர் தாயார் அன்னம் பாலித்தார்.

நன்கொடையினை வாங்குவதற்கு அப்பொழுது எனக்குப் பெருந்துணையாக சட்டக் கல்லூரி மாணவியான சுமதி (இப்போது நாடறிந்த வழக்கறிஞர் / உரையாளர்) பெரிதும் உதவினார்.

நேரம் பாராமல் பல நிறுவனங்களுக்கு எங்களுடன் வந்து நிதி திரட்ட உதவினார்.

தோழி சுமதியின் வாயிலாக அருமையான நண்பர்களாக, கவிஞர் சதீசும் (இப்போது சென்னை உயர்நீதி மன்றத்தில வழக்கறிஞர்), சர்வேசனும் மலர்ந்தனர்.

பல தருணங்களில் அண்ணாநகரிலுள்ள சர்வேசனின் இல்லத்தில் உரிமையாகச் சென்று அவரை உணவு சமைக்கச் சொல்லி உண்டு மகிழ்வேன்.

சர்வேசன் (இப்போது வேதாந்தா குழுமத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி) அடிக்கடி என்னிடம் சொல்வது, ‘சுமதியின் அக்கா தரணியால் தான் எனக்கு உங்களையெல்லாம் தெரியும்’.

அவ்வண்ணமே கவிஞர் சதீசின் இல்லத்தில் அன்னையார் வசந்தா அக்கார அடிசில் விருந்திட்டு தானும், உண்போரையும் ஒருசேர மகிழ்விக்கும் உருக்கத்தை நான் சொற்களால் முழுவதுமாகச் சொல்ல முடியாது.

அன்னை வசந்தா (கவிஞர் பாரதி சுராஜின் தங்கை) சைதையிலுள்ள கணபதி தேசிய நடுநிலைப்பள்ளியின் (அரசு உதவிபெறும் பள்ளி) தலைமையாசிரியராகப் பணியாற்றியவர்.

சிறந்த பாடகரும் ஆவார். அவரின் தமிழ்த்தாய் வாழ்த்து, பாரதி பாடல்கள் பலரை ஈர்த்தது. அவர்களை அரிமா அகமது செரிப்பிடம் அறிமுகம் செய்தேன். பிறகு, அவர்கள் பெரியமேடு அரிமாக்கழகத்தில் அரிமா வசந்தாவாக மிளிர்ந்தார்.

அறிவியல் கண்காட்சியாக மிகச் சிறப்பாகத் தொடங்கப்பட்டு, இரண்டாவது நாளன்று யார் என்றே தெரியாத வண்ணம், வன்முறையாளர்கள் கண்காட்சிக்குள் உட்புகுந்து, உட்பூசலிட்டு இராதாகிருஷ்ணனைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.

வேறு சில நண்பர்கள் சென்னைப் பொது மருத்துவமனையில் சேர்க்கப்ப்பட்டனர்.

தோழி சுமதி இரவென்றும் பாராமல் காவல் நிலையத்துக்கும், மருத்துவமனைக்கும் தானாக முன்சென்று உதவுவதற்கு முற்பட்டார்.

நான் இச்செயல்களில் எல்லாம் பின்வாங்கி விட்டேன். வன்முறை, சச்சரவு, தகராறு இவைகளையெல்லாம் தவிர்த்து விழிப்பாக விலகி நிற்கும் பழக்கத்திற்கு ஆட்பட்டேன்.

சில நாட்களிலேயே லியோ கிளப், போரூரையும் நிறுத்த வேண்டும் என்று அரிமாக்கள் முடிவெடுத்தனர். அன்று முதல் அரிமாக் குருளையர் இயக்கத்திலிருந்து யானும் விலகி நின்றேன்.

தலைமை, அனுபவம், வாய்ப்பு இம்மூன்றையும் தெரிந்து கொள்வதற்கு ஒரு பயிற்சிக் களமாக இவ்வமைப்பு அமைந்தது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *