ஔவை அருள்

ஆங்கில (அலோபதி ) மருத்துவ முறை மிகவும் வளர்ந்தது என்பதாகப் பலரும் கருதுகின்றனர். உண்மையில், 300 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கில மருத்துவ முறை இல்லை; மிக வயதான சிலர் கூறும் பொருள்களை மருந்து என அந்தக் காலத்தில் உண்டு வந்தனர். இதை மேலை நாடுகளில் பழைய முறை என்று கூறினர்.
1806 – இல் ஹனிமன் என்பவர் ஹோமியோபதி மருத்துவ முறையைக் கண்டுபிடித்தார். பின்னர்தான் பழைய மருத்துவமுறைக்கு அலோபதி எனப் பெயர் வந்தது. ஆனால், தமிழக சித்த மருத்துவம் ஈராயிரம் ஆண்டுகள் முன்னரே சிறந்து விளங்கியது.
சங்க காலத்தில் (கிமு 1500 – 100) மருத்துவன் தாமோதரனார் முதலிய பெயர்களும், மருத்துவ முறைக ளும் இருந்துள்ளன. 2,500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் மருந்தையும், மருந்துப் பொருள்களையும் பயன்படுத்துவதில் வளர்ச்சியடைந்த நிலையில் இருந்தனர்.
சிந்துவெளி அகழாய்வில் கிடைத்துள்ள பொருள்களில் வளைந்த சட்டி (வாணலி), கரண்டி, சட்டுவம், கூரிய வெட்டுக் கருவி ஆகியவை கிடைத்துள்ளன. அக்காலத்திலேயே அறுவை மருத்துவமும் செய்துள்ளனர். அதற்குச் செம்பைப் பயன்படுத்தினால் பக்கவிளைவுகள் ஏற்படாது என்பதையும் தெரிந்துவைத்திருந்தனர்.
போர்க் காலங்களில் வீரர்களுக்கு ஏற்படுகிற பெரிய காயங்கள், வெட்டுகள், புண்கள் ஆகியவற்றை மருந்தால் ஆற்றுவது கடினம் என்பதால், அறுவை மருத்துவர்களால் அந்தப் புண்கள் தைக்கப்பட்டன. அதன் பின்னரே மருந்திட்டுள்ளனர்.
“மீன்தேர் கொட்பின் பனிக்கயம் மூழ்கிச்
சிரல் பெயர்ந் தன்ன நெடுவள் ளூசி
நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின்’
என்ற பதிற்றுப்பத்து (5.2) பாடல் இதற்குச் சான்றாகும்.
புண் ஆறிய பின் வடு தோன்றாமல் தோலின் நிறம் பழைய நிலையை அடைய அத்திப்பால் பயன்படும் எனப் புறநானூறு தெரிவிக்கிறது. “வடுவின்றி வடிந்த யாக்கையான் ‘ என்று பழைய நிலைக்குத் தோல் நிறமும் உடலமைப்பும் திரும்பியதைக் கூறும்.
உடலில் கட்டிகள் தோன்றினால், அறுத்து அதில் உள்ள கெட்ட ரத்தத்தை நீக்கி, தைக்கும் முறை இருந்ததைக் கம்பர் உவமையாகப் பாடியுள்ளார்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மருத்துவமனையும், மருத்துவக் கல்லூரியும் கோயில்களைச் சார்ந்து இருந்தன. ராஜராஜ சோழனின் தமக்கையார் குந்தவைப் பிராட்டியார் தஞ்சைக் கோயிலைச் சார்ந்து சுந்தர சோழன் ஆதுரகம் (மருத்துவமனை) எனத் தம் தந்தையார் பெயரில் அமைத்திருந்தார்.
காஞ்சிபுரம் அருகே உள்ள திருமுக்கூடலில் திரிமூர்த்திகள் கோயிலில் கி.பி.1063-இல் வீர ராஜேந்திர சோழன் காலத்தில் மருத்துவமனையும் கல்லூரியும் இருந்தன. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்திருக்கிறார்கள். இங்கு படிப்பவர்களுக்கும், சொல்லித் தருபவர்களுக்கும் நெல்லும், பொருளும் இலவசமாகத் தரப்பட்டன. 15 படுக்கை வசதிகள், ஒரு பொது மருத்துவர், ஓர் அறுவை சிகிச்சை மருத்துவர், இவர்களுக்கு உதவ இரு பெண் செவிலியர், மூலிகை பறித்துக் காய்ச்ச பணியாளர்கள் இருந்தனர். அருகிலேயே மூலிகைப் பண்ணை இருந்தது; என்ன நோய்க்கு என்ன மருந்து என இக்கோயிலின் கல்வெட்டில் விரிவாக உள்ளது.
தமிழ் மருத்துவ நூலான “அகத்தியர் நயனவிதி’ அறுவை சிகிச்சை செய்யும் 26 கருவிகள் (சத்திர ஆயுதங்கள்) பற்றி குறிப்பிடுகிறது.
தஞ்சைப் பெரிய கோயிலைச் சார்ந்துள்ள கலைமகள் பண்டாரத்தில் (சரசுவதி மகால்) பழைய மருத்துவ ஏட்டுச்சுவடிகள் உள்ளன. கண் மருத்துவம் பற்றிய குறிப்புகளுடன், கண்நோய் உற்ற நோயரின் கண்ணையும் சிறந்த ஓவியரான மன்னர் சரபோஜியே படமாக வரைந்துள்ளார்.
நின்ற நிலையில் மகப்பேறு எளிமையாக நிகழும் என அந்தக் காலத்தில் உணர்ந்திருந்தனர். இது குறித்த புடைப்புச் சிற்பம் வேலூர் அருகில் வானம்பாடி கோயிலில் செதுக்கப்பட்டுள்ளது. தஞ்சைப் பெரிய கோயிலில் இது குறித்த ஓவியம் உள்ளது.
அனுமன் மூலிகை தேடி வந்ததாகக் கூறப்படும் பர்வத மலை இக்காலத்தும் திருவண்ணாமலை அருகில் உள்ளது. சவ்வாது மலை, கொல்லிமலை முதலியன இக்காலத்திலும் மூலிகைகள் நிறைந்தவையாக இருக்கின்றன.
தாயுமானவர் என்ற இறைவன் புராணக் கதையில் மருத்துவச்சி குறித்து கூறப்பட்டுள்ளது. அந்தக் காலத்தில் பெரும்பாலும் அவர்கள்தான் மகப்பேறு பார்த்தனர்; பொது மருத்துவத்துக்கு பரம்பரையாக மருத்துவத்தை அறிந்த மருத்துவர்கள் ஊர்தோறும் இருந்தனர்.
சீனாவில் மக்கள் பழைய மருத்துவம் 50 சதவீதம், புதிய மேலை மருத்துவம் 50 சதவீதம் என ஏற்றுள்ளனர். நம்முடைய ஓகம் (யோகாசனம்), மூச்சுப் பயிற்சி ஆகியவற்றை அவர்கள் பின்பற்றுகின்றனர். ஆங்கில மருத்துவராக இருந்து ஹோமியோபதிக்கு மாறியவர் நாஷ் என்பவர். அதேபோல சித்த மருத்துவத்துக்கு மாறி கூட்டு மருத்துவம் பரப்பியவர் மருத்துவர் செ.நெ.தெய்வநாயகம் ஆவார்.


Add a Comment