

கடந்த 12 ஆண்டுகளாக நன்கு தெரிந்த திருமுகம் தான்
திரு அசோக்குமார் ஆவார்.
தலைமைச் செயலகத்தில் பணியாற்றுவது என்பது பெரும்பேறு….
அதிலும், அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் வேராகத் திகழும் அரசு செயலாளர்களிடத்தில் பணியாற்றுவது என்பது அரும்பெரும் பேறாகும்…
தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் முதற்கொண்டு அரசு செயலாளர் வரை தனிச் செயலராகப் பணியாற்றி அரசு இணைச்செயலாளர் பதவிக்கு நிகரான முதுநிலை முதன்மை தனிச் செயலராகப் பணியாற்றிய செம்மல் தன்னுடைய நீண்ட அலுவல் பணி முதிர்வால் 31.5.25 அன்று ஓய்வு பெற்றார்.
எனக்குத் தெரிந்து அவரால் இன்னும் இருபது ஆண்டுகள் பணியாற்றக்கூடிய இளமையும் வல்லமையும் ததும்பி உள்ளது என்று சொன்னால் மிகையாகாது.
அமைதியின் உறைவிடமாகவும் மந்தனத்தில் மிக விழிப்பாகவும் எறும்பு தோற்கும் சுறுசுறுப்புடன் எந்நேரமும் பணியாற்றும் இனிய நண்பர் அசோக் குமார்
எக்காரணம் கொண்டும் சொற்களை வீணடிக்க மாட்டார்.
எவரையும் கடிந்து நோக்காமல் நேர் முகம் நோக்கிக் கனிவுடன் பேசுவார்.
தொலைபேசி அழைப்புகளிலும் கேட்பவர்களுக்கு சிறு ஐயப்பாடு கூட ஏற்படாதவாறு ‘கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்’ இரத்தினச் சுருக்கமாக அவர் பேசும் திறனைக் கண்டு நான் பலமுறை வியந்ததுண்டு.
பலரும் கண்டு மருளும் அளவிற்கு, கடமை கண்ணியம் கட்டுப்பாடு இந்த மூன்று நெறிகளையும் சொல்லாலும் செயலாலும் நாள்தோறும் வழுவாமல் கடைப்பிடிப்பார்.
எந்தக் கோப்பைக் கேட்டாலும் நொடிப்பொழுதில் எடுக்கும் வகையில் கோப்புகளை நுட்பமாக அடுக்கி வைப்பதிலும், குறிப்புக்களைத் தாளில் மடித்து மறவாமல் வைப்பதிலும்,
அரசு செயலாளரின் குறிப்பறிந்து நடப்பதிலும் அவருக்கு நிகர் அவரேதான்.
தான் வாழும் அடுக்குமனைக் குடியிருப்பிலும் அவ்வண்ணமே நட்பு சூழ வாழ்வதையும் கண்டு மகிழ்ந்துள்ளேன்.
வாழ்வரசியும் அரசு அலுவலராக அமையப்பெற்றதனால் வாழ்வெல்லாம் நல்லறத்திலேயே சூழப்பெற்றதனால் இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்ற உயர் நெறியில் ஓங்கி இருக்கும் நண்பரை 30.5.25 வெள்ளிக்கிழமையன்று நேரில் வாழ்த்தி மகிழ்ந்தேன்.
அன்று பிற்பகல் சட்டத்துறை நூலகத்தில் பணி நிறைவு விடைபெறும் நாளில் அலுவலர்கள் சூழ வழியனுப்பு விழா நடைபெற்ற போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் மேனாள் அரசு செயலாளர் திரு மகேசன் காசிராஜன் இ ஆ ப (பநி) நேரில் கலந்துகொண்டு வாழ்த்தியது திரு அசோக் குமாரின் பணிச்சிறப்பின் மகுடமானது.


Add a Comment