POST: 2025-06-30T10:03:39+05:30

உறங்குவது போலுஞ் சாக்காடு

பலரின் வருவாய் ஆண்டுக் கணக்குகளுக்கு விடை சொன்னவர் தன் வாழ்நாள் கணக்கை தூக்கத்திலேயே முடித்துக் கொண்டார்

இருபதாண்டுகளுக்கு முன்பு என்னுடைய நண்பர் திரு இரகுநந்தனா நூறாண்டுகள் பழமை வாய்ந்த ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட மரபார்ந்த உயர்குடி இல்லத்தினை வாங்கப்போகிறேன் அதனுடைய அசல் மூலப் பத்திரங்களை பார்த்து சொல்வதற்கு வழக்கறிஞர் ஒருவரை அறிமுகம் செய்யுங்கள் என்று என்னை உரிமையோடு வினவிய போது மருத்துவர் சாந்தி அண்ணியாரின் பாட்டனார் ஆங்கில இந்து நாளிதழின் நிறுவனர் திரு கஸ்தூரி அவர்களின் நண்பரும் வழக்கறிஞருமான
திரு இரங்கராஜன் அவர்களை பார்த்துத் தருமாறு கேட்ட பொழுது உடனிருந்து பார்த்து அனைத்தும் சரி என்று உதவியவர் தான் கணக்காளர் சுகுமாராவார்.

திரு சுகுமார் வழக்கறிஞர் இரங்கராஜன் அவர்களின் உடன் பிறந்த தம்பி திரு லட்சுமி நரசிம்மன் மகனாவார்.

வாழையடி வாழையாக மயிலையிலேயே வாழ்ந்து வருகின்ற பெருங்குடும்பம் தான் என் அண்ணியாரின் குடும்பமாகும்.

திரு சுகுமார் அவர்களுடன் அன்று தொடங்கி நாளது வரை நட்போடும் உரிமையோடும் பேசி பழகுகிற நண்பர்களாய் மிளிர்ந்தோம்.

என்னுடைய நண்பர்களின் வருவாய் ஆண்டுக் கணக்கு நிலைகளைக் குறித்து சுகுமார் அவர்களிடம் சொன்னவுடன் தக்க தீர்வுகளை வழங்கி நல்வழி காட்டும் திசைகாட்டியாக விளங்கினார்.

மூன்று திங்களுக்கு முன்பு கூட அவரை சந்தித்த பொழுது பெருமிதமாகவே பேசி மகிழ்ந்தார்.

பெரும் தொழிலதிபர்களின் பொழுதுபோக்கு விளையாட்டான கோல்ஃப் விளையாட்டில் 70 வயது சுகுமாரும் தீவிர ஆர்வம் காட்டி விளையாடி வந்ததை நன்கறிவேன்.

அவர் வாயிலாக கோல்ஃப்
விளையாட்டின் பல
பரிமானங்களையும் அறிந்துகொண்டு அம்மாதிரி விளையாட்டுத்திடலை அமைப்பதற்கு மலேசிய நண்பர்களுடன் சுற்றித்திரிந்ததும் பழங்கதையாகும்.

பெங்களூரில் நண்பரின் மங்கல நிகழ்வுக்கு சென்ற சுகுமார் சனிக்கிழமை (28.6.25) காலை தன் ஆழ்ந்த துயிலில் எழாமல் உயிர் பிரிந்தது என்ற செய்தியறிந்து ஆழ்ந்த துயரில் ஆழ்ந்தேன்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (29.6.25) காலை அவரின் கட்டட மரபு மாறாத மயிலை இல்லத்தில் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட பொழுது என்னருகில் வந்து ஓர் அம்மையார் இது எவ்வளவு பெரிய துயரம் என்றால் சுகுமாரின் 94 வயது தாய் திருமதி லட்சுமி அழுது கொண்டே இருக்கிறார்கள்…அவருக்கு யார் ஆறுதல் சொல்ல முடியும் என்று சொல்லி விலகினார்கள்.

சுகுமாரின் துணைவியார் திருமதி வைதேகியை என்னுடைய தாயார் பெரிதும் போற்றுவார்கள்.

திருமதி வைதேகி அவர்களுக்கும் மகள் சரண்யாவுக்கும் மகன் அசுவினுக்கும் ஔவை குடும்பத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *