ஆனந்த விகடன்
படிப்பறை
25.06.2025
பக்கம் எண் : 67
ஒரு நூலின் அணிந்துரையோ, வாழ்த்துரையோ, முன்னுரையோ தான் வாசகர்களுக்கு வரவேற்பறை.
அவைதான் நல்ல அறிமுகத்தைக் கொடுத்து, படிப்பதற்குத் தூண்டி, நூலுக்குள் இழுத்துச் செல்லும்.
இன்றைக்கும் முன்னணி எழுத்தாளர்களிடமும் பிரபலங்களிடமும் தங்களின் நூலுக்கு அணிந்துரை எழுதித் தரக் கேட்கும் கவிஞர்களும் எழுத்தாளர்களும் உண்டு.
தமிழறிஞர், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஔவை நடராசன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களுக்கு முன்னுரை, அணிந்துரை, வாழ்த்துரை, கடிதங்களை எழுதியிருக்கிறார்.
அவரின் மகன் ஒளவை அருள், அவற்றில் சிலவற்றைத் தொகுத்து ‘ஔவையின் தமிழமுது’ என்ற நூலாக்கியிருக்கிறார்.
அமரர் கி.வா.ஜ எழுதிய ‘திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு’,
சாயபு மரைக்காயர் தொகுத்த பாவேந்தர் நூற்றாண்டுக் கட்டுரைத் தொகுப்பு,
தங்கதுரை தொகுத்த ‘அண்ணாவின் படைப்புகள்’,
முனைவர் நயினார் முகமது எழுதிய இசை நூல் எனப் பல முக்கியப் புத்தகங்களுக்கு ஔவை நடராசன் எழுதிய அணிந்துரைகள் இதில் இடம்பெற்றிருக்கின்றன.
கவிக்கோ அப்துல் ரகுமானுக்குப் பவள விழா நடந்தபோது, ஒளவை நடராசன் எழுதிய வாழ்த்துரை ரசிக்கும்படியாக இருக்கிறது.
‘கவிக்கோ அமைதியாக வாழ்கிறார். வாழ்வில் வந்து போகும் அவலங்களால் அவர் வாடியதில்லை. அவ்வப்போது அரங்குகளில் பங்குகொண்டு ஆழ்ந்த சிந்தனைகளை உதிர்க்கிறார். இந்த மகுடம் புனையாத மன்னாதி மன்னருக்குப் பவள விழா என்பது வியப்பாக இருக்கிறது’ என்கிறார்.
ஒளவை நடராசனின் அணிந்துரைகள், நூல் குறித்த விமர்சனமாக இருக்காது.
அதற்கான காரணத்தை ஒருமுறை கேட்டபோது, அவர் சொன்ன பதிலை இந்த நூலில் பதிவுசெய்திருக்கிறார் ஒளவை அருள்.
ஐயாயிரம் நாடகங்களை அரங்கேற்றிய எஸ்.வி.சேகருக்கு எழுதிய வாழ்த்துரையில், ‘நகைச்சுவையின் நறுமணப் புரட்சியாளர்’ என்று அவரைப் புகழ்கிறார் ஒளவை நடராசன்.
‘கலைஞரின் நாடகங்கள்’ நூலைப் பற்றி எழுதும்போது, ‘கலைஞரின் நாடக உலகம் பரந்துபட்டது.
அதன் அனைத்துக் கூறுகளையும் ஒரே பேச்சில் அல்லது கட்டுரையில் கொண்டுவர இயலாது’ என்கிறார்.
கூடவே, ‘கலை, மக்களுக்காக என்ற கருத்துடையவர் கலைஞர்.
தமிழர்கள் கலை பற்றிக் கொண்டிருக்கும் கொள்கை இதுதான்’ என்றும் எழுதுகிறார்.
சிறுகதை, கவிதைத் தொகுப்புகள், ஆய்வு நூல்களைப் பதிப்பிப்பதற்கே பதிப்பகங்கள் தயங்கும் காலம் இது.
இந்தச் சூழலில் முன்னுரைகளும் அணிந்துரைகளும் வாழ்த்துரைகளும் நூல் வடிவம் பெற்றிருக்கிறதென்றால், நல்ல நூல்களையும் மனிதர்களையும் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்கிற தமிழறிஞர் ஒளவை நடராசனின் வேட்கையும் தமிழார்வமும்தான் அதற்குக் காரணம்.
ஒளவை அருள் தொகுத்திருக்கும் ‘ஒளவையின் தமிழமுது’ நூலில் இனிப்பும் சுவையும் நிறைவாக இருக்கிறது.

Add a Comment