“உற்றது தமிழ்; உயிர்த்தது தமிழ்!”

26.08.2022

தினமணி பக்கம் எண் 8

“உற்றது தமிழ்; உயிர்த்தது தமிழ்!”

‘கடமை நமது ஆனால் பெரிது, பெரியதையே நினைப்பது உரிமை, நினைவு மனத்தின் பயிற்சி, மனப் பயிற்சிதான் ஒழுங்கு, ஒழுங்கு தான் வாழ்வின் உண்மை, உண்மைதான் உலகிற்கு ஒளி.

உன்னுங்கள் உயர்வடையலாம்

இப்படிச் சின்னஞ்சிறு தொடர்களாக எழுதிய தமிழ்த்தென்றல், அரசியல் ஞானி, மேடைத்தமிழுக்கு அழகூட்டிய மேலோர், அருளாளர், தொழிற்சங்கத்தின் தாய் என்றெல்லாம் நாடு போற்ற வாழ்ந்து பன்முகத் தமிழ் விளக்காய் சமயங் கடந்த சமரச தீபமாய் மறைந்தவர் திரு.வி.க.

திரு.வி.க.விற்கு நடையில் எளிமை, உடையில் எளிமை, வாழ்வில் எளிமை, அரசியலில் வாய்மை, நெஞ்சில் நேர்மை, தொழிலாளர்களை அரவணைக்கும் தாய்மை, அனைத்துச் சமயங்களையும் ஒன்றாகக் காணும் பெருந்தன்மை, பெண்களைத் தாயாக, இறைமையாகப் போற்றிப் பாராட்டிய பண்பு.

இவையெல்லாம் ஒரு வடிவம் பெற்றால் திரு.வி.க.வின் வடிவமாகத் திகழும்.

ஐந்தடி நான்கு அங்குலம் உயரமும் மெல்லிய உடலோடும் ஒரு கையில் ஆறு விரல்களோடும், காலில் மூன்று விரல்கள் ஒட்டிய நிலையிலும் பிறப்பிலேயே புதுமை வாய்ந்தவராகப் பிறந்தவர் என்பர்.

உறுதியான மனத்தோடும் வாழ்ந்த திரு.வி.க.வைத்தான் அறிஞர் மு.வ.தனது வழிகாட்டியாகக் கொண்டார்.

அறிஞர் மு.வ அவர் தோற்றத்தை ஓர் ஓவியத்தைப் போல் எழுதிக் காட்டினார்.

“வெள்ளாடை சூழ்ந்த மெல்லிய உடலும், புலமைப் பொலிவு பெற்ற அழகிய முகமும், அருள் பெருகும் கூரிய விழியும் பெற்ற வானம்பாடி அவர்; தமிழ்நாட்டில் பிறந்த தமிழ் வானம்பாடி; சமரச வானம் கண்டு களிக்கும் வானம் பாடி; தமிழகம் தழைக்க உலகம் உய்யப் பொதுமை மழை பொழியுமாறு வாழ்த்துப் பாடும் வானம்பாடி” எனத் திரு.வி.க.வுடன் மிக அணுக்கமாக நெருங்கிப் பழகிய நிலையில் டாக்டர் மு. வரதராசன், அவரைப் பொதுமை பாடும் வானம்பாடியாகச் சுட்டிக்காட்டினார்.

பொதுவாக, “திரு.வி.க. போராட்டவாதி; வர்க்க உணர்ச்சி கொண்டவர்; அன்புள்ளத்தில் காந்தியடிகளின் சீடர்; பொருளாதாரத்தில் காரல்மார்க்சின் பக்தர்; இந்தச் சிறப்பு இயல்புகளால்தான் அவர் சென்ற காலம் – நிகழ்காலம் – வருங்காலம் ஆகிய மூன்றுக்கும் சார்பாளராக இருக்கிறார்” என்று சிலம்புச்செல்வர் திரு.வி.க.வின் கொள்கையைப் போற்றினார் .

முரண்பாடு கொண்ட கொள்கையிலும் உடன்பாட்டுத் தன்மையைப் போற்றுகின்ற பொதுமைப் பண்பாளர் திரு.வி.க. சமுதாயத்தின் வளர்ச்சித் தத்துவத்தைத் தெளிவாகப் புரிந்து கொண்டதன் காரணமாக பழைமைக்கும் புதுமைக்கும் இடையே அவர் பாலமாக விளங்கினார்.

திருக்குறள் தெளிவுரை என நூற்றுக்கணக்கான உரைகள் இன்று பெருகியுள்ளதற்குத் திரு.வி.க. எழுதிய திருக்குறள் விளக்கமே அடிப்படையாகும் .

திரு.வி.க. ஐம்பத்தாறு நூல்களை எழுதினார்.

திரு.வி.க. பெரிய ஆலமரம் போன்றவர்.

இவர் காலத்தில் அரசியல்வாதிகள், சமயப்பிரிவினர்,

இலக்கியவாணர்கள் தமக்கெனத் தனித் தனியாகப் பிரிந்திருந்தனர்.

சமயவேறுபாடும் அரசியல் பிரிவுகளும் வகுப்புவாதங்களும் மலிந்திருந்த அக்காலத்தில் திரு.வி.க. அனைவருடனும் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்கள் வாழ்வில் பங்கு கொண்டு அமைதித் தொண்டாற்றினார்.

பெண்ணின் பெருமையில் காதல் மணம்,விதவை மணம், கலப்பு மணம் முதலியவற்றை வற்புறுத்தியதோடு இளைஞர்கள் வாழ வேண்டிய நெறிமுறைகளும் அதில் வகுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவும் விடுதலையும் என்ற நூலில் அரசியல் வளர்ச்சியும் சமுதாய சீர்திருத்தமும் தீண்டாமை ஒழிப்பும் விரிவாகப் பேசப்பட்டுள்ளன.

திரு.வி.க.வின் உள்ளம் பிணித்த மற்றொரு தலைவர் அண்ணல் காந்தியடிகள்.

இவரைப் பற்றி அவர்
‘மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்’ என்னும் சீரிய தனி நூலே எழுதியுள்ளார்.

தமிழில் இதுகாறும் அதைப் போன்ற நூல் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்நூல் பற்றி, “என்னுடைய நூல்களில் முதல் முதல் படிக்கத் தக்கது ‘மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்’ என்பது.

ஏன்? அதில் வாழ்க்கையுள்ளதாகலின் என்க. காந்தியம் மனித வாழ்க்கைக்கோர் இலக்கியமாக விளங்குவது.

காந்தியத்தில் வாழ்க்கையின் நோக்கும் அடைவுமிருக்கின்றன.

அவைகளைத் தெரிந்து கொள்ள வேண்டுவது மக்களின் முதற்கடமை” என்று சிறப்பாகக் கூறியுள்ளார்.

‘மனித வாழ்க்கையும் காந்தி அடிகளும்’ என்ற நூலில் மனிதன், வாழ்க்கை, காந்தி அடிகள் என்ற மூன்று பெரும் பிரிவுகளில் அரிய கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. ‘

முடியா? காதலா? சீர்திருத்தமா?’ என்ற நூல் எட்டாம் எட்வர்டு தாம் காதல் கொண்ட மாதரசியின் பொருட்டு அரியாசனத்தைத் துறந்ததை முன்னிலையாக் கொண்டது; உரிமையின் மாண்பையும், தியாகத்தின் விழுப்பத்தையும் விளக்குவது; ஏசுநாதரைப்பற்றி அவர் எழுதிய நூல் விவிலியத்தின் சாரமாகும்.

புத்தர், அருகர் பற்றி திரு.வி.க எழுதிய கருத்துக்கள் ஆழ்ந்த சமய நுட்பத்தை புலப்படுத்துவன.

நபிகள் நாயகத்தின் பிறந்த நாளாகிய மிலாதுநபியில், நபிகள் நாயகம் – திருநாவுக்கரசர் – விருஷப தேவர் ஆகிய மூவரையும் ஒருங்கிணைத்து இசுலாமியர் கூட்டத்தில் அனைவரும் மகிழ்ந்து போற்றும் வகையில் பேசிய பேராற்றல் படைத்த திரு.வி.க.வின் பொதுமணத்துக்கு வாய்த்த அணிகலனாகும்.

திருவாரூர் விருத்தாசல முதலியார் மகனார் கலியாண சுந்தரனார் என்ற பெயர்தான் திரு.வி.க. என நிலைத்தது.

திருவாரூர் மரபினரின் ஊர், பெரும்புலமை கொண்டிருந்ததோடு, பாடம் நடத்திய பள்ளி ஆசிரியர். பதிப்பாசிரியர், உரையாசிரியர், இதழாசிரியர், சமய அரசியல் உண்மையைப் பரப்பியவர், செந்தமிழ்ப்பேச்சாளர், பொருள் செறிந்த எழுத்தாளர், இளைஞர்க்கு வழிகாட்டி, தொழிலாளரின் உற்ற நண்பர், உயர்ந்த நிலையிலிருந்தவர் தொடங்கி ஏழை எளியவர் வரை எல்லோரோடும் இசைந்து இனிது பழகியவர். எல்லோரும் மதிக்கும் எண்ணம் வாழ்ந்தவர்.

படிப்பாலும், பண்பாலும், உழைப்பாலும், ஒழுக்கத்தாலும், நாட்டுப்பற்று மொழிப்பற்றாலும், அரசியல் பொதுத் தொண்டினாலும் பொதுமை உணர்வாலும் சிறப்புற்று வாழ்ந்த இவரை “இராயப்பேட்டை முனிவர்”என்றே மக்கள் மனங்குளிர அழைத்து மகிழ்ந்தனர் .

இந்திய நாட்டின் விடுதலை, சாதிப் பாகுபாடு களைதல், பெண் விடுதலை வலியுறுத்துதல், பொருளாதாரப் பொதுமை வேட்டல், இளைஞர் முன்னேற்றம் போற்றுதல், தொழிலாளர் ஏற்றம் காணுதல், சமயப் பொதுமை நாடுதல் இவ்வாறு சமுதாயத்தில் ஏழு துறைகளிலும் தம் சீர்திருத்த முத்திரைகளைப் பதித்த பெருமை திரு.வி.க.வைச் சாரும்.

தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை பல்கலைக்களஞ்சியமாக எழுதியதோடு அரசியல் தலைவர்கள், கலைவாணர்கள், இலக்கியப் புலவர்கள், பல்வேறு சமயங்களின் தலைவர்கள், சமுதாயத் தொண்டர்கள், மகளிர் என்று 125 சான்றோர் பெருமக்களைப் பற்றி அந்த வரலாற்று நூலில் எழுதியுள்ளார்.

ஏறத்தாழ திரு.வி.க. வின் வாழ்க்கைக் குறிப்புகளைக் காட்டிலும், தமிழகத்தினுடைய வரலாறு என்றே அதைக் குறிப்பிடலாம்.

சான்றாக, தமிழ்த்தாத்தா உ.வே.சா வைப் பற்றிய கருத்தைக் காணலாம்.

டாக்டர் சாமிநாத ஐயர் வாழ்க்கை ஓர் இலக்கியம். அறிஞர் உ.வே.சா தமிழிலே பிறந்தார்; தமிழிலே வளர்ந்தார்; தமிழிலே வாழ்ந்தார். அவர் பிறப்பும் தமிழ்; வளர்ப்புந் தமிழ்; வாழ்வுந் தமிழ். அவர் மனமொழி மெய்களெல்லாந் தமிழே ஆயின.

அவர் தமிழாயினர்; தமிழ் அவராயிற்று.

அவர் தமிழ், தமிழ் அவர்.

பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்குக் கால்கொண்டவர் ஆறுமுக நாவலர்; சுவர் எழுப்பியவர் தாமோதரம் பிள்ளை ; கூரை வேய்ந்து நிலையம் கோலியவர் உ.வே. சாமிநாதர்.

தமிழகத்தில் சங்கங்கள், நிலையங்கள், நிறுவனங்கள், இதழ்கள் முதலிய பல்வேறு அமைப்புக்கள் தொடர்ந்து நிலைத்து நிற்க முடியாமல் சில சீர்குலைந்து போனதற்கு 13 காரணங்களைத் திரு.வி.க . சுட்டிக் காட்டியுள்ளார் என்று பேராசிரியர் அறிஞர் நாகலிங்கம் பட்டியலிட்டுள்ளார் .

1.சங்கங்கங்களை எல்லாம் ஒன்றுபடுத்தி காக்க வல்ல ஒரு தாய்ச்சங்கம் இன்மை

2.பல கலைகளை விடுத்து வெறும் இலக்கிய இலக்கண ஏடுகளைக் கட்டி அழுதல்

3.உள்ளாட்டம் – வெளியாட்டம் – ஆடல் பாடல் – சிலம்பம் – சிற்றுண்டி – முதலியன இன்மை

4.வகுப்புப் பிணக்கு

5.தமிழ் பயின்றவருள் பெரும்பான்மையோர் பிற்போக்கராயிருத்தல்

6.நாட்டுப் பற்றின்மை

7.கருத்து வேற்றுமைக்கு மதிப்பளியாமை

8.பொறாமை

9.பிடிவாதம்

10.கால தேச முறைமைக்கேற்பச் செயல்களை மேற்கொள்ளத் தயங்கள்

11.தன்னலம்

12.பொறுமையின்மை

13.ஊக்கமின்மை

இவை இன்றும் பொருத்தமாகின்றன.

திரு.வி.க. வினுடைய பிறந்த நாளாகிய (26-8-2018) இந்த நாளில் தமிழக அரசு திரு.வி.க வின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிப்பதோடு திரு.வி.க.வை தமிழ் மக்கள் தொடர்ந்து நினைவு கூர்வதற்கும் திட்டம் வகுத்து நடைமுறைப்படுத்திய பெருமை தமிழ்நாடு அரசின் பெருமிதத்தைக் காட்டும்.

“திரு. வி. கல்யாணசுந்தரனாரின்
செந்தமிழ்க்கட்டுரைகள் என்னும்
அருவிகளில் ஆடிய நல்லறிஞர்களும் அறிவு பெற்றார்; இளைய சிட்டுக் குருவிகளும் தமிழ்க்காதல் தலைக்கேறிக்குதித்தனவே; வடசொல்லின்கைக்
கருவிகளும் தனித்தமிழின் கனிச்சுவையைக்கண்டு களித்தனவே யன்றோ!”
– பாவேந்தர்.

மேலும் தம் தமிழுணர்வு பற்றிக் கூறும்போது,

“நாம் உண்டது தமிழ்; உயிர்த்தது தமிழ்.
உற்றது தமிழ் ; எல்லாம் தமிழ்.”

என்றும் திரு.வி.க குறிப்பிட்டுள்ளார் .

திரு.வி.க.வின் மணிமொழி என்றும் மறக்க முடியாததாகும் .

– முனைவர் ஒளவை அருள் இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித்துறை.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *