எந்நாளும் தமிழ் ; எப்பணியும் தமிழ்
சிறப்பு வாய்ந்த பதிப்பாளராக வாழ்ந்து தமிழறிஞர்களின் அரிய நூல்களைத் தேடித் திரட்டித் தமிழுக்குச் செழுமை ஊட்டியதைத் தமிழுலகம் என்றும் மறவாது .
நாடு முழுவதும் அலைந்து அலைந்து தொல்காப்பிய உரை வளத்தை ,சங்க இலக்கியக் கட்டுரைகளை – தொகை தொகையாக வெளியிட்டு தன்னுடைய நிலங்களையும் விற்றுப் பெரும் செலவு செய்த கொடை மனம் இளவழகனாரையே (3.7.1948-4.5.2021)சாரும் .
நிறைவாகக் கடந்த ஆண்டு இன்றைய தமிழக முதல்வரைக் கொண்டு பேரறிஞர் அண்ணாவின் எழுத்து வடிவங்கள் முழுவதையும் 65 தொகுதிகளுக்கு மேல் வெளியிட்டார் .
தினமணி ஆசிரியர் கலாரசிகனில் அவரைப் பாராட்டிப் பாதுகாப்பான பழைய பனுவல்களைத் தேடி வெளியிட்டதையும் – அறிஞர் இளங்குமரனாரின் உரை நூல்களையும் வனப்பாகப் பதிப்பித்ததையும் என்றும் போற்ற வேண்டும் .
” எந்நாளும் தமிழ் – எப்பணியும் தமிழ்ப்பணியே ”
என்ற உயர்ந்த நோக்கத்தோடு தமிழுணர்வாளராக ஓங்கிய சிறப்படைந்து பொதுப்பணிகள் ஆற்றியதை நாடு நன்றியோடு நினைவு கூரும் .
இளவழகனாருடைய மறைவு –
இளவழகனாரின்றி அரிய நூல்கள் தொகுப்பாரின்றி புலம்பும் .
முள்ளிவாய்க்கால் அவலத்தை நினைந்து தமிழ்க்காட்சியகம் அமைக்க தன் சொந்த நிலத்தை வழங்கியதை எவரும் மறக்க முடியாது .
கொரோனா கொடுமை கண்ணில்லாமல் – ஒளிவிளக்கை அணைத்து விட்டது .
ஆற்றொணாத் துயரத்தோடு
ஒளவை நடராசன்
தினமணி – தமிழ்மணி – 15 5 2022 – பக்கம் எண் : 6
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஒளவை ந.அருளிடமிருந்து வந்திருக்கும் வாட்ஸ் ஆப் தகவல் மகிழ்ச்சி அளிக்கிறது.
‘ தமிழ்மண் பதிப்பகம் ‘ இளவழகனாரின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு,
கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் தலைமையில் நடைபெற இருக்கிறது என்பதுதான் அந்த மகிழ்ச்சியான செய்தி.
புத்தகங்கள் பதிப்பிப்பது என்பது வெறும் தொழிலல்ல.
அதில் ஈடுபாடும், அர்ப்பணிப்பு உணர்வும், ஆத்ம திருப்தியும் எல்லாவற்றுக்கும் மேலாக சாதனைப் பெருமிதமும் இருப்பவர்களால் தான் தொடர்ந்து வெற்றிபெற முடியும். ‘
தமிழ்மண் இளவழகனாரின் குறிக்கோள் அவை மட்டுமல்லாமல்
வித்தியாசமானதாகவும் இருந்தது.
கடந்த நூற்றாண்டில் தமிழுக்குப் பங்களிப்பு நல்கிய பேரறிஞர்களின் படைப்புகளை எல்லாம் , ஒன்றன் பின் ஒன்றாகத் தொகுத்து அவர் வெளியிடத் தொடங்கிய போது நான் மலைத்துத்தான் போனேன்.
ஒரு நாள் இரவு அவர் ‘ தினமணி அலுவலகத்துக்கு வந்து ஒரு பெரிய அட்டைப் பெட்டியை எனது அறைக்குக் கொண்டு வந்தார். ‘
என்ன இது என்று நான் கேட்பதற்குள், அதைத் திறந்து அந்தப் பொக்கிஷத்தை என் மேஜையில் அடுக்கத் தொடங்கினார். ‘
தமிழ்த் தென்றல் திரு.வி.க வின் அனைத்துப் படைப்புகளையும் தொகுத்து திரு. வி.க. தமிழ்க் கொடை’ என்று வெளிக்கொணர்ந்திருந்தார் அவர்.
மறைமலையடிகள் ( மறைமலையம் ), பாரதிதாசன் ( பாவேந்தம் ), தேவநேயப் பாவாணர் ( பாவாணம் ), க. அப்பாதுரையார் ( அப்பாத்துரையம் ) என்று வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக அவர் வெளிக்கொணர்ந்த தொகுப்புகள், காலப் பெட்டகங்கள்.
வெ.சாமிநாத சர்மாவின் படைப்புகள் உள்பட தமிழுக்கு
உரமூட்டிய அறிஞர்கள் எவரையும் அவர் விட்டுவைக்காமல், வருங்காலத்துக்கு அவர்களது எழுத்தை பத்திரப்படுத்திய முயற்சிக்காக அவரைத் தமிழகம் கொண்டாட கடமைப்பட்டிருக்கிறது.
இளங்குமரனாரின் படைப்புகளை அவர் இருக்கும்போதே தொகுத்து வெளியிட்ட நிகழ்வில்
நீதியரசர் அரங்க மகாதேவனும் – நானும் கலந்து கொள்ள வேண்டும் என்று விழைந்து, அழைத்துப்
பெருமைப்படுத்திய இளவழகனாரை நான் எப்படி மறக்கமுடியும் .
தனது வாழ்நாளில் மிகப்பெரிய சாதளையாகவும், தனது பதிப்புத்துறை வாழ்க்கையின் தலைசிறந்த பங்களிப்பாகவும் அவர் கருதியது. அறிஞர் அண்ணாவின் அனைத்துப் படைப்புஎிப் தொகுத்து வெளியிட்ட பணியைத் தான். ‘ அண்ணா அறிவுக்கொடை ‘ என்கிற தலைப்பில் அவரது எழுத்து, பேச்சு,
படைப்புகளை எல்லாம் தேடிப்படித்துத் தொகுத்து வெளியிடும் முயற்சி குறித்து எத்தனை முறை அவர் என்னிடம் பேசினார் என்பதற்குக் கணக்கே கிடையாது.
44,000 பக்கங்கள் அடங்கிய அண்ணா அறிவுக்கொடை’ இப்போது 123 தொகுதிகளாக முழுமை பெற்று வெளியாக இருக்கிறது.
இளவழகனார் இருக்கும் போதே. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அண்ணா அறிவுக்கொடை’ தொகுப்பை வெளியிட்டது ஒருவகையில் நல்லதாகிவிட்டது.
அந்தத் தொகுப்பை வெளியிட அவருக்கு உதவிய வி.ஐ.டி. வேந்தர் கோ.விசுவநாதன் குறித்து இளவழகனார் நன்றிப் பெருக்குடன் என்னிடம் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன.
இளவழகனார் மறைந்தபோது, கொள்ளை நோய்த் தொற்றுக் காலம்.
அவருக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடத்தக் கூட இயலவில்லை . அந்தக் குறை இந்த ஓராண்டு நினைவேந்தல் நிகழ்வால் தீர்கிறது.
வருகிற சனிக்கிழமை ( 21 – 5 2022 ) சென்னை தி.ந கரில் உள்ள பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நடக்க இருக்கும் தமிழ்மண் ‘ இளவழகனாரின் நினைவேந்தல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கும் அண்ணா அறிவுக் கொடை’ தொகுப்பாசிரியர் செந்தலை ந.கவுதமனும், இளவழகனாரின் மகள் முனைவர் தமிழமுது இளவழகனும் எனது நன்றிக்கும் வணக்கத்திற்கும் உரியவர்கள்.

Add a Comment