நேருவின் நிகரற்ற சிந்தனை வளம்

தினமணி
14 11 2020
பக்கம் எண் :10

நேருவின் நிகரற்ற சிந்தனை வளம்.

முனைவர் ஔவை ந. அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை

புகழ்வாய்ந்த தலைமுறைப் பெருமையும் தாமே வளர்த்துக்கொண்ட தகுதியும் நேருவுக்கு இயல்பாக அமைந்தனவாகும். நேருவின் வாழ்வில் நிகரற்ற நிகழ்ச்சிகள் பல நிகழ்ந்தன. அவற்றுள் ஒரு நிகழ்ச்சி புதுவையில் நிகழ்ந்தது. அதன் சாரமாகத்தான் இக்கட்டுரை அமைகிறது.
நான்கு தலைமுறைகளுக்கு மேல் அவர் குடும்பத்தினர் ஒப்பரிய சிறப்பு பெற்றவர்களாயிருந்தனர். தில்லி நகரின் புறப்பகுதியில் ஒரு நீரோடைக்கு அருகில் சிறிது இடம் இவர் மரபினருக்கு வழங்கப்பட்டது. நீரோடையை உருது மொழியில் ‘நகார்’ என்று கூறுவர். அதனால் நகார், ‘நேரு’ என்று மருவிற்று.
நேருவின் பாட்டியார் இந்திராணி இந்தி, பாரசீக மொழிகளில் வல்லவராகத் திகழ்ந்து, பாரசீகக் கவிதைகளை அழகாகவும், பொருத்தமாகவும் தம்முடைய உரையாடல்களில் மேற்கோளிட்டுப் பேசுவாராம். நேருவின் தந்தை மோதிலால் நேரு, மாபெரும் வழக்கறிஞராக ஒளிர்ந்தவர். உருது, பாரசீகம் மற்றும் ஆங்கில மொழிகளில் வல்லவராகத் திகழ்ந்தார்.
ஆங்கிலேய அரசு 1937-இல் இந்திய விடுதலைக்கு முன்னர் இந்தியர்களைக் கொண்டு அமைச்சரவை நிறுவியபோது நேருவின் தங்கை திருமதி விஜயலட்சுமி பண்டிட் அவர்களை அமைச்சராக நியமித்தது. அதற்குப் பாராட்டாக அழகான கடிதத்தை ஏளனத் தொனியில், தங்கைக்கு நேரு எழுதினார். “சீனத் தத்துவ ஞானி ஒருவருக்கு நான்கு பிள்ளைகள் இருந்தார்களாம். அதில் முதல் பிள்ளை அறிவுடையவராகவும், கவிஞராகவும் மலர்ந்தார். இரண்டாம் பிள்ளை கலைகளில் மதிநுட்பம் வாய்ந்தவராகவும் திகழ்ந்தார். மூன்றாம் மகன், இராணுவத்தில் வீரராகச் சேர்ந்தார். கடைசி மகனோ, சோடை போய்த் தன்னுடைய புகழ் பெற்ற தந்தைக்குக் களங்கமாக மாறிவிடுவாரோ என்று அஞ்சி, அவரை என்ன செய்ய வேண்டும் என்று பலரை வினவியபோது, அவனுக்கு அறிவுக்கூர்மை சற்றுக் குறைவாக இருந்ததால், அமைச்சராக நியமித்தார்களாம். அதுபோல், நம் குடும்பத்தில் நீ அமைச்சராக நியமனம் பெற்றதை வாழ்த்தி, இந்தக் கதையை உனக்கு அனுப்புகிறேன்” என்றார். இது நேருவின் புகழ் பெற்ற கடிதமாகும். மதிப்பும் கேலியும் நிரம்பிய அன்புக் கடிதமாகும். தங்கையின் மேல் அவர் கொண்டிருந்த பாசம் ஈடற்றது.
பண்டிதர் ஜவகர்லால் நேருவோ, முழுக்க முழுக்க ஆங்கில வழியில் பயிற்சி பெற்று, ஏறத்தாழ ஆங்கிலேயராகவே வாழ்ந்தவர். இந்தியர் தங்கள் உணர்வுகளை உடனுக்குடன் வெளிப்படுத்துவார்கள். ஆனால் நேரு, ஆங்கிலேயர்களைப் போலவே தன்னுடைய உணர்வுகளை உடனுக்குடன் வெளிப்படுத்தும் குணம் கொண்டவரில்லை.
பண்டித நேரு தன் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் புகழ் வாய்ந்தவை. மொத்தம் 196 கடிதங்களை எழுதியுள்ளார். அவ்வாறு அவர் இந்திராவுக்கு எழுதிய கடைசிக் கடிதத்தில், “நான் பொதுவாகக் கடிதங்கள் எழுதுவதில்லை. நான் சிறையில் கழித்த பல ஆண்டுகள் என் வாழ்வின் சிறந்தவை என்றும் கூற நான் தயாராக இல்லை. இருப்பினும், படிப்பும் எழுத்தும் எல்லாவற்றையும் நான் எளிதாகக் கடந்து வருவதற்கு மிகவும் துணையாக இருந்தன. நான் ஓர் இலக்கியவாதி அல்ல, நான் வரலாற்றாளரும் அல்ல; உண்மையில் நான் யார்? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது எனக்குக் கடினமாக இருக்கிறது. பல துறைகளில் மேலோட்டமான அறிவைக் கொண்டவனாக நான் இருக்கிறேன். கல்லூரியில் அறிவியல் பயிலத் தொடங்கினேன். பின்னர்ச் சட்டம் தேர்ந்தெடுத்தேன். வாழ்வின் ஏனைய பல்வேறு பொருள்களில் நாட்டம் கொண்டேன். இறுதியாக, நாட்டில் மிகவும் செல்வாக்கான அரசியல் களமடைந்து தற்போது பின்பற்றப்பட்டு வரும் சிறை வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டேன். யாதொரு செயலிலும் இந்தக் கடிதங்களில் நான் எழுதியிருப்பவைகளை இறுதித் தீர்வாக நீ எடுத்துக்கொள்ளக் கூடாது. எந்த அரசியல்வாதியும் ஒவ்வொரு துறை குறித்தும் ஏதேனும் கருத்து சொல்ல விரும்புவது வழக்கம். மேலும், உண்மையில் அவர் அறிந்திருப்பதைக் காட்டிலும் அதிகமாகத் தனக்குத் தெரியும் என்று அவர் நடிக்கச் செய்வார். கருத்துடன் இவர்களைக் கவனிக்க வேண்டும்” என்று பணிவு பளிச்சிட எழுதினார்.
“ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு மாதமும், 24 மணி நேரத்தில் 16 முதல் 17 மணி நேரம் பணியாற்றுவது என்பது நேருவின் ஒரு நாள் நிகழ்ச்சி என்பது புதுமையல்ல. 13 ஆண்டுகளாக அவருடன் இருந்த வகையில் பணி ஆற்றியது எனக்கு வழக்கமாகிவிட்டது. 70 அகவையைத் தாண்டிய நேருவுக்கு வியக்கத்தக்க வகையில் இருக்கும் உழைக்கும் ஆற்றல் கிட்டியிருந்தது” என்று நேருவின் முதன்மைத் தனிச் செயலராக இருந்த எச்.வி.ஆர்.அய்யங்கார் எழுதினார்.
நேரு பெருமகனார் இறந்தபோது, மூதறிஞர் இராஜாஜி எழுதிய இரங்கல் கடிதம் நெஞ்சை உருக்குவதாகும். “என்னைவிடப் பதினொரு ஆண்டுகள் இளையவர், பதினோரு மடங்கு நாட்டிற்கு முக்கியமானவர், பதினோரு நூறு மடங்கு நாட்டு மக்களுக்கு வேண்டியவராவார், பெருந்தகை நேரு திடீரென நம்மிடமிருந்து பிரிந்து சென்றுவிட்டார். இந்தச் செய்தியைக் கேட்பதற்காகவா நான் உயிருடன் இருக்கிறேன், தில்லியிலிருந்து இந்த அதிர்ச்சியைத் தாங்கிக்கொண்டு… அந்தப் பழைய அலுவல் அறை இப்போது முற்றும் காலியாக இருக்கிறது… இந்தப் பத்து ஆண்டுகளாக, பொதுத் திட்டங்களில் தவறானவை என நான் கருதியவை குறித்துப் பெருந்தகை நேருவுடன் நான் போராடிக் கொண்டிருந்தேன். ஆனால் அவரால் மட்டுமே அவற்றையெல்லாம் சரிசெய்ய இயலும் என்பதை இத்தனை நாள்களில் நான் அறிந்து கொண்டேன். வேறு எவரும் அதைச் செய்வதற்குத் துணிய மாட்டார்கள். நான் நடத்திய வாதங்கள் என்னை மேலும் பலவீனப்படுத்தும் வகையில் சென்றுவிட்டார். நம் அனைவரிலும் சிறந்த நாகரிகமுடையவர் நம்மில் பலர் இன்னும் அவ்வாறு அவரைப்போல் பண்படையவில்லை. கடவுள் தான் நம் மக்களைக் காப்பாற்ற வேண்டும்.”
புதுவையில் பிரெஞ்சுக் கலைக்கழகத்திற்கு நேரு 1963-ஆம் ஆணடு வந்திருந்தபோது நிகழ்ந்த ஒரு குறிப்பை, அங்கே நடந்ததை முழுமையாகவும் உருக்கமாகவும் அறிஞர் வி. கந்தசாமிப்பிள்ளை எழுதியுள்ளார். அக்கழகத்தில் பல துறைப்பட்ட ஆராய்ச்சிப் பிரிவுகள் இருந்து வந்தன. கட்டிடத்தின் மேல்தளத்தில் பழம்பொருள் ஆராய்ச்சியும், வடமொழி, கிழக்கு ஆசிய மொழிகள் முதலியவற்றிலுள்ள இலக்கியம், கலை, தத்துவம், சமயம் முதலியவற்றைப் பற்றிய நூற்றொகுப்பு ஆராய்ச்சியும் நடந்து வந்தன. ஒரு பகுதியில் என் தலைமையில் சங்க நூல் ஆராய்ச்சியும் நடந்து வந்தது. நேரு அவர்கள் எல்லாத் துறைகளையும் ஆழ்ந்து கவனித்து விட்டு மேற்றளத்திற்கு வந்தார். அங்கிருந்த பல ஆராய்ச்சிப் பகுதிகளையும் பார்த்து விட்டு மிகுந்த களைப்புடன் நான் பணியாற்றிக் கொண்டிருக்கும் இடத்திற்கு வந்தார்.
எவ்வளவு சொற்கள் தமிழ் மொழியில் இருக்கின்றன என்று நேரு பெருமகனார் ஆய்வு நுணுக்கத்தால் என்னைப் பார்த்துக் கேட்டார். நான் சங்ககாலத் தமிழில் 3,03,373 (மூன்று லட்சத்து மூவாயிரத்து முந்நூற்று எழுபத்துமூன்று) சொற்கள் இருக்கின்றன என்றேன். “மிகவும் கணக்காகச் சொல்லுகின்றீர்கள், முறையாக வேலைகளைச் செய்து வருகின்றபடியால் தான் இவ்வளவு தெளிவாகக் கூறுவதற்கு எளிதாக இருக்கின்றது”, எனச் சிறிது முகமலர்ச்சியுடன் சொல்லிவிட்டு, “நல்லது ஆங்கில மொழியில் எத்தனை சொற்களிருக்கின்றன என்பது தெரியுமா?” என்று கேட்டார்.
“1928 ஆம் வருடம் ஏறக்குறைய 5,05,190 ( ஐந்து லட்சம் ) சொற்கள் இருந்தன. இப்போது சிறிது கூடியிருக்கக்கூடும்” என்றேன். “1928 ஆம் வருடம் என்ன கணக்கு?” என்றார். “ஆகஸ்போர்டு பல்கலைக்கழக ஆங்கிலப் பேரகராதி முற்றுப் பெற்ற ஆண்டு” என்பதை மனதில் வைத்துக் கொண்டு சொல்கின்றேன்” என்றேன். “அவ்வாறாயின் அப்பேரகராதியில் எவ்வாறு ஈடுபாடு கொண்டீர்கள்” என்றார். நான் உடனே “அகராதித்துறையில் வேலை செய்யும் எவரும் அப்பேரகராதியை தெரிந்து கொள்ளாமலிருக்க முடியுமா? சென்ற 50 ஆண்டுகளாகவே அப்பேரகராதியை ஒரு தெய்வமாக வணங்கி வருகிறவன் யான்” என்று கூறினேன்.
உங்கள் தமிழ் மொழியை விட ஆங்கில மொழி பெரியது தானே என்றார். நான் சிறிது தயங்கி, “இந்த வினாவிற்கு விடையளிப்பதற்கு முன்பு இரண்டு நிமிடங்கள் சொல்ல வேண்டியவைகளைத் தெளிவாகச் சொல்வதற்கு அனுமதி வேண்டும்” என்றேன். “சரி சொல்லுங்கள்” என்றார். “சங்க காலச் சொற்களின் தொகை இவ்வளவு ( 3,03,373 ) என்று நான் சொன்னபோது ஏறக்குறைய ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி இன்று வரையில் உள்ள நூல்களின் நிலைபெற்றுள்ள சொற்களின் தொகையைக் கூறினேன். அதாவது சங்க நூல்களில் காணப்படும் சொற்கள் அனைத்தும் கூட்டினால் அவ்வளவுதான். உயர்ந்தவர்கள் கருத்துக்களெல்லாம் தமிழ் மொழியில் காணப்படும்” என்றேன். “வேண்டுமானால் உயர்ந்தவர்களுடைய எந்தக் கருத்தைக் கூறினாலும் அதற்கு ஒத்த கருத்து தமிழ் மொழியிலிருந்து நான் கூற முடியும். அதிகம் போகவேண்டியதில்லை. என் முன்னிற்கும் எங்கள் பிரதமருடைய கருத்துக்களுக்கும் சொற்களுக்கும் எதிரொலி போன்ற சொற்களையும் நான் தமிழிலிருந்து எடுத்துக் கூறுவேன்” என்றேன். அவர் ஒன்றும் சொல்லாது, “என்னைப்பற்றிப் பேசுகின்றீர்களா? ஏதாவது சொல்லுங்கள் பார்ப்போம் என்று கேட்பார் போல மார்பை விரலால் தட்டிக் காண்பித்து கையைக் குறிப்பாக ஆட்டினார். நான் உடனே காலம் விரைந்து செல்வதை உணர்ந்து “விரைவாக இப்போது எனக்கு உடனடியாக நினைவில் வருவது தாங்கள் மனமுடைந்து அண்ணல் காந்தியடிகள் இறந்தவுடன் சொல்லிய சொற்களுக்குச் சரியான எதிரொலி போன்று கம்பர், தசரதன் இறந்ததைக் கேட்ட இராமன் புலம்பியதாகக் கூறும்,
“நந்தா விளக்கு அனைய நாயகனே!
நானிலத்தோர் தந்தாய்!
தனி அறத்தின் தாயே!
தயா நிலையே! எந்தாய்!
இகல் வேந்தர் ஏறே! இறந்தனையே அந்தோ!
இனி, வாய்மைக்கு ஆர் உளரேமற்று?’

என்ற செய்யுளை எடுத்து அவர் சொற்களோடு ஒத்திட்டுக் காண்பித்தேன்

“O! Light of Land!
O! Father of the Nation!
Who is there now for righteousness?”
அப்போது கேட்ட நிலையில் வாட்டமுற்று நின்றார். கண்ணிலும் நீர் துளிர்த்தன.
ஒரு நாட்டின் தலைமை அமைச்சர் புலமைப் பேரொளியாக நின்று பத்துமணித் துளிக்குள் பேசியது என் நினைவில் எப்போதும் நிலைத்து விட்டது. நேருவின் பல்வேறு கவிதைகளில் அறிவியல் தெளிவும், ஆய்வுச் சிந்தனையும் உண்டு என்பதற்கு இது ஒரு சான்றாகும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *