தினமணி நாளிதழில் 4.5.2021 அன்று வெளியான ” இளவரசர் எடின்பரோ கோமகன் ! ” என்ற தலைப்பில் வெளியான நடுப்பக்கக் கட்டுரை – பக்கம் எண் 6
இளவரசர் எடின்பரோ கோமகன் !
கிரிக்கெட் ஆட்டத்தில் 99 ஆவது ஓட்டங்களை முடிக்கும் நேரத்தில் நம்மை ஏமாற்றும் படி எதிர்பாராத ஆட்டமிழப்பு ஏற்பட்டால் பார்வையாளர் அனைவரின் மனமும் பதறும் தவிக்கும் .
அதுபோலவே இன்னும் இரண்டு மாதங்களில் நூறாம் அகவையைத் தொடுவார் என்று நாடே ஆர்வம் ததும்ப நம்பிய வேளையில் எடின்பரோ கோமகன் மறைந்தது அரச குடும்பத்துக்கு மட்டுமன்றி உலக நாடுகள் பலவற்றுக்கும் துயரம் அளித்தது .
பேரரசியாரும் பிலிப் கோமானும் 73 ஆண்டுகள் இனிய இல்லறம் நடத்தினர் .
இது நீடிய நல்வாழ்வு ..குடும்பத்தில் தாம் பெற்ற செல்வங்களின் வாழ்வில் மணவிலக்கும் – மனமுறிவும் ,மரபு மீறலும் எனப் பல்வேறு புயல் வீசினாலும் அரசியாரும் – அவர் கணவரும் கலங்காத கற்பாறையாக நிலையாக நின்று கனிவு குலையாமல் வாழ்ந்தனர் .
இந்த 99 ஆண்டு வாழ்வில் இந்தப் புதிரான மனிதரின் வாழ்வுப்பயணம் வியப்பாகத்தான் உள்ளது..
26 வயது இளைஞரான இளவரசர் பிலிப் 21 அகவை நிரம்பிய இளவரசியாரான இரண்டாம் எலிசபெத் திருமணம் நிகழ்ந்தது .
இங்கிலாந்தின் பேரரசராக இருந்த ஜார்ஜ் அவர்களின் மறைவையடுத்து தனது 26 ஆம் வயதில் எலிசபெத் பெருமாட்டியார் பேரரசியாராகப் பொறுப்பேற்றார் .
தமது இறுதி நாள் வரை ஒரு பரிவு மிக்க ஆருயிர்க் கணவராக , அரசியாரின் கடமைகளைக் குறைவின்றி நிறைவேற்ற உறுதுணையாகவும் இவர் இருந்தார் .
இங்கிலாந்து அரச மரபு வரலாற்றில் நீண்ட காலம் ஆட்சி செய்தவர் எனும் சாதனையை இங்கிலாந்து அரசியாரும் , அப்படி ஆட்சி செய்தவரின் வாழ்க்கைத்துணையாக நீடிய அமைதி வாழ்வு வாழ்ந்தவர் எனும் சாதனையைக் கோமகன் பிலிப்பும் படைத்துள்ளார்கள்.
அரசியாரை அரவணைத்து வந்த அன்பும் பரிவும் ஆற்றலும் என்றும் பாராட்டுக்குரியன .
இந்தச் சாதனைகளின் நடுவில் இவர்கள் எதிர்கொண்ட சோதனைகள் ஏராளம்.
இளவரசர் சார்லஸ்( 72 ) , இளவரசி ஆன் ( 70 ), இளவரசர் ஆண்ட்ரூ ( 61 ) , இளவரசர் எட்வேர்டு ( 57 ) எனும் நான்கு மக்கள் செல்வங்கள் .
இவர்களுக்கு வாய்த்தனர் .
இராணியின் அகவை 94 வயது , தனக்கு அவர் மிகவும் உறுதுணையாகவும் உற்ற பலமாகவும் விளங்கியவர் என்றும் அவரின் மரணம் தனக்கு பேரிழப்பாகும் என அரசியார் கூறியுள்ளார் .
1947 நவம்பர் 20 இல் திருமணம் செய்து கொண்ட இருவரும் உலகின் தலைசிறந்த அரச குடும்பத் தம்பதியராக 73 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து 4 குழந்தைகள் , 8 பேரக்குழந்தைகள் , 9 கொள்ளுப் பேரக்குழந்தைகள் பெற்றவர்கள் என்ற பெருமை பெற்றவர்கள் .
அரசியாரின் தங்கையான மார்கிரெட் காதல் பற்றிய பெரும் சிக்கல் வந்த போதும், பின்னர் நேர்ந்த மணவாழ்க்கை முறிவு, அவரின் பிறர் நட்பும் – தொடர்பும் ,போதைப்பழக்கம் எனப் பல செய்திகள் ஊடகங்களில் அம்பலப்படுத்தப்பட்ட போது அவற்றையெல்லாம் எதிர்கொண்டு கலங்காத திண்மையுடன் பேரரசியாருடன் பிலிப் கோமகன் ஆற்றிய பங்கு அளப்பரியது.
பின்பு இளவரசர் சார்லஸ், டயானா அவர்களின் மணமுறிவும், டயானாவின் விபத்து மரணமும், இளவரசர் ஆண்ட்ரூ மணமுறிவு, இளவரசி ஆன் அவர்களின் முதல் மணமுறிவு அதன் பின்னான மறுமணம், இளவரசர் சார்ல்ஸ் மறுமணம் எனத் தமது வாரிசுகளின் வாழ்வில் ஏற்பட்ட பலவிதமான சூழலுக்கு முகம் கொடுப்பதில் பக்கபலமாக நின்றதுடன் தகுந்த நேரத்தில் தகுந்த கருத்துரைகளை வழங்கியவர் கோமகன் பிலிப் ஆவார்.
தாம் பெற்ற பிள்ளைகளின் வாழ்க்கைச் சிக்கல் ஒருவாறு முடித்து விட்டோம் என்ற நிலையில் ,அண்மையில் அரச குடும்பப் பேரனான இளவரசர் ஹாரியும் அவர் மனைவி மெகன் மார்க்கலும் அரச மரபிலிருந்து விலகி அமெரிக்காவில் நிலை கொண்டது மட்டுமின்றித், தொலைக்காட்சி நேர்காணலில் இங்கிலாந்து அரச வாழ்வைத் குறை சொல்லும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு அதிர்ச்சியூட்டிய நிகழ்வை எதிர் கொள்ள வேண்டி வந்தது.
அச்சமயத்தில் தான் ஒரு திங்களுக்கு முன் கோமகன் பிலிப் மருத்துவமனையில் சேர்த்திருந்தார் .
இரண்டு வாரங்களில் மாளிகை திரும்பினார்,அவர் மறைந்த செய்தி தெரிந்தவுடன் நாட்டின் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறந்தது .தேசியகீதம் இசைக்கப்பட்டது .கோமகன் இராணுவச் சீருடையோடு
நின்ற புகைப்படம் பக்கிங்காம் அரண்மனை வாயிலில் வைக்கப்பட்டிருந்தது .எத்தனையோ முறை தடுத்தும் மலர் வளையங்கள் வேண்டாம் என்று வலியுறுத்தியும் – பிரித்தானிய மக்களின் பழமைப்போற்றும் பாங்கு குறையாமல் மக்கள் திரண்டனர் .
இங்கிலாந்து அரசியாரின் கொள்கையான “ விளக்கமும் இல்லை, சர்ச்சைகளில் ஈடுபடுவதும் இல்லை “ என்ற பொருண்மைக்கு எள்ளளவும் பிழை நேராமல் கோமகன் பிலிப் – அரசியாரோடு ஒத்துழைத்தார் என்பது வெள்ளிடைமலை.
1921 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 10ஆம் நாள் கிரெக்க நாட்டிலுள்ள கோர்பூ எனும் தீவில் கிரேக்க, டென்மார்க்கு நாடுகளில் இளவரசரான ஆண்ட்ரூவுக்கும் , ஜெர்மனிய பட்டன்பேர்க் நகர இளவரசி அலீஸ் என்பவருக்கும் ஜந்தாம் மகவாக நான்கு பெண்களுக்குப் பின்னால் ஆண் மகவாகப் பிறந்தவர் கோமகன் பிலிப் .
பிறப்பின் மூலம் கிரேக்க நாட்டிற்கும் , டென்மார்க் நாட்டிற்கும் பட்டத்துக்குரிய இளவரசர் எனும் உரிமையைப் பெற்றவர் இளவரசர் பிலிப்.
இளவரசர் பிலிப்பின் தாய்வழிப் பாட்டனாராகிய பட்டன்பேர்க் இளவரசர் லூயிஸ் இங்கிலாந்துக் குடியுரிமை பெற்று லூயிஸ் மவுண்ட்பேட்டன் என்று வாழ்ந்து இங்கிலாந்தில் மடிந்தார்.
அப்போது இரண்டாம் உலகப்போரின் முடிவுக்கு பின்னால் இங்கிலாந்தில் ஜெர்மனிக்கு எதிரான அலை வீசிக் கொண்டிருந்தது.
பாட்டனாரின் மறைவிற்குப் பின்னர் தாயுடன் அவர் மீண்டும் கிரேக்க நாட்டிற்குத் திரும்பினார்.
அப்போது கிரேக்க நாட்டிற்கும் துருக்கிக்கும் போர் நிகழ்ந்தது அப்போது கிரேக்க நாட்டின் அதிபராக இளவரசர் பிலிப்பின் தந்தையான இளவரசர் ஆண்ட்ரூவின் அண்ணன் முதலாம் கான்சடன்டைன் அரசராக இருந்தார்.
துருக்கியுடன் நடந்த போர் படுதோல்வியடைந்து பொறுப்பு பிலிப் அவர்களின் பெரிய தந்தை மீது சாய்ந்தது அதனால் அவர் அரச பதவியிலிருந்து அகற்றப்பட்டு, இளவரசர் பிலிப்பின் தந்தையும் குடும்பமும் நாடு கடத்தப்பட்டனர்,
சில ஆண்டுகள் பிரான்சில் வதிந்தனர் , கோமகன் பிலிப்பின் தாயார் அலீஸ் மனநோயாளியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார் .. தந்தையோ மொன்டிகார்லோவில் வாழ்ந்து வந்தார் .
இந்நிலையில் தான் இளவரசர் பிலிப் இங்கிலாந்தில் தாய்வழிப் பாட்டியாரான விக்டோரியா மவுண்ட்பேட்டனுடன் வளர்ந்தார் .
தாய் மாமனான மவுண்ட்பேட்டன் பிரபு அவரைத் தன் மகன் போலப் பரிவு காட்டினார் .
ஸ்காட்லாந்து நாட்டில் கல்வி பயின்று பின்னர் தனது கிரேக்கக் குடியுரிமையை துறந்து விட்டு இங்கிலாந்துக் குடியுரிமை பெற்றார் .
இங்கிலாந்துக் கடற்படையில் இணைந்து விரைந்து பதவிகளில் உயர்ந்த தகுதி பெற்றார் .
23 வயது நிரம்பிய அழகிய இளைஞராக மிளிர்ந்த இவர் மீது 18 வயதே நிரம்பிய அப்போதைய இளவரசியாரான இரண்டாம் எலிசபெத் அவர்கள் காதல் கொண்டதாகக் கூறப்படுகிறது.
அவரை விட ஐந்து வயது அதிகமான இளவரசர் பிலிப்பை இளவரசியாரின் தந்தையாகிய பேரரசர் ஜார்ஜ் மணமகனாகக் கொள்ள முதலில் விரும்பவில்லை என்று கூறப்பட்டது.
21 வயதில் தனது காதலை அயலவருக்கு உறுதியாக மொழியவே ,இளவரசி எலிசபெத் அவர்களின் விருப்பத்திற்கு மாமன்னர் பின்னர் இசைவுதந்தார் .1947 நவம்பர் 20 ஆம் நாள் திருமணம் மிகச் சிறப்பாக நிகழ்ந்தது .
இளமை மிடுக்கும் துடிப்பாற்றலும் கொண்டவரும், கடற்படையில் கட்டளையிடும் தளபதித் தகமையில் திகழ்ந்தவருமான இளவரசர் பிலிப்புக்கு தொடக்கத்தில் இங்கிலாந்துப் பேரரசியாராக மிளிரப்போகும் அரசிக்கு அடங்கிய காப்பாளராக மாறுவதில் சிக்கல்கள் இருந்ததாகவும் ,அந்நாளில் அவரிடம் காணப்பட்ட களியாட்ட விருப்பத்தை எலிசபெத் பேரரசியார் கண்டும் காணாதது போலப் பொறுமை காத்தார்.
அரசியாரின் நிகரற்ற நிறை காத்த நெஞ்சம் பின்னாளில் பெருமிதம் ததும்பும் உறவுக்கு அடித்தளமிட்டது என்று அரச மரபியல் வரலாற்றாளர் குறிப்பிடுகின்றனர் ..
அரசியின் கணவர் அரசராக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை
.அரசியாரின் மகன் அரசராவதே பிரிட்டன் மரபாகும் .
கோமகனின் மிகச் சிறந்த வெற்றியாக “ எடின்பரோ கோமகன் பரிசு இளைய தலைமுறைக்குத் தன்னம்பிக்கை வளர்க்கும் பரிசுத் திட்டம் ” எனக் குறிப்பிடுகிறார்கள்.
இன, மத, நிற, சமுதாய ஏற்றத் தாழ்வுகள் என
எவையுமின்றி அனைத்து இளம்பருவத்தினரும் இந்தப் போட்டியில் பங்கு கொள்வதின் மூலம் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்கிறார்கள்.
இந்தப் போட்டியில் பங்கு கொண்டு நிறைவு செய்பவர்கள் ,பரிசுப் பத்திரத்தைக் கோமகன் பிலிப் அவர்களிடமிருந்து நேரடியாகப் பெற்றுக் கொள்வதே இதன் சிறப்பாகும்.
இதுமட்டுமின்றி காலமாற்றத்துக்கு அரச குடும்பம் விதிவிலக்கானதல்ல எனும் கோட்பாட்டிற்கமைய சூழலுக்கேற்ப மாற்றங்கள் நிகழ உந்துகோலாகச் செயற்பட்டவர் கோமகன் பிலிப் என்று அவரிடம் நெருக்கமானவர்கள் கூறிப் பாராட்டினார் ..
இங்கிலாந்துப் பேரரசியாரும் வரிவிதிப்புக்குக் கட்டுப்பட்டவர் எனும் வகையிலேற்பட்ட மாற்றம் உட்பட, “ பக்கிங்காம் அரண்மனை ” எனும் அரசியாரின் பெருமைமிகு அரண்மனையைக் கோடை விடுமுறைக் காலங்களில் மக்கள் பார்வையிடும் வகையில் வாய்ப்பு வழங்க இவர் ஒரு முக்கிய காரணமாகவிருந்தார் என்பது செய்தி.
தன் மனதில் பட்டதை எந்தவிதத் தயக்கமுமின்றி பேசிவிடுவது இவரைப் பல சமயங்களில் சிக்கலுக்குள்ளாக்கியிருக்கிறது.
பண்ணைகள், சுற்றுச்சூழல் – வளம் என்பதில் மிகவும் ஆர்வம் கொண்ட எளிய மாமனிதராக இருந்தார்.
மிகவும் நகைச்சுவையாகப் பேசும் இவரிடம் ஒரு நிருபர் உங்களைப் பற்றி எவ்வாறு மதிப்பிடுவீர்கள் என்று நெருடலாகக் கேட்டதற்கு “ நான் ஓர் அகதிக் கணவன் என்று புன்முறுவலுடன் பதிலளித்தாராம்.
மருத்துவமனையிலிருந்து நலமடைந்து திரும்பிய இவர் தாயார் கத்தோலிக்கச் செவிலியராக மாறி வாழ்ந்தார்.
தனது நிறைவுக் காலங்களில் இங்கிலாந்தில் தன் மகனுடன் வாழ்ந்தார்.
இவரைத் தன் மகன் போல் வளர்த்த மாமனாரான மவுண்ட்பேட்டன் பிரபுவின் மரபினால் இவர் பெயரும் இளவரசர் பிலிப் மவுண்ட் பேட்டன் என்றும் குறிப்பிடுவார்கள் .
அரசியாரும் – இளவரசர் பிலிப் கோமகனும் இந்திய நாட்டோடு தாம் கொண்ட நல்லுறவு அடிப்படையில் மூன்று முறை வருகை புரிந்துள்ளனர் .பாரதத் திருநாட்டின் விடுதலைப் பொன்விழாவில் இவர்கள் கலந்து கொண்டது பெருமைக்குரியதாகும் .
கொரோனா எனும் கொடிய தீநுண்மியின் கட்டுப்பாட்டிலும் மறைந்த இவருக்காக எட்டு நாள்கள் துக்க தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது .
17.04.2021 சனிக்கிழமை 3 மணியளவில் வின்சர் மாளிகையில் இறுதி நிகழ்வுகள் நிகழ்ந்தன .
கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்கமைய முப்பது பேரே கலந்து கொள்ள முடிந்தது .
அரச குடும்பத்தைச் சேர்ந்த நெருங்கிய உறவினர்களே நேரடியாகப் பங்குபெற்றனர் .
இங்கிலாந்துப் பிரதமரே அரச உறவினருக்கு முதன்மை வழிவிட்டுத் தான் கலந்து கொள்ளப்போவதில்லை என்று அறிவித்தார்.
விதியை மதிக்கும் ஆங்கிலேயப் போக்கு உலகப்புகழ் பெற்றதாகும் .
இங்கிலாந்து அரசியாருடன் 73 வருடங்கள் வாழ்ந்து மறைந்த அவரது அன்புக் கணவர் எடின்பரோ கோமகன் இளவரசர் பிலிப் மறைவுக்கு உலகத் தலைவர்கள் அனைவரும் ஆறுதல் செய்திகளைப் பகிர்ந்துள்ளனர் .
மகாகவி பாரதியார் வேல்ஸ் இளவரசருக்கு நல்வரவு என்ற கவிதையில் குறிப்பிட்டதைச் சிறிது மாற்றி
” வடமேல்திசைக்கண் மாபெரும் தொலைவிலோர் பொற்சிறு தீவகப் பேரரசியின் கணவ நற்றவ தலைவ வாழ்க நின் புகழ் ”
என இந்திய மக்களும் அஞ்சலி செலுத்தினர் .
ஒளவை அருள்
இயக்குநர்
மொழி பெயர்ப்புத்துறை
தமிழ்நாடு அரசு

Add a Comment