தினமணி
தீபாவளி மலர் – 2020
நினைவுகள் அழிவதில்லை !
ஔவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்,
தமிழ்ப் பல்கலைக்கழகம்.
பக்கம் எண் 84,85,86,88.
அருட்செல்வரோடு நான் நாற்பதாண்டுகளுக்கு மேல் பணியாற்றியவன் . உயரிய இயல்புகளோடும் – ஓங்கிய சிந்தனைகளோடும் – தெளிவார்ந்த முடிவுகளோடும் வாழ்ந்த அருட்செல்வரை நான் நினைக்காத நாளே இல்லை.
அவருக்கு எக்கணமும் மனம் ஓய்வாக இருந்ததே இல்லை. எதையாவது எண்ணிக்கொண்டிருப்பது அவருடைய இயல்பு. நாடு, மொழி, இனம், அரசியல், வணிகம், தொழில் வளர்ச்சி, கல்வி மேம்பாடு, கலை வளர்ச்சி, விளையாட்டு, சமயம், சன்மார்க்கம், பொது நலம் என்று அடுக்கிக்கொண்டே போனால் அவை பற்றிய எண்ணற்ற செய்திகளை ஒவ்வொரு கணமும் நினைத்துப் புதிய கருத்துக்களை எடுத்துச் சொல்வார்கள்.
சொல்லியபடியே நினைத்ததை எப்படியாவது ஒருநாள் நிறைவேற்றுவார்கள்.
சென்னைக்கு ஒருமுறை நாங்கள் திரும்பும்போது திண்டிவனம் தாண்டி 20 கல் வந்திருப்போம். எதிரில் ஒரு வாத்துக்கூட்டம் சாலையை அடக்கிக்கொண்டு தன் அழகிய நடையோடு நடந்து கொண்டிருந்தது. நாங்கள் வந்த பிளைமவுத் காரை எவ்வளவோ திறமையாக ஓட்டுநர் துரைசாமி மெல்ல ஓட்டி வந்தாலும், சீருந்தின் கடைசிப் பகுதி ஒரு வாத்தின் வலது பக்கத்தை உரசிவிட்டது. அது ‘ கீச்சு ‘ என்றதும் அருட்செல்வரால் அந்த அவலத்தைத் தாங்க முடியவில்லை .
உடனே தள்ளி, காரை நிறுத்திச் சொல்லி ‘ என்ன ஆயிற்று ‘ என்று தவித்து அங்கே விரைந்து போனார். வாத்தின் உரிமைக்காரர் ஓர் எளிய விவசாயி.” அது பெரிய அடி இல்லைங்க ஐயா ! ஓட்டுநர் மீது தவறில்லை – நீங்கள் போகலாம். இதற்கு ஒன்றும் விலை இல்லை… ” என்று எளிமையாகவும் பெருமிதமாகவும் சொன்னார்.
ஆனாலும் அருட்செல்வர் மனம் தாங்காமல், தன் பையில் இருந்த ரூபாய் 500 கொடுத்து ” வாத்துகளுக்கு எல்லாம் வலையிட்டுக்கொண்டு அழைத்துப்போவதை நான் வடநாட்டில் பார்த்திருக்கிறேன். இங்கேயும் அப்படிச் செய்யலாம் ” என்று சொல்லிவிட்டுத் திரும்பி வந்தபோது சற்றுச் சிறிது தொலைவு தள்ளி வந்து ஓட்டுநர் துரைசாமியைப் பார்த்து “ நீ பதை பதைத்துப் போயிருப்பாய். நாம் ஒரு மணிநேரத்தில் சென்னைக்குப் போக முடியாது. நீ பின்னால் உட்கார்ந்துகொள். ஔவை, நீங்கள் வந்து முன்னால் என்னுடன் அமருங்கள். நான் ஓட்டுகிறேன் ” என்று கூறி 45 மணித்துளியில் சென்னை வந்து சேர்ந்தோம்.
ஆடு – மாடு வளர்ப்பு, கோழிப் பண்ணை , வாத்து வளர்ப்பு இவைகளில் எவ்வளவு தொழில்நுட்பங்கள் உலகநாடுகளில் இடம் பெற்றுள்ளன என்று சொல்லி வந்தவர்.
‘ தேம்சு நதி தீரத்தில் மிதக்கும் வாத்துக்கள் ‘ அன்னங்கள் ‘ என்றே அவற்றைச் சொல்லலாம். அவை அத்தனையும் இங்கிலாந்து அரசியாரின் தனிப்பட்ட அசையும் சொத்தாகும். அதனைக் கண்காணிப்பதற்காக ஒரு வாரியமே இருக்கிறது ‘ என்ற தகவலைக் கூறி விட்டு ‘ நமது மாநிலத்திலும் அப்படிப்பட்ட வாரியங்கள் அமையவேண்டும் ‘ என்று சொன்னார்.
பின்னாளில் அந்தக் கருத்து சில மாவட்டங்களில் சட்டசபையில் இவர் வாதிட்டதனால் நிறைவேறியது.
இப்படியெல்லாம் ஓய்வில்லாமல் அவருடைய மனத்தில் சிந்தனை அலைகள் புரண்டு கொண்டே இருக்கும். –
தன்னுடைய இல்லத்திற்குத் திரும்பிய போது சாலையில் 10 – 15 சிறுவர்கள் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தார்கள். காரைப் பார்த்தவுடன் திடீ ரென்று கலைந்துவிட்டார்கள். அது விடுமுறைக் காலம்.
இதைக்கண்டு அருட்செல்வர், ஒவ்வொரு பள்ளியிலும் – பூங்காவிலும் – மாநகராட்சித் திடலிலும் கிரிக்கெட், ஹாக்கி, வலைப்பந்து, உதைபந்துப் பயிற்சி அளிக்க வேண்டும். தன் செயலாளர் ரவியைப் பார்த்து ‘ விடுமுறைக் காலங்களில் நம்முடைய இல்லத்தின் முகப்பிலோ – பின்புறத்திலோ, கிரிக்கெட் ஆட சணல் பின்னல் பாய் விரித்து 4 மட்டைகள், 6 பந்துகள் வாங்கி வைத்து இப்பிள்ளைகளை வந்து விளையாடச் செய்யுங்கள் ‘ என்று கூறியதோடு, அடுத்த வாரமே அருட்செல்வரும் – ரவியும் விளையாடியிருப்பதை நான் கண்டு
வியப்படைந்தேன் .
புனித மேரி சாலையில் மாணவச் செல்வங்களைப் பார்த்துப் புன்னைகைப்பார். இந்தப் பருவம் வாழ்க்கையில் மிகச் சிறப்பான காலமாகும். பாடங்களைப் படிக்கும் போதே மனத்தில் பதிந்து விடும். அவர்களின் பிஞ்சு விரல்கள் மடிக்கவும் – பிடிக்கவும், எதையும் வளைக்கவும் – நீட்டவும் – இழுக்கவும் தயங்காது.
” நான் எங்கோ படித்திருக்கிறேன். ஒரு சிற்றூரில் தொழிற்கூடத்தில் கழற்ற முடியாமல் இணைந்த இரு வளையங்கள் பல ஆண்டுகளாகத் துருவேறிக் கிடந்ததாம். பள்ளிக்கூடத்து விளையாட்டுத் திடலில் அந்த வளையத்தை ஓரத்தில் போட்டு வைத்திருந்தார்கள். சில திங்கள் கழித்துப் பார்த்தால் இரண்டு வளையங்களும் கழன்று தனித்தனியாகக் கிடந்தன. இளமைக்கு அவ்வளவு வலிமை இருக்கிறது. அந்த வலிமையை வகைப்படுத்தினால் எதிர்காலத்தில் பெரிய பயன் விளையும் ” என்றார் அருட்செல்வர்.
கல்வி என்பது கையும் காலும், மூளையும் ஒன்றாக இணைந்து இயங்கும்போது தான் முழுமை பெறும் என்று நம்மவர்கள் பலகாலம் நினைத்ததில்லை. அதனால் ‘ உழைப்பது வேறு, சிந்திப்பது வேறு ‘ என்றே இருபிரிவுகளாக்கி விட்டார்கள்.
‘ உழைப்பதை முரட்டுத்தனம் என்றுகூடக் கண்டித்தார்கள். இந்த மூட நம்பிக்கையைப் போக்கத்தான் தான் பல்தொழில் நுணுக்கப் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று நான் எத்தனையோ இடங்களில் பேசினேன். சட்டப் பேரவையிலும் வலியுறுத்தினேன்.
பள்ளியில் காலையில் பாடமும்,மாலையில் தொழிற்கூடங்களுக்குச் செல்வதற்கேற்ற பயிற்சியும் வேண்டும் என்றும் கூறினேன்.’ அந்தக் கனவு நிறைவேறும் வகையில் தான் 1957 – ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் ‘ நாச்சிமுத்து பல் தொழில் கல்லூரியைத் திறந்து சிற்றூர்ப்புற மாணவர்களும் தொழிற் கல்வியை முழுமையாகக் கற்றுச் சிறப்படைய வேண்டும் என்று செய்தேன்.
பள்ளியில் படித்து முடித்த அந்த மாணவனை நோக்கி வேலை வாய்ப்பு வீடு தேடி வரவேண்டும் என்று திட்டமிடவேண்டும். அப்போது தான் அண்ணல் காந்தியடிகளின் சர்வோதயக் கல்வி நிறை வேறும் என்று கருதலாம் என்றும் முடிவு செய்தார்.
நூறு பேரைக் கொண்டு மூன்று துறைகளில் தொடங்கப்பெற்ற இந்தத் தொழிற்கல்லூரி இன்று ஓங்கி உயர்ந்து பல்வேறு துறைகளிலும் பிரிவுகளிலும் ஆயிரக்கணக்கான மாணவச்செல்வங்கள் ஆர்வத்தோடு பயிலும் முன்னணிக் கல்வி நிறுவனமாக ஒளிர்கிறது.
1965 – இல் தொடங்கி அண்ணல் காந்தியடிகள் – வள்ளற்பெருமான் நினைவு விழாக்கள் அக்டோபர் திங்களில் மாபெரும் விழாவாக நடந்து வருகிறது. எனக்குத் தெரிந்து அறுபதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் பங்குகொண்டு வந்தார்கள். நீதியரசர் ராமசுப்பிரமணியன், நயவுரைநம்பி ஜெகத்ரட்சகன், புலவர் புலமைப்பித்தன், கவியரசர்கள் சிற்பி, சக்திக்கனல், சிதம்பரநாதன், சொல்வேந்தர் சுகிசிவம், வழக்குரைஞர் ரவி, வழக்குரைஞர் த.ராமலிங்கம். துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன், கவிஞர் வைரமுத்து, பேராசிரியர்கள் பொன்மணி வைரமுத்து , பிரேமா, வழக்குரைஞர் சுமதி, பேராசிரியை பர்வின் சுல்தானா, பாரதி பாஸ்கர், ஐ.நா.வில் பெரும் பொறுப்பில் இன்றும் பணியாற்றிவரும் வழக்குரைஞர் கண்ணன் என்று எண்ணற்ற இளைஞர்கள், அருட்செல்வரைச் சுற்றிச் சுற்றி வந்தவர்கள். மேடை மின்னல்களாக இன்று நாடு போற்ற அனைவரும் மெருகேறித் திகழ்கிறார்கள். அருட்செல்வரின் ஆர்வம் இப்படி வெள்ளமாக நிரம்பியுள்ளது
திருவருட்பாவுக்குப் பதிப்பும் உரையும், ஆண்டு தவறாமல் அரிய நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டு ஆர்வம் வளர்க்கும் நிகழ்ச்சிகளையெல்லாம் நினைத்தால் மனம் நெகிழ்கின்றது. இந் நிலையிலேயே அருட்செல்வர் விழா மண்டபத்திலேயே விழாவில் இறுதியாக இமை மூடியதும் வரலாற்று நிகழ்வாகும்.
நான் எந்தப் பொறுப்பில் இருந்தபோதும் தலைவர் அந்தப் பொறுப்புக்கு என்னை அழைத்துப் போய் அந்த இடத்து அரியணையில் அமர்த்தியிருக்கிறார்கள்.தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு ஒருமுறை வருகை தந்து ‘ ஆயிரம் ஏக்கர் நிலமிருக்கிறது. நூறு ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டால் உங்களுக்கு நிதிச்சுமை இருக்காது. நான் நாளைக்கே முதலமைச்சருக்குக் கடிதம் எழுதுகிறேன் ‘ என்றார். அவ்வாறே கடிதம் எழுதினார்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் கோவை – வேளாண்மைப் பல்கலைக்கழகம் இரண்டும் இணைந்து களம் இறங்குவதில் சிக்கல் வந்தது, அது முடியாமலே போனது.
சங்க இலக்கியங்களுக்கு உரை எழுதிய என் தந்தையாரைத் திருவருட்பாவுக்கு உரை எழுதுங்கள் என்று அருட்செல்வர் ஆணையிட்டார்கள். ‘ இனி மேல் எதையும் நான் எழுதுவதில்லை. என் வாழ்வு முடிகிற நிலையில் இருக்கிறேன் ‘ என்று என் தந்தையார் தளர்ந்து கூறினார்கள்.’உங்கள் வாழ்வு நிச்சயமாக நீடிய நல்வாழ்வாக நிலைக்கும், எழுதுங்கள் ‘ என்றார் அருட்செல்வர்.
பொள்ளாச்சியிலேயே தன் வளமனையில் நான்காண்டுகளுக்கு மேல் உண்டு மகிழவும், கண்டு பேசவும், எண்ணி எழுதவும் அவர் வாழ்வு கழிந்தது.உரை முடிந்ததும் ‘ நான் இதை அச்சிடுவதைக் காணப்போவதில்லை. என் வாழ்வு அருட்செல்வர் மகாலிங்கத்தின் நினைவிலேயே முடிகிறது ‘ என்று சென்னை வந்து அன்று மதியம் தலைவர் வீட்டிலேயே உணவு உண்டு எண்ணி எண்பது நாள்களுக்குள் ஔவை துரைசாமி மறைந்தார்.
இந்த நிகழ்ச்சியை தலைவர் மேடையில் சொல்லாத நாளில்லை. பதிப்பும் உரையும் ஒருசேரக் கண்ட தமிழ் வேந்தர்களைப் போல தலைவர் அவர்கள் இராமலிங்கர் பணிமன்றத்தில் இரண்டனையும் வெளியிட்டார்கள்.
ஒரு முறை தலைவருடன் பகீரதனும் வந்திருந்தார்கள். இருவரும் இடை வழியில் எதையுமே உண்பதில்லை. எப்போதாவது ஒருமுறை இளநீர் வாங்கி அருந்துவார்கள். விளையாட்டுக்காக நான் சொல்வேன், ‘ தலைவருடன் சென்றால் காற்றும் நீரும்தான் உணவென்று. ‘ஆனால் பிறர் மனம் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். குறிப்பிட்ட தொலைவு சென்றதும், ‘நடராசனுக்குப் பசிக்கும், சாப்பிடச் சொல்லுங்கள்’ என்று கூறினார்கள்.
அதற்கேற்ற வகையில் சமையல் ஆளிடத்தில் சொல்லி வைத்திருந்தார். உணவருந்தும் போது எங்கிருந்தாலும் ‘நடராசனுக்கு இனிப்பு வைக்க வேண்டாம்’ என்று நினைவாகக் கூறுவார்கள். என்னைப்பற்றி மட்டுமல்ல; தன்னிடம் பணிபுரிகின்ற அனைவரது உடல் நலனைப் பேணுவதிலும் தனிக் கவனம் செலுத்துவார்கள்.
அவர்களுடன் ஒரு முறை திருவனந்தபுரம் சென்றேன். அன்றிரவு அபேதானந்தா ஆசிரமத்தில் தங்கினோம். ‘பத்மநாபரை வழிபட வேண்டுமென்று விடியற்காலையிலேயே எழுந்து மன்னர் வருவதற்கு முன்னதாகச் சென்று வரவேண்டு’மென்று கூறினார்கள்.
விடியற்காலையில் ‘இன்னுமா தூக்கம்?’ என்று குரல் கேட்டு எழுந்தேன்.பெரும்புலர் காலை மூழ்கி ‘புலராக் காழகம் புலர உடீஇ’ ( திருமுருகாற்றுப்படை ) என்ற அருள்மொழிக்கு இலக்கியமாய், நீராடி ஈரம் புலராத உடையுடன் வழிபாட்டுக்குச் செல்ல அருட்செல்வர் ஆயத்தமாகியிருந்தார்கள்.
அருட்செல்வருக்கு எவ்வளவு எளிமையான விருப்பங்கள் இருந்தன என்பதற்கு இன்னுமொரு சான்று செல்லவேண்டும். தான் உண்ணுவதைக் காட்டிலும் பிறர் உண்ணுவதைக் கண்டு பெரிதும் மகிழ்ச்சி அடைவார்.
அதுவும் பிறருக்கு விருந்து வைப்பதில் அவருக்கு எல்லையில்லாத விருப்பம். அவர் விருந்து முடிந்த பிறகு அங்கே வைத்திருக்கிற பழங்களை எடுத்து அதைத் துண்டுத் துண்டாக நறுக்கிச் சுளைகளைக் கொடுப்பதில் தனி ஆர்வம் காட்டுவார்.
எப்படி என்று கேட்டால் ஆப்பிள், ஆரஞ்சு அதுவும் மாம்பழம் இந்த மூன்று பழங்களையும் அவர் தன் கையில் எடுத்து அதை நன்றாகத் தண்ணீரில் நனைத்துப் பிறகு துடைத்து விட்டு நறுக்கத் தொடங்கினால் பத்து மணித்துளிகளுக்குள் ஒரு மாலை போல அந்த மாம்பழம் ஆகும். பழத்தின் உட்பகுதியை அப்படியே சரி சமத் துண்டுகளாகப் பிறருக்குக் கொடுப்பது வழக்கம்.
‘எப்படி இந்தப் பழத்தை இவ்வளவு அழகான சங்கிலி மாலை போல நறுக்கக் கற்றுக் கொண்டீர்கள் ?’ என்று ஒருமுறை நான் கேட்டேன்.’இது நல்ல கேள்வி தான். பள்ளிக்கூட மாணவனாக நான் இருந்தபோது பொள்ளாச்சியில் கடை வீதியில் போய்ப் பழங்களை வாங்கிக் கொடுத்து பழங்களை எப்படி நறுக்குவது என்று அந்தக் கடையின் உரிமையாளரைக் கேட்பேன். அவர் ஓர் இசு மியர். நான் அவரை ‘பாய் அண்ணா ‘ என்று தான் அழைப்பேன். பழங்களை எப்படி நறுக்குகிறார்கள் என்று எனக்கு உட்கார வைத்து, ஒருநாள் இந்தக் கலையைக் கற்றுக் கொடுத்தார். இப்போது 90 வயது ஆகிறது. இன்னும் கூட அந்த நினைப்பு என் மனதில் இருக்கிறது. பார்க்கிறவர்கள் எல்லாம் இதை வியப்போடு கேட்பார்கள். அதுமட்டு மில்லை, இவரைப் பார்த்துப் பார்த்து அருட்செல்வருடைய செயலாளர் ரவியும் அதை அப்படியே கற்றுக் கொண்டார்.
நான் ஒருமுறை அருட்செல்வரிடம் கூறினேன். ‘அப்படியா’ என்று சொல்லி ‘எங்கே ரவி, நறுக்கிக் காட்டு’ என்று கேட்டபோது கண்டு மகிழ்ந்தார்.ப ங்களைப் பக்குவமாகவும் – பதமாகவும் நறுக்குவதைக் கூட ஒரு கலையாகக் காட்ட வேண் டும் என்ற விருப்பம் அவருக்கு அடங்காத ஆர்வமாக இருந்தது.
”என்னுடைய திருமண வாழ்க்கையின் 60 ஆண் டுகள் இன்று நிறைவடைகின்றன. அது நிகழ்ந்தது ஆகஸ்ட் 27 , 1945 – ஆம் ஆண்டு. அதனை எப்படிக் கொண்டாடலாம்” என்று யோசனை கேட்ட போது, பலபேர் பல கருத்துக்களைச் சொன்னார்கள். அந்த மகிழ்ச்சியை மேலும் இரு மடங்கு மகிழ்ச்சியாக ஆக்கும் ஒரு திட்டத்தை நான் வைத்துக் கொண்டிருந்தேன்.
நம்முடைய தேசத்தந்தை காந்தியடிகள் வரலாற்றைப் பேராசிரியர் கல்கி ‘ மாந்தருக்குள் ஒரு தெய்வம் ‘ என்று எழுதியிருந்தார்.’ தேசத்தையும் – தெய்வீகத்தையும் ஒன்றாக இணைத்த அந்த மாபெரும் ஞானியின் சிந்தனைக ளைக் கொண்ட 17 தொகுதிகளை மீண்டும் வெளியிடுவதுதான் ‘ எனது அத்திட்டம்.அந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆர்வம் இன்று நிறைவேறிவிட்டது ” என் பது அருட்செல்வரின் நூல் வெளியீட்டின் உரையாகும்.
இப்புத்தகத்தைப் படிப்போருக்கு பொது நலம் புரளும் – ஆர்வ அலைகள் நெஞ்சில் நிரம்பி வழியும்.
இனிப்பையும் – வெடிப்பொருள்களையும் நூற்றுக்கணக்கான பொதிகளாக வாங்கி நண்பர்களின் வீட்டுப் பிள்ளைகளுக்குப் பெயரிட்டு அனுப்புவார். அருட்செல்வரின் இந்த ஆர்வம் எங்கே எவரிடம் காண முடியும் ? என்று நினைக்கும்போது இன்றும் மனம் கரையும் !

Add a Comment