POST: 2025-08-08T07:32:11+05:30

மகாகவி காலாண்டிதழ்

ஏப்ரல் – ஜூன் 2025

பக்கம் எண். 20

நல்லாரை காண்பதும் நன்றே…

ஔவை அருள்

வார இறுதி நாளாகிய சனிக்கிழமை மாலை (19.10.24) என் சிந்தையில் எந்நாளும் வீற்றிருக்கும் எம் தந்தையாரின் இனிய நண்பர் பேராசிரியர் எழில் முதல்வன் அவர்களைத் தஞ்சையில் அவர் இல்லத்தில் சந்தித்து அளவளாவும் வாய்ப்பினைப் பெற்றேன்.

அப்பா இயற்கையெய்திய செய்தி அறிந்தவுடன், இரு தனி மடல்களை எனக்கு எழுதித் தேறுதல் கூறிய அப்பெருந்தகை, தன் இல்லத்தின் முதல் மாடியில் தாம் பேணி வரும் அருஞ்செல்வங்களாகிய நூல்களைக் கொண்ட தன்னுடைய இதயமாம் நூலகத்தைக் காட்டி மகிழ்ந்தார்.

கிடைத்தற்கரிய அகராதிகள், இலக்கிய இலக்கண நூல்களோடு பாவேந்தர், உவமைக்கவிஞர் சுரதா ஒளிப்படங்களையும் சுட்டிக்காட்டித் தன் நினைவுகளை இனிமையாகப் பகிர்ந்து கொண்டார்.

பள்ளியில் படிக்கும் காலத்திலேயே எழுத்தின் மீது ஆர்வங் கொண்டு பாவேந்தர் நடத்திய ‘குயில்’ இதழில் 24.2.1959 ஆம் ஆண்டில் பெருமழைப் புலவரின் உரை நயம் என்ற தலைப்பில் தாம் கட்டுரை எழுதிய நிகழ்வினையும்,

தான் பிறந்த வேதாரண்யத்தில் உள்ள தகட்டூர் கிராமத்திலிருந்து தன் தாத்தாவுடன் மேலைப்பெருமழைக்கு நேரில் சென்று புலவர் பொ. வே. சோமசுந்தரனார் அவர்களை, அவர்தம் இல்லத்தில் சந்தித்துத் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.

அப்போது பெருமழைப் புலவர்
குயில் இதழில் வெளிவந்த கட்டுரையைத் தான் படித்து மகிழ்ந்ததைக் குறிப்பிட்டதோடு, பள்ளி மாணவர் நிலையிலேயே உரைநலத்தை எழுதுகிற ஆற்றலைப் போற்றி, “இவ்வாறு என்னை யாரும் தேடி வந்ததே இல்லை” என்ற வியப்புடன் பல மணி நேரம் அவர் பேசியதைக் குறிப்பிட்டுச் சொன்னார்.

பெரும்புலவர் தாமே தைத்த ஆற்றுப் பூவரசு இலையில் உணவு படைத்ததையும், தன்னுடைய பெயரான இராமலிங்கத்தை
‘எழில் முதல்வன்’ என்று மாற்றி எழுதச் சொன்னதையும் குறிப்பிட்டு, ‘ராமன்’ என்றால் ‘எழில்’, ‘லிங்கம்’ என்றால் முதல்வன் என்று சொன்னதோடு ‘லிங்கம்’ என்றால் ஆங்கிலத்தில் ‘One who stands first’ என்று விளக்கம் தந்தார்.

பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பெருங்கதை, நீலகேசி முதலான நூல்களின் உரையாசிரியர் பெருமழைப் புலவர் என்றார் பெருமிதமாக…

மாநிலக் கல்லூரியில் தான் தமிழ்த் துறை மாணவராக இருந்தபோது ஒரு சாலை மாணவராகிய வேலூர் விஐடி வேந்தர் திரு. விசுவநாதன் அவர்களும், மேனாள் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் முனைவர் தமிழ்க்குடிமகன் அவர்களும் இருந்ததைக் குறிப்பிட்டார்.

அத்தோடு, சென்னையிலுள்ள அனைத்துக் கல்லூரித் தமிழ்த்துறையின் மாணவச் செல்வங்கள் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் மு.வ. வகுப்புக்குத் தவறாது சென்ற மாட்சியினைப் போற்றியுரைத்தார்.

தான் பயின்ற மாநிலக் கல்லூரியிலேயே பத்தாண்டுகளுக்கு மேல் தமிழ்த் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றியதை
நெகிழ்வாகச் சொல்லி வரும் பொழுது, மாநிலக் கல்லூரியின் ஆங்கிலத் துறைப் பேராசிரியர் என் சித்தப்பா ஞானசம்பந்தன் தனக்கு மிக வேண்டிய நண்பர் என்றும், அவருடைய மறைவுச் செய்தி, நாளதுவரை தனக்குத் தெரியவில்லை என்றும் வருந்திச் சொன்னார்.

மாநிலக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக இருந்தபொழுது, தன் மனைவியுடன் இரு பெண் குழந்தைகளுக்கும் என் அருமை தாயார் மருத்துவமாமணி தாரா நடராசன் வாயிலாக மருத்துவச் சிகிச்சைக்கு வந்ததை நினைவு கூர்ந்தார்.

மாநிலக் கல்லூரியில் பெரும் பேராசிரியர் தெ.பொ.மீ. அவர்கள் இருந்தபோது மதியம் 2 மணி முதல் 4 மணி வரை தடையின்றி இரண்டு மணி நேரம் தமிழ் இலக்கிய வகுப்புகள் நடத்தியதை முன் நிகழ்வாக அமைத்துத் தானும் பாடம் நடத்தியதோடு,மாணவர்களுக்கு வகுப்பிலேயே தேநீர் வழங்க வைத்ததையும் குறிப்பிட்டார்.

தன்னுடைய முனைவர் பட்டத்தின் வழிகாட்டியாகப் பேராசிரியர் மெ. சுந்தரம் திகழ்ந்ததையும், அவர் தம் நூல்களுக்கு மெய்ப்புத் திருத்தம் செய்ததையும்,

தமக்கு முனைவர் பட்டம் வழங்கலாம் என்று பரிந்துரைத்தவர் பேராசிரியர் ச.வே. சுப்பிர மணியன் என்று குறிப்பிட்டதோடு,

தன்னுடைய மாணவர் தான் பேராசிரியர் பொன். செல்வகணபதி என்று பெருமிதமாகத் தெரிவித்தார்.

யானும் அவர் எம் ஆசிரியர் என்று பகிர்ந்தபொழுது வாழ்த்தி மகிழ்ந்தார்.

கவிஞர் எழில் முதல்வன் அவர்கள் மாநிலக் கல்லூரியில் முதுகலைத் தமிழ் இலக்கியம் முதலாண்டு பயிலும்போதே குயில் இதழில் பாவேந்தர்,

‘குறள் வெண்பாவில் எழில் முதல்வன் நல்ல நல்ல செய்யுள் எழுதும் தொழில் முதல்வன் ஆகின்றான் சூழ்ந்து’

என்று வாழ்த்தியதைப் படித்து
அக மகிழ்ந்தார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *