அரிமா நோக்கு
ஜூலை 2025
பக்கம் எண். 5
உள்ளத்தில் உறைந்த ஒளிக்கதிர்கள்
முனைவர் ஔவை அருள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை
தமிழ் வளர்ச்சி இயக்ககம்,
தமிழ் வளர்ச்சி வளாகம்
தமிழ்ச் சாலை, எழும்பூர்,
சென்னை 600008.
24. 04. 2025 அன்று ஒளவை நடராசன் அவர்களின் 90ஆம் பிறந்தாள் நிகழ்.
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு எதிரில் அமைந்துள்ள, ஒய்.எம்.சி.ஏ. கலையரங்கில், முனைவர் ஔவை நடராஜன் தலைமையில் கவிக்கோ அப்துல் ரகுமான், கலைமாமணி டி.கே.எஸ். கலைவாணன் ஆகியோர் கலந்து கொண்ட அமரர் கலாமின் புகழ்வணக்கக் கூட்டத்தில், புகழ்பெற்ற வழக்கறிஞர் ரவி அவர்கள், இந்தியாவின் மாண்புமிகு மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடனான தனது முதல் சந்திப்பில் ஒளவை நடராசனார் முக்கியத்துவம் பெறுகிற பாங்கு குறித்துப் பலரும் அறியாத உண்மையைப் பின்வருமாறு வியந்து கூறுகிறார்:-
“08.12.1996 அன்று சென்னை மியூஸிக் அகடமியில், ‘வானவில் பண்பாட்டு மையம்’ சார்பில் நடைபெற்ற பாரதி விழாவின் போது, நாங்கள் வழங்கவிருந்த பாரதி விருதை நேரில் பெற்றுக் கொள்ள, கலாம் டில்லியிலிருந்து வந்திருந்தார்.
அப்போது அவர் குடியரசுத் தலைவராகவில்லை.
அதே நிகழ்ச்சியில், ‘நமக்குத் தொழில் கவிதை’ என்ற வழக்கறிஞர் ரவியின் கட்டுரை நூலை வெளியிட்டுப் பேச, டாக்டர் ஒளவை நடராஜனும் வந்திருந்தார்.
அந்த நிகழ்ச்சி தொடங்குமுன் ஒளவை, என்னிடம், ‘கலாம் அவர்களுக்குப் பாரதி விருது வழங்க ஏன் முடிவு செய்தீர்கள்?” எனக் கேட்டார்.
1994இல் வானவில் பண்பாட்டு மையம் தோற்றுவிக்கப் பட்டபோது, ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் பாரதி இசைவிழா கொண்டாடுவது என்றும், அவ்விழாவில் பாரதி கண்ட ஏதேனும் ஒரு கனவு மெய்ப்படத் தொண்டாற்றியுள்ள பெருமக்களுக்கு ‘பாரதி விருது’ வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. ‘
சந்திர மண்டலத்து இயல் கண்டு தெளிவோம்’ என்று பாடியவன் பாரதி.
நம் நாடு அறிவியல் துறையில் மேம்பட்டுத் திகழ வேண்டும் என்பது அவனுடைய வேண்டுதல் என்பது அவனுடைய கனவுகளில் ஒன்று.
அதுதான், நம் நாட்டு அறிவியல் மேதை கலாமுக்குப் பாரதி விருது என்று வழங்குகிறோம் ஒளவையிடம் பதில் சொன்னேன்.
அதை உள்வாங்கிக் கொண்ட ஒளவை அவர்கள், அன்று அந்த மேடையில் பேசும் போது இது பற்றிக் குறிப்பிட்டு, ‘கனவு காண்பவன் எல்லாம் கவிஞனோ, கலைஞனோ, அறிஞனோ இல்லை; எந்தக் கனவு வலுவுள்ளதாக இருந்து, அக்கனவு மெய்ப்பட வேண்டி மற்றவர்களுக்குச் செயலூக்கம் தந்து தூண்டுகிறதோ, அப்படிப்பட்ட கனவு காண்பவனே கவிஞன், கலைஞன், அறிவியல் மேதை’ என்று மிகவும் நயம்படப் பேசினார். ”
அந்த விழா நிறைவு பெற்றதும் ஔவையின் பேச்சு, அதுவும் கனவு பற்றி அவர் குறிப்பிட்டது தம்மை உலுக்கிவிட்டதாகக் கலாம் தனி நிலையில் என்னிடம் கூறி நெகிழ்ந்தார்.” எனக் குறிப்பிட்டார்.
கலாம் அவர்கள் பிறகு நம் நாட்டின் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டதும்,
“கனவு என்பது தூக்கத்தில்
காண்பதில்லை,
தூங்கவிடாமல் துரத்துவது”
என்று பேசி இளைஞர்களைக் கனவு காணுங்கள் என்று தூண்டியதும் நாம் அனைவரும் அறிந்த செய்திகள்.
அப்படிக் கலாம் அவர்களைக் ‘கனவு, கனவு’ என்று பேச வைத்தது 08.12.1996 அன்று ஒளவை அவர்கள் பேச்சில் குறிப்பிட்ட செய்தியே என்பது என் உள்மனத்துக்குப் புரிந்தது என்று வழக்கறிஞர் ரவி தன் குறிப்பேட்டில் பதிவு செய்தது என் நெஞ்சில் பசுமரத்தாணி போல் பதிந்துவிட்டது.
ஒரு கருத்து, தழைத்து வளர ஒளவை அவர்கள் மூலம் விதை தூவப்பட்ட நிகழ்ச்சியில் தான் கலாமுடன் என் முதற்சந்திப்பு நிகழ்ந்தது என்றும் அதே ஒளவை நிகழ்ச்சியில், திருப்பத்துக்கும் இன்னொரு விதை தூவினார் என்றும் வழக்கறிஞர் ரவி குறிப்பிடுகிறார்.
வழக்கறிஞர் ரவியின் நூலான “நமக்குத் தொழில் கவிதை” வெளியிட்டுப் பேசிவிட்டு, நிகழ்ச்சி பாராட்டிப் முடிந்ததும் நூலாசிரியரிடம் ஔவை ஒரு கேள்வி கேட்டார்: “உன் நூலில், கவிதை என்பது எதோ ஒரு மாயம் போலச் சித்தரித்திருக்கிறாயே ராஜா, யதார்த்தத்தைப் பாட கவிதை வேண்டாமா, வெறும் கனவுலகிலேயே கவிஞர்கள் வாழ்ந்து விடலாமா?
கலாம் போன்ற அறிவியல் மேதைகளை வைத்துக் கொண்டு, இன்னும் பஞ்ச பூதங்கள் என்று நிலம், நீர் காற்று, நெருப்பு, ஆகாயம் கொண்டு, ஆகியவற்றைச் இன்னும் சொல்லிக் கனவிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோமே” என்பது தான் ஔவையின் கேள்வி.
அன்றிரவு அவரைத் தூங்கவிடாமல் தாக்கி அன்றிரவே அவர் எழுதத் தொடங்கிய நூல்தான், ‘இருபதாம் நூற்றாண்டு இயல்பியல் வரலாறு’.
ஓர் அறிவியல் மேதைக்குக் கனவு காணத் தூண்டிய உபதேசம் வழங்கிய குருவாகவும், கவிதைக் கனவிலேயே மிதந்து கொண்டிருந்த ஓர் இளைஞனை, அறிவியல் பாதை நோக்கித் திருப்பிய குருவாகவும் ஒரே நேரத்தில் முனைவர் ஒளவை நடராசன் அவர்கள் காலத்தின் கருவியாக அன்று செயல்பட்டதை என்னென்று சொல்வேன்.
அதேபோல், நான் சென்ற ஆண்டில் அமெரிக்க நாட்டுக்கு செல்லும் ஒரு வாய்ப்பு கிடைக்கப் பெற்றது.
யூஸ்டன் மாநிலத்தில் தமிழன்பர்களுடன் இந்திய நாட்டை சேர்ந்த மூத்த அயலுறவு அலுவலரை அவரின் அலுவலகத்தில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த பொழுது, அவர் தான் அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் பயின்றேன். அப்பொழுது, “உங்களுடைய தந்தையார் ஔவை நடராசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாணவனாகக் கலந்து கொண்ட போது, அவர் ஓர் அருமையான திருக்குறளை மேற்கோளாகச் சொன்னார்.
கருநாடக மாநிலத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் தமிழ் மீது எனக்குப் பற்று வளர்வதற்கு காரணமாக அமைந்தது” என்று தெரிவித்தார். அது
“புகழ்பெற்ற விண்வெளி வீரர்கள் ராகேஷ் சர்மா மற்றும் ரவி மல்லோத்ரா சென்னைக்கு வந்திருந்தார்கள்.
அதற்காக எழுதப்பட்ட திருக்குறள் தான் அன்று உங்கள் தந்தை சொன்ன அந்த குறள்.
அது என்ன தெரியுமா என்று எங்களை நோக்கிக் சொன்னார்: கேட்டவுடன், அவரே
‘ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு
வையத்தின்
வானம் நணிய துடைத்து.’ (குறள்-353)
எந்த விதமான ஐயமும் இல்லாமல் விழிப்போடும் தெளிவோடும் எல்லாக் கணக்குகளும் தீர்வாகி விட்டன என்ற தெளிவுநிலையில் நீங்கள் முற்படுவீர்களானால் வானம் கூட உங்களுக்குத் தொடும் தூரம் தான் என்று அன்று மேடையில் சொன்னது இன்றும் என் வாழ்வை செம்மாந்து நடை போட வைத்திருக்கிறது” நெகிழ்ந்தார். என்று கூறி
‘பத்மஸ்ரீ, ‘கலைமாமணி’, ‘தமிழ்ச் செம்மல்’, ‘வாழ்நாள் சாதனையாளர்’ என எண்ணற்ற பட்டங்கள் இவரைத் தேடி வந்தாலும், ஆசிரியர், அரசு செயலாளர், துணைவேந்தர் எனப் பல பதவிகள் வந்தாலும், பணிவையே தனது குணமாகக் கொண்டு, நிறைவாழ்வு வாழ்ந்து மறைந்தவர் ஔவை அவர்கள்.
ஒரு முறை அழைப்பிதழில் தங்கள் பெயருக்கு முன்னால் எந்தப் பட்டத்தைச் சூட்டலாம் என்று விழா அமைப்பாளர்கள் கேட்டார்கள் என்று அப்பாவின் உதவியாளர் பொன்னேரி பிரதாப் கேட்டபொழுது ‘ஔவை’ என்ற பட்டத்தை விட வேறொரு பட்டம் வேண்டுமா என்று கேட்டாராம்.
அப்போது தான் ‘சாயக் கண்டது காய்குலைச் செந்நெல்’ என்ற பள்ளுப் பாட்டு நினைவுக்கு வந்தது. அப்பா என்றும் எப்போதும் தனித்திருந்ததில்லை.
மாலை வேளைகளில் நண்பர்கள் கூட்டம் சூழ்ந்திருக்கும்.
அதேபோல அவரின் வாழ்நாள் நிறைவு நாள் வரை செவிலியர்கள் மருத்துவர்கள் என்று எப்போதும் உடன் இருந்தார்கள்.
ஏதேனும் தன் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று கேட்டாலே அப்பா “நிகழ்ந்தவற்றை நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்த நிலை எனக்கு ஏற்பட்டதில்லை” எனச் சொல்வார்.
பல காலம் அவரின் நினைவுகளை எப்படியாவது கேட்டறிந்து கொள்ள விழைவுடன் அவற்றைப் பதிவு செய்வதற்குப் அப்பாவின் வேளைகளில் பலமுறை முயன்றேன்.
நினைவுப்புறா சில சிறகடித்துப் பறந்தது, சில நேரம் தவிப்பிலும், சில நேரம் உணர்ச்சித் துடிப்பிலுமாக…
தாத்தா, பாட்டி, அம்மா, உடன் பிறந்தார், பயின்றவர்கள், பழகியவர்கள், பணியாற்றியவர்கள், பரிவு நிரம்பிய நண்பர்கள், காத்தவர்கள், நடத்தியவர்கள், கனவாக மிளிந்தவர்கள் கரம்பிடித்து எனப் பலர், அவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு நிலையில் அப்பாவின் உணர்வுகளோடு ஓட்டிய நிகழ்வைப் பரிமாற்றம் செய்து கொண்டதை நூலாக்கம் செய்து,
‘அருளுக்கு ஒளவை சொன்னது’ என்ற அரியதொரு தலைப்பில் படைத்தும் காட்டி அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினேன் என்ற பெருமிதம் எந்நாளும் என்னை நிறைவு கொள்ள வைத்துள்ளது.

Add a Comment