சமயப் பேரூரை ஓய்ந்தது !
எனக்குத் தெரிந்த ஆங்கிலம் பயின்ற என் தலைமுறையினர் பேராசிரியர் நிலையில் பக்தி நெறியில் ஆட்பட்டு தோய்ந்த தொண்டர்களாய் மாறினர் .
ஓய்வு பெற்றதும் ஆங்கில முதுகலை மாணவர் விரும்பிக் கற்றது அரவிந்தர் படைப்புக்களை – அமைதியும் ஆற்றலும் கொண்டு வாழ்ந்த தத்துவப் பேராசிரியர் அறிஞர் நாகராஜ் ராவ் அவர்களை நான் கண்டு பேசியதுண்டு .
அவர் திருமகளாரே திருமதி பிரேமா ( 12 .6. 1945 – 1 6.2021 ) .
அலைகடல்போல ஆங்கிலத்தில் பொழிவாற்றிய பெருமை பிரேமா அவர்களுக்கு இளம் பருவத்திலேயே வாய்த்தது .
நிறைவாழ்வில் சொல்மாலை வழங்கும் நாச்சியாராக ஆசிரம வாழ்க்கையில் அமைதி கண்டார் .
அன்னையார் திருமதி சீதா சிதம்பரம் அவர்களோடு நெருங்கிய தோழமை கொண்ட ஞானச்சுடராய் ஒளிர்ந்தார் .
என் அருமைத் திருமகள் சுதா நலங்கிள்ளி முதுகலை ஆங்கிலம் அவரிடம் பயின்ற சிறப்பைப் பாராட்டிக் குறிப்பிடுவார் .
கீதையுரை போலப் பாகவதப் பொழிவிலும் ஆயிரக்கணக்கானோர் அடங்கிய அவையினர் உணர்வைச் சிலிர்க்க வைத்தார் .
உறவுக்கும் ஒரு முடிவு –
துறவுக்கு அதே முடிவு தான் .
எவரும் அறியாப் பதம் பெற்ற அம்மையாரை நினைந்து போற்றுகிறேன் .
துயரத்தோடு
ஒளவை நடராசன்

Add a Comment