புலவர்க்கு அரசன் புரிசை நடராசன் !
பெருஞ்சொல் விளக்கப் பேருரையாளர் என்று நாடும் – ஏடும் கைகுவித்துப் போற்றிய புரிசை முருகேச முதலியாரின் பெயரன் புரிசையார் புலமைப்புதையலாக வாழ்ந்தார் .
வாரியார் சுவாமிகள் தனக்கு ஆசிரியர் என்று போற்றினார் .
புலமை வாய்ந்த மரபின் பெயரன் புரிசை நடராசன் பட்டிமண்டப மேடைகளிலும் – தனிப் பொழிவுகளிலும் அனைவரையும் கவர்ந்தார் .
திருமுறையார்வமும் – கம்பர் தோய்வும் பெற்றிருந்தார் .
புரிசையார் கம்பராமாயணக் கலக்கமும் தெளிவும் என்று கட்டுரைகள் வரைந்ததையும் மலேசியாவிலோ – இலங்கையிலோ – ஈழகேசரியிலோ வெளிவந்தன என்று என்னிடம் ஒருமுறை கூறினார் .
பேரொளியாகிய புரிசையார் பலமுறை சென்னை வந்த போது நான் ஈரோட்டுப் பெருமகனார் சென்னியப்ப முதலியார் இல்லத்தில் கண்டு அளவளாவுவோம் .
முதுமையைத் தொட வந்த அசைவில் மறைந்தார் என்பதைக் கேட்டுக் கலங்கினேன் !.
புரிசையார் மரபை எவர் இட்டு நிரப்புவார் !
ஒளவை நடராசன்

Add a Comment