இந்தியத் தலைநகரிலுள்ள தில்லியில் மாபெரும் வளாகமாக கண்ணையும் எண்ணங்களையும் கவரும் வகையில் அக்ஷர்தம் என்ற வனப்பான பெரு மாளிகையினை 08.05.2024 புதன்கிழமை கண்டு மகிழ்ந்து வியந்த கவினார்ந்த கருவூலத்தை பெருநிதிச் செல்வத்தால் எழுப்பப்பட்டதை என் உள்ளத்து உணர்வின் நளினங்களையெல்லாம் வெண்தாழை மடலில் செம்பஞ்சுக் குழம்பால் குழைத்து எழுதுவதைப் போல முகநூலில் வரைவதை எண்ணி மகிழ்கிறேன்.
இந்திய நாட்டின் நீண்ட இதிகாச மரபினுடைய எண்ணற்ற அழகுகளைக் கொண்ட பெருந்திட்டத் திருக்கோயிலினை காணும் போது மயில் ஒன்று தன் வண்ணமயமான தோகையெல்லாம் கண்ணாகி நின்றாற் போலவும் கலாபம் விரித்து ஆடிக் கொண்டிருக்கும் நினைவு தான் வரும்.

ஐயாயிரம் ஆண்டு பாரத நாட்டின் செல்நெறிகளை ஓங்கி ஒலிக்கும் வகையில் நதி போல நளினமாக அன்னப்படகில் குளிர் தரு நிழலில் படர்ந்து
14 நிமிடங்கள் பயணித்த பொழுது அக்காலத்தில் நடைபெற்ற செயன்மைகள் கண் எதிரில் தத்ரூபமாகக் காட்சியளித்தன.

100அடி உயரத் தூண்கள் 600 அடி நீளம் கொண்டு 300,000 பல வண்ணக் கற்களால் எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு கட்டப்பட்டதோடு ஆயிரத்து எழுபது நீளத்திற்கு
நூற்று நாற்பது எட்டு யானைச் சிற்பங்கள் நிறுவப்பட்டுள்ளன.
நடன நங்கையர்கள் ஆடும் நளின பாதரசங்களின் இனிய ஒலிகள் எங்கும் கிளர்வது போல மாபெரும் வண்ணச் சுடராக நீரூற்றின் அருமை பெருமையினைக் காண பத்தாயிரத்திற்கு மேற்பட்டோர் திரண்டு ஓரிடத்தில் குவிந்திருந்த போதிலும் குளிர்ந்த சூழலும், மழைச் சூல் கொண்ட வானமும் கண் நிறைந்த கலைக் காட்சியாக மிளிர்ந்த நீர் ஊற்றுக் காட்சியினைக் கண்டு கூவும் ஆரவாரக் குரல்கள் அக்ஷர்தம் பரப்பில் அங்கிங்கெனாதபடி எதிரொலித்தன.
நூறு ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட இந்த கலைவண்ணக் கற்கோயிலை பார்வையிட்ட மாலையில் நான்கு மணி நேரம் கடந்து சென்ற சுவடே தெரியாமல் மகிழ்ச்சியில் திளைத்ததை திரும்பிப் பார்க்கிறேன்.
Add a Comment