1f52bcab-b269-493c-9e6d-fae5189a61cf

நாட்டுடைமை என்னும் அறிவுத் திருப்பணி!

அறிவு உலகப் பொது என்பார்கள்.

ஆனால், அறிஞர்கள் உலகப்பொதுவல்ல என்பது உலக நடைமுறை.

ஓர் அறிஞரின் அறிவின் பேருழைப்பால் விளைகின்ற நற்கனிகளாம் நூற்செல்வங்கள்.

அவருக்குப் பின்னர் சிலர் கைகளில் மட்டும் சென்று தங்கிவிடாமல், நாட்டின் கடைக்கோடித் தமிழனுக்கும் சென்று சேர்க்கின்ற அரும்பணிக்குப் பெயரே நாட்டுடைமை என்பது.

மறைந்த படைப்பாளிகளின் பதிப்புரிமை அவர்களுடைய குடும்பத்தினர், மரபு வழியினர், பதிப்பகத்தார் ஆகியோரின் நிலையான சொத்தாகவே நிலவி வருகிறது.

அறிவென்பது பொதுவாயினும், மரபுரிமை ஒன்றால் மட்டும் அது மங்கிவிடக் கூடாதென்ற பெருநோக்கும் பெருந்தகைமையும் கொண்ட தமிழ்நாடு அரசால் விளைந்த அறிவுத் திருப்பணியே நாட்டுடைமை ஆகும்.

தொன்மைக் காலம்தொட்டே தமிழர் அறிவின்மீதும், கல்வியின்மீதும் எல்லையில்லா வேட்கையுடையவர்கள் என்பதை

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்,
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே (புறம்.183),

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்,
கற்றாரோடேனை யவர்
(குறள் 410)

பிச்சைபுகினும் கற்கை நன்றே (வெற்றி வேற்கை 5)

என்றெல்லாம் வரும் பாடலடிகள் உணர்த்துகின்றன.

இப்படி அறிவின் திரு மீது வேட்கையுடைய சமூகமே அறிவுப் பொதுவுடைமை பற்றி சிந்திக்கும் என்பது வரலாற்று உண்மையாகும்.

அதனால் தான், அறிவை நாட்டுடைமையாக்கும் அருந்திருப்பணி தமிழகத்தை ஆட்சி செய்வோர் உள்ளங்களில் மலர்ந்து வளர்ந்தது என்பது மறுக்க இயலாத உண்மையாகும்.

ஆங்கிலப் பெருங்கவிஞர் மில்டனின் பெயர்த்தி எலிசபெத் ஃபாஸ்டர் வறுமைச் சூழலில் வாடியுள்ளதாகவும். அவருக்கு நிதி வழங்க வேண்டுமென்ற கோரிக்கையினை பேரறிஞர் சாமுவேல் ஜான்சன் கையொப்பமிட்டு அச்சிட்டு பலரிடமும் வழங்கினார்.

மேலும், கவிஞர் மில்டன் எழுதிய கோமஸ் நாடகத்தினை தன்னுடைய மேலாளர் கேரிக்கிடம் தெரிவித்து அதில் வரப்பெறும் தொகையினையும் வழங்குமாறு கேட்டுக் கொண்டது ஆங்கில நாட்டின் பதிப்புலக வரலாறாகும்.

12.03.1949-இல் தமிழக சட்டப்பேரவையில் கல்வி அமைச்சர் தி.சு. அவினாசிலிங்கம் செட்டியார் மகாகவி பாரதி படைப்புகளின் பதிப்புரிமையை வைத்திருந்த ஏ.வி. மெய்யப்ப செட்டியாரிடமிருந்து விலை ஏதுமின்றி அரசுடைமையாக்கப்படும் என்று அறிவித்தார்.

தமிழறிஞர்களின் படைப்புகள் விலை மலிவாக கிடைத்திடும் வகையிலும், தமிழர்களின் கருத்துக் கருவூலங்கள் உலக மக்கள் அனைவரையும் சென்று சேர வேண்டும் என்ற உயரிய நோக்கிலும் அவர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவரவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை, சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர் தம் மரபுரிமையர்களுக்கு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

1984-ஆம் ஆண்டு சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானத்தின் ‘’விடுதலைப் போரில் தமிழகம்’’ என்னும் ஒரு நூல் மட்டும் நாட்டுடைமையாக்கப்பட்டு அதற்குப் பரிவுத் தொகையாக ரூ. 1 லட்சம் வழங்கப்பட்டு, பிறகு அனைத்து நூல்களும் 2006-ஆம் ஆண்டு நாட்டுடைமை செய்யப்பட்டு ரூ. 20 லட்சம் வழங்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் கருணாநிதியால் பாவேந்தர் பாரதிதாசனின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, அவர்தம் நூல்கள் நாட்டுடைமையாக்கம் செய்த நிகழ்வில் எந்தையார் ஔவை நடராசன் அப்பணியை தலைசிறந்த தமிழ்ப்பணி என்று உவகையுடன் பங்குகொண்டு ஆற்றிய நிகழ்வினை பல மேடைகளிலும் அவர் சொல்லி வந்ததை அனைவரும் அறிவர்.

தமது எளிமையான கருத்தாழமிக்க பாடல்களால் அழியாப் புகழ்பெற்ற காலஞ்சென்ற கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் இயற்றிய பாடல்கள், படைப்புகள் மற்றும் எழுத்து வடிவங்கள் அனைத்தும் 1995-ஆம் ஆண்டு நாட்டுடைமையாக்கப்பட்டு ரூ. 10 லட்சம் வழங்கப்பட்டது.

மொழிஞாயிறு எனத் தமிழ் நெஞ்சங்களால் புகழப்படுபவரும் தனித்தமிழ் இயக்கத் தவ நாயகரும், அரசின் அகரமுதலித் தயாரிப்பைத் தொடங்க துணை நின்றவருமான பழுத்த பைந்தமிழ்ப் பெருமகனார் தேவநேயப் பாவாணருடைய நூல்கள் 1996-ஆம் ஆண்டு நாட்டுடைமையாக்கப்பட்டு ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது.

நாட்டுடைமையாக்கத்துக்கு முதல்முறையாக ரூ. 75 லட்சம் வழங்கி பேரறிஞர் அண்ணாவின் அனைத்துப் படைப்புகள்,எழுத்து வடிவங்கள் குறித்த பதிப்புரிமைகள் அனைத்தையும் பெற்று தமிழ்நாடு அரசு நாட்டுடைமையாக்கியது.

அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதியால், 28.05.1998 அன்று சுதந்திர தினப் பொன்விழா (1997) ஆண்டினை முன்னிட்டு, மறைந்த தேசிய எழுத்தளார்கள் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, ப. ஜீவானந்தம், நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம், மூதறிஞர் இராஜாஜி, வ.உ. சிதம்பரனார், கவியோகி சுத்தானந்த பாரதியார், அகிலன், ஏ.எல்.கே. அய்யங்கார், வ.ரா., கா.மு.ஷெரீப், நாவலர் சோமசுந்தர பாரதியார், பரலி சு. நெல்லையப்பர், வ.வே.சு. ஐயர், காரைக்குடி சா. கணேசன் ஆகியோரைப் பெருமைப்படுத்தும் நோக்கில் அவர்கள் எழுதிய நூல்கள் அனைத்தையும் அரசுடைமையாக்கம் செய்ய அறிவிக்கப்பட்டது.

இதில் மூதறிஞர் இராஜாஜி, அகிலன் ஆகியோரின் நூல்களை நாட்டுடைமையாக்க அவர்களின் குடும்பத்தினர் விருப்பம் தெரிவிக்கவில்லை.

வாழும் காலத்தில் மருத்துவ சிகிச்சைக்காக சிறப்புநேர்வாக எழுத்தாளர்கள் ராஜம் கிருஷ்ணன், மணவை முஸ்தபா மற்றும் புலவர் செ.இராக, நெல்லை செ. திவான், விடுதலை இராஜேந்திரன், நா.மம்மது ஆகிய அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன.

ஜலகண்டபுரம் ப. கண்ணன், பண்டிதர் அயோத்திதாசர், ஆபிரகாம் பண்டிதர் ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு மரபுரிமையர்கள் சான்றாவணம் அளிக்கப்படாததால் பரிவுத் தொகை எதும் வழங்கப்படவில்லை என்பதும் குறிக்கத்தக்கது.

தமிழ்க்கடல் இராய. சொக்கலிங்கத்தின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு வாரிசுகள் ஒருவருமில்லாததால் பரிவுத் தொகை வழங்கப்படவில்லை.

விடுதலைக் காலம் முதலே நாட்டுடைமை என்னும் பெரும்பணி தடையற நடந்து வந்துள்ளது வரலாறு. வரலாற்றின் உச்சமாக விளங்கும் மு.கருணாநிதி ,தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற காலங்களில் 108 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமை செய்து, அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகையாக ரூ.7 கோடியே 76 லட்சம் வழங்கியுள்ளார் என்பது பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கதாகும்.

பேராசிரியர் க. அன்பழகள் மற்றும் முனைவர் நாவலர் இரா. நெடுஞ்செழியன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்பட்டு அவர்கள் எழுதிய அனைத்து நூல்களும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினால் நாட்டுடைமையாக்கம் செய்யப்பட்டன.

நாட்டுடைமை திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் 2024 வரை 179 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூ. 14.42 கோடி நூலுரிமைத் தொகை அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது என்பது ஏதோ நாட்டின் வரவு செலவுக்கணக்கன்று:
தமிழ்நாட்டின் அறிவு வரலாற்றின் சிறப்பு.

அறிஞர்களை மதிப்பதிலும், அவர்தம் அறிவினைப் பரப்பும் பணிகளிலும் தமிழ்ச் சமூகமும் அதன் முகவராக இலங்கும் தமிழ்நாடு அரசும் ஆற்றிவரும் தகைமைமிகு பணியாகும்.

நாட்டுடைமையாக்கம் செய்த படைப்புகளை வாரிக் கொடுத்தோரைக் காணும். போது,
விடுதலைத் தீ கொழிக்க, பொதுவுடைமை செழிக்க தமிழ்க்குலம் வளரப் பாடிய மகாகவிகளையும் சங்கத் தமிழ் முதலான நூல்களுக்கு உரை வரைந்து பெருத் தொண்டாற்றிய உரைப்புலமையாளர்களையும். கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் கல்விப் பணியாற்றிய பேராசிரியப் பெருந்தகைகளையும். பல்கலைக்கழகங்களை வழிநடத்திய துணைவேந்தர்களையும்
பள்ளிக்கல்விகூடப் பெறாவிட்டாலும், வாழ்க்கைக் கல்வியால் பேரறிவு பெற்றுவழி காட்டிய எழுத்தாளர்களையும், அரசுக்குத் துணை நின்ற அமைச்சர்களையும் காண்கிறோம்.

இந்த நாட்டுத் தொண்டின் மணிமுடியாக அமையும் தமிழ்த் திருப்பணியாக அமைவது முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய நூல்களின் நாட்டுடைமையாகும்.

அவர்தம் 14 அகவையிலிருந்து படைத்தளித்த அறிவுக் கொடைகள் ஏராளம்:

75 திரைப்படங்களுக்குக் கதை: திரைக்கதை வசனம்: 15 புதினங்கள்: 20 நாடகங்கள்: 15 சிறுகதைகள்: 210 கவிதைகள் படைத்துள்ளார்.

இவை தவிர நண்பனுக்கு உடன்பிறப்பே எனும் தலைப்புகளில் 7,000-க்கும் மேற்பட்ட கடிதங்களையும் எழுதியிருக்கிறார். கரிகாலன் என்னும் பெயரில் வினாக்களுக்கு விடை எழுதியிருக்கிறார்.

தாம் பணியாற்றிய இதழ்களில் சமத்துவத் தீ கொழிக்க எண்ணற்ற தலையங்கங்களைத் தீட்டியுள்ளார்.

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் படைப்புகள் அனைத்தும் 178 நூல்களாக வெளிவந்திருக்கின்றன.

திராவிடத்தில் பெரும்புலமையாளரும், எழுதித் தீராத இலக்கிய வேட்கையருமாகிய முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் அனைத்துப் படைப்புகளும் நூலுரிமைத் தொகை ஏதும் வழங்கப்படாமல் அண்மையில் நாட்டுடைமையாக்கம் செய்யப் பெற்றுள்ளது.

இதுபோன்ற நிகழ்வு வரலாற்றின் புத்தாக்கமாகும் புதிய வரலாற்றின் தொடக்கமும் ஆகும்.

கட்டுரையாளர்:
ஔவை அருள்
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *