முரசொலி
புதன் கிழமை
1.1.2025
பக்கம் 10
நின்ற சிலையும் ! வென்ற கலையும் !
தமிழகத்துச் சிற்பிகளின் கலைத்திறம் உலகமே கண்டு வியப்பதாகும் .
கல்லிலும், மண்ணிலும் ,மரத்திலும், சுதையிலும், சுவரிலும், பொன்னிலும் அவர்கள் செய்த அருங்கலைகள் எல்லாம் படிப்படியாக வளர்ந்து உன்னத நிலையைத் தொட்டு வெற்றிப் பெற்றதோடு, பிற நாட்டுச் சிற்பிகளின் கலைத்திறத்தையும் அந்நாளிலேயே அறிந்து தமிழகம் போற்றி ஊக்கமளித்தது.
மகதம், அவந்தி, மராட்டியம் ஆகிய பல நாட்டுக் கலைஞர்கள் தமிழகத்தில் பணிபுரிந்தனர்.
சிற்பங்களுக்குச் சிந்தை பறிகொடுத்து மகிழும் செந்தமிழ்ப்பெருமிதம் முத்தமிழ் அறிஞர் கலைஞரிடம் எப்போதும் ஒளிர்ந்தது .
சிற்பக் கலைஞரான கணபதி ஸ்தபதி, கலைஞரின் வெவ்வேறு தமிழ் உணர்வு சார்ந்த அடையாளங்களுக்கு நெருக்கமானவர்.
பூம்புகார் மன்றங்கள் – மாடங்கள் – மண்டபங்கள் வாயிலாகக் கண்ணகி கோட்டம், சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம், குமரி முனையில் கடல் அலைகளுக்கு இடையே நிற்கிற ஒற்றை விரலைப் போல நிமிர்ந்து இருக்கும் ஐயன் திருவள்ளுவர் சிலைக்கு வடிவம் அமைக்கப்பட்டது.
திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களைக் குறிக்கும் வகையில் 133 அடி உயரத்தில் குமரிமுனையில் சிலை அமைப்பதாக முடிவெடுக்கப்பட்டு, அறத்துப்பாலில் உள்ள 38 அதிகாரங்கள் மனத்தில் கொண்டு 38 அடி உயரத்தில் சிலையின் பீடம் அமைக்கப்பட்டு, அது அறப்பீடம் என்று அழைக்கப்பட்டது ,மீதி 95 அடி சிலையின் உயரம்.
சிலையின் முகம் மட்டும்
20 அடியாகும்.
ஒரு மாடிக் கட்டிட உயரமும் 150 டன் எடையும் கொண்டது இச்சிலையின் தலைப்பகுதியாகும்.
சிலையின் கட்டுமானத்திற்கு மொத்தம் 3,681 துண்டுக் கற்கள் பயன்படுத்தப்பட்டன.
அவைகளின் மொத்த எடை 7 ஆயிரம் டன் ஆகும்.
ஒவ்வொன்றும் 3 முதல் 8 டன் எடை கொண்ட கற்களைக் கடல் வழியாகப் படகின் மூலம் சிலை அமையவிருக்கும் பாறைக்கு எடுத்துச் சென்று, இரவு பகல் பாராது 500 சிற்பிகளைக் கொண்டு இடைவிடாது 372 நாள்களில் ஒன்பது கோடி செலவில் திரு. கணபதி ஸ்தபதி அவர்கள் இந்த
கற்காப்பிய சிற்பத்தைக் கட்டி முடித்தார்.
சிலையை வடிவமைக்கும் பணி நடைபெறும்போது, “சிலை நிற்குமோ நிற்காதோ” என்று சந்தேகமாகக் கேட்பவரிடம் எல்லாம் கணபதி ஸ்தபதி அவர்கள், “அலையும் மலையும் இருக்கும் வரை சிலை அசையாது இருக்கும், கவலைப்படாதீர்கள்” என்று கூறுவதுண்டு.
தஞ்சையில் பெருவுடையார் கோயிலின் 216 அடி உயரம் கொண்ட விமானக் கட்டுமானப் பணியின் போது, அதனைப் பார்வையிட்ட பலர், ‘விமானம் விழுந்து விடுமோ’ என்று அச்சப்பட்டதாகக் கூறுவதுண்டு.
அப்போது அதை நிர்மாணித்த குஞ்சரமல்லன் மாமன்னன் இராஜராஜப் பெருந்தச்சன் பெருமையாக, “விமானத்தின் நிழல் கூட விழாது” என்று கூறினாராம் .
அத்தகைய பெருமை வாய்ந்த குஞ்சரமல்லன் இராஜராஜப் பெருந்தச்சன் பரம்பரையில் வந்த திரு.கணபதி ஸ்தபதியும் அவ்வாறு கூறியதில் வியப்பேதும் இல்லையே !
தமிழகத்தையே உலுக்கிய ‘சுனாமி’ என்று அழைக்கப்படும் ஆழிப்பேரலையின் போதும் எவ்விதப் பாதிப்புமின்றி, கம்பீரமாக நிற்கிறார் திருவள்ளுவர்.
“பூம்புகார் எழில் மாடத்தை என் கருத்திற்கேற்ப அமைத்துத் தந்தவரும், பாஞ்சாலங்குறிச்சியில் இடிந்த கோட்டையை எழுப்பித் தருவதற்கு உடனிருந்து உதவியவரும், வள்ளுவர் கோட்டம் வையகம் புகழ்ந்திட, உருவாகிட, சிற்பி திரு ஆச்சார் அவர்களுடன் இணைந்து, கையில் உளி எடுத்தவரும், அண்ணா அறிவாலயம் முகப்பினையும் அழகுற அமைத்துத் தந்தவரும், சிற்பச் சித்தருமான கணபதி ஸ்தபதியார் அவர்கள் அல்லும் பகலும் அயராது பாடுபட்டு, நமது அய்யன் வள்ளுவனுக்குக் காலத்தால் அழியாத நினைவுச் சின்னத்தை என் இதயம் இறக்கைகள் பெற்றுப் பறந்து மகிழ்கிற அளவுக்கு, என் இரத்த நாளங்களில் இன்ப அருவி பாய்ந்து பரவுகின்ற அளவுக்கு, என் சுவாசக் கோசம் ஆனந்தப் பெருமூச்சால் நிரம்பிப் பிதுங்குகின்ற அளவுக்கு, வடித்தெடுத்து நிலைநாட்டிவிட்டார். வங்கமும், இந்துவும், அரபியும் என முக்கூடல் சங்கமிக்கும் குமரி முனைப் பாறை முற்றத்தில் அவருக்கும், அவருடன் சேர்ந்து, அற்புதச் சிலையைப் பொறுப்புடன் உருவாக்கியுள்ள சிற்பிகள் ,அலுவலர்கள், பணியாளர்கள், பொறியாளர்கள் அனைவருக்கும் தமிழகத்தின் பாராட்டுக்கள் .
இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்”
திருக்குறளை நினைவூட்டி, அதன்படி என் ஆய்வுக்கேற்ப முடித்தமைக்காக ஆயிரம், பதினாயிரம், லட்சோபலட்சம் நன்றி மலர்களைத் தூவுகின்றேன் " என்று வைர வரிகளால் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் எழுதினார்கள்.
133 அடி உயரங்கொண்ட திருவள்ளுவர் சிலைபோல கருத்தாழமுள்ள – முற்றிலும் கல்லால் ஆன கட்டுமான நுட்பங்கள் செறிந்த சிலையாக – எங்கணும் எவரும் கண்டதில்லை, கேட்டதுமில்லை, நினைத்துப் பார்த்ததுமில்லை.
வெற்றி கண்ட இப்பணி, சிற்பக்கலை மரபுக்கு மேலுமொரு அணியாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.
செவ்வனே முடிவுற்ற திருவள்ளுவர் சிலைப் பணி 01.01.2000 ஆம் ஆண்டு கலைஞர் அவர்களால் நாட்டுக்கும் – தமிழினத்துக்கும் வழங்கப்பட்டது .
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு, 25 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளதைத் தொடர்ந்து 30.12.2024 முதல் 1.1.2025 வரை மூன்று நாள்கள் தமிழ்நாடு அரசின் சார்பில் வெள்ளி விழா நிகழ்ச்சியை வெகு சிறப்பாக நடத்துகிறார்கள்.
மாபெரும் வரலாற்றுப் பொன்னேடு மலர்ந்த புனித நன்னாள் 25 ஆண்டுகளுக்குப்பின் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் இன்று மீண்டும் எழுச்சிக் கோலம் கொண்டு வெள்ளி விழா என்னும் முத்திரையோடு கன்னியாகுமரி மட்டும் அல்ல: தமிழ்நாடு முழுவதுமே விழாவின் வீச்சினை பரப்பி நிற்கிறது.
பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரைப் போட்டிகள்.
கல்லூரி மாணவர்களிடையே சோஷியல் மீடியாவில் ஷார்ட்ஸ் – ரீல்ஸ் – ஏ.ஐ மற்றும் டிஜிட்டல் தொழில் நுட்பங்கள் வாயிலாக திருக்குறளின் சிறப்பை உணர்த்தும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
அய்யன் திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட்டிருக்கின்ற இடங்கள் வரைபடத்தில் குறிக்கப்பட்டு, எல்லோரும் தெரிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அய்யன் திருவள்ளுவரின் திருவுருவச்சிலை அருகே சீரொளிக் காட்சி (3D Laser) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருக்கின்ற தமிழ் இணையக் கழக மையங்கள். தமிழ்ச் சங்கங்கள். பிற மாநிலங்களில் இருக்கும் தமிழ்ச் சங்கங்கள். புது டெல்லியில் இருக்கும் தமிழ்நாடு இல்லம் ஆகியவற்றில் யூடியூப் மூலம் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றது.
வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு தமிழ் இணையக் கழக மையங்கள் மூலமாகத் திருக்குறளின் பெருமைகள் குறித்த போட்டிகள் நடத்தப்படுகின்றன.
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட நூலகங்களிலும், இன்றைய விழா நாளில் திருவள்ளுவர் புகைப்படம் வைக்கப்பட்டு திருக்குறளின் பெருமைகளை உணர்த்துகின்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுத் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது.
திருக்குறள் விளக்க உரைகள் மற்றும் திருக்குறள் தொடர்பான புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
டிசம்பர் 25 முதல் 30 வரை மாவட்ட அளவில் திருக்குறள் தொடர்பான கருத்தரங்கம், பேச்சரங்கம் முதலியவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
37 கோடி ரூபாய் செலவில் அய்யன் திருவள்ளுவர் சிலையையும் விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் கண்ணாடி இழை பாலம் கட்டப்பட்டு அதனை மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கிறார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திருக்குறள் நெறிபரப்பும் 25 தகைமையாளர்களுக்குப் பரிசுகள் வழங்குவதும்
கலைமாமணி சொல்வேந்தர் திரு.சுகி.சிவம் அவர்கள் தலைமையில் “திருக்குறளால் அதிக நன்மை தனிமனிதருக்கே சமுதாயத்திற்கே எனும் தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றமும்,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் அய்யன் திருவள்ளுவர் தோரணவாயிலுக்கு அடிக்கல் நாட்டி; திருவுருவச் சிலை வெள்ளிவிழாச் சிறப்பு மலர் வெளியிடுவதோடு திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவியர்க்குப் பரிசுகள் வழங்கப்படவிருக்கிறது.
சமகாலத்தில் வள்ளுவர். திருக்குறளும் சங்க இலக்கியமும். வள்ளுவம் போற்றும் சமய நல்லிணக்கம்.
திருக்குறள் போற்றும் மகளிர் மாண்பு.
வள்ளுவம் காட்டும் அறம். திருக்குறளில் இசை நுணுக்கம் என்கிற தலைப்பில் கருத்தரங்கும் நடைபெறவள்ளது.
தமிழகத்துக்கு நிலையான நெடும் புகழ் காட்டும் வரலாறு நின்ற சிலையாகவும் வென்ற கலையாகவும் என்றும் விளங்கி வருவது தமிழினத்தின் நற்பேறாகும்.
Add a Comment